10-ம் வகுப்பு மாணவனை அரை நிர்வாணப்படுத்தி ராகிங்: சென்னை மத்திய அரசு பள்ளியில் நடந்த சோகம்

10-ம் வகுப்பு மாணவனை அரை நிர்வாணப்படுத்தி ராகிங்: சென்னை மத்திய அரசு பள்ளியில் நடந்த சோகம்

சென்னை மத்திய அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவனை அரை நிர்வாணப்படுத்தி அடித்து ராகிங்கில் ஈடுபட்ட சக மாணவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியைச் சேர்ந்தவர் சாம்சன் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). கூத்து கட்டும் தொழில் செய்து வரும் இவர் நான்கு மாதங்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதிக்கு குடியேறினார். இவரது 15 வயது மகன் அதே பகுதியில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான பள்ளியில் (கேந்திரிய வித்யாலயா) 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

தனது சொந்த ஊரான புதுச்சேரியில் தங்கி படித்து படித்து வந்த சிறுவன் கடந்த 4 மாதத்திற்கு முன்பு இப்பள்ளியில் சேர்ந்துள்ளார். இவரை பள்ளியில் சக மாணவர்கள், அவரது மொழி மற்றும் அவரது தந்தையின் தொழிலை வைத்து கிண்டல் செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் சிறுவனுக்கும், சக மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது சக மாணவர்கள் அவரைத் தாக்கியுள்ளனர். இது குறித்து சிறுவன் தனது தந்தையுடம் கூறியுள்ளார். இதையடுத்து அவரது தந்தை ஆசிரியர்களிடம் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் ஆசிரியர்கள் விசாரணை நடத்தி சிறுவனைத் தாக்கிய சக மாணவர்களைக் கண்டித்து எச்சரித்து அனுப்பினர்.

இந்நிலையில் ஆசிரியர்களிடம் புகார் செய்ததால் ஆத்திரமடைந்த 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நவ.21-ம் தேதி பள்ளி முடிந்து வெளியே வந்த சிறுவனை வழிமறித்து தாக்கி அரை நிர்வாணமாக்கியுள்ளனர். அத்துடன் அவரது அந்தரங்க உறுப்பைத் தாக்கி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுவனின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெற்றோர் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேலும் சிறுவன் பள்ளியில் தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை சாம்சன், சென்னை கே.கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் சிறுவனை ராகிங் செய்து, பாலியல் துன்புறுத்திய சக மாணவர்களைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in