அனுமன் ஜெயந்தி கோலாகலம்: 1,00,008 வடைமாலை அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்

வடை மாலை அலங்காரத்தில் ஆஞ்சநேயர்
வடை மாலை அலங்காரத்தில் ஆஞ்சநேயர்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா இன்று  கோலாகலமாக தொடங்கியது.  இதை முன்னிட்டு சுவாமிக்கு ஒரு லட்சத்து 8 வடை மாலை அலங்காரம்  மற்றும் சிறப்பு அபிஷேகம்  நடைபெற்றது. 

நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள  ஆஞ்சநேயர் கோயில் மிகவும் பிரசித்தம் பெற்றது. இந்த  கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் அமாவாசை தினத்தில் வரும் மூல நட்சத்திரத்தில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெறு வழக்கம்.  இந்த ஆண்டுக்கான அனுமன் ஜெயந்தி இன்று காலை  கோலாகலமாக தொடங்கியது. 

இதையொட்டி காலை 5 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து  1,00,008 வடைகளாலான மாலை அலங்காரம் நடைபெற்றது.  இதனை அதிகாலை  நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தரிசித்து வழிபட்டனர்.

இதனைத்தொடர்ந்து காலை 11 மணி முதல் நல்லெண்ணெய், சீயக்காய்தூள், பஞ்சாமிர்தம், பால், தயிர், மஞ்சள்,  சந்தனத்தால் சிறப்பு அபிஷேகமும், பிற்பகல் 1 மணிக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற உள்ளது.

இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உள்பட பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். 

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் அமைதியாக வழிபட்டுச் செல்ல ஏற்பாடுகள்  செய்யப் பட்டுள்ளது.  போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நாமக்கல் நகரில் வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in