1030 உதவி ஆய்வாளர்களுக்கு விரைவில் பதவி உயர்வு: டி.ஜி.பி சைலேந்திரபாபு தகவல்!

சைலேந்திரபாபு
சைலேந்திரபாபு

தமிழக காவல் துறையில் பணியாற்றும் 1030 உதவி ஆய்வாளர்களுக்கு விரைவில் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக டி.ஜி.பி சைலேந்திரபாபு கோவையில் தெரிவித்தார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு , ‘’தமிழ்நாட்டில் 1352 காவல் நிலையங்கள் இருந்தது. அதில் 202 மகளிர் காவல் நிலையங்கள் மட்டும் தான் இருந்தது. முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் காவல் நிலையங்கள் அதிகரிக்கப்பட்டு 1574 காவல் நிலையங்கள் தற்போது உள்ளன. போத்தனூர் பகுதியில் திறக்கப்பட்ட மகளிர் காவல் நிலையத்தில் 8 காவலர்கள் பொறுப்பேற்க உள்ளனர்.

கோவை மாநகரில் அக்டோபர் மாதம் நடைபெற்ற சம்பவத்தை அடுத்து கோவை மாநகர காவல்துறையை விரிவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தற்போது காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. துடியலூர் மற்றும் வடவள்ளி காவல் நிலையங்கள் தற்போது கோவை மாநகர காவல் துறையுடன் இணைய உள்ளது. இதன் காரணமாக கோவை மாநகரில் 15 காவல் நிலையங்கள் இருந்த நிலையில், அது தற்போது 20 காவல் நிலையங்களாக அதிகரித்துள்ளது. 

இணையவழி குற்றங்களுக்கு 1930 எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும். இணைய வழி குற்றங்களை பொறுத்தவரை அதிக பணம் முதலீடு செய்யும் வரை காத்திருந்து அதிக பணம் சேர்க்க வேண்டும் என ஆசைக்காட்டி பிறகு ஏமாற்றுவார்கள். நீங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தால் உடனடியாக 1930 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும். இக்குற்றங்களில் உள்ளூர் அல்லது இந்தியாவிற்குள் உள்ள குற்றவாளிகளை எளிதாக பிடித்து விட முடியும். வெளிநாடு குற்றவாளிகளை பிடிப்பது சற்று சிரமமாக உள்ளது. 

காவல்துறை சார்பில் மக்களுக்காக காவல் உதவி என்ற ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 66 வகையான உதவிகளை பெற முடியும், ஆனால் இந்த செயலியை பலரும் பதிவிறக்கம் செய்யவில்லை. இது ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் செயலிகளாவும் உள்ளது. இது மிகவும் பயனுள்ள செயலியாக இருக்கும். கரூர் மாவட்டத்தில் வருமானவரித்துறை சோதனையின் போது அதிகாரிகளின் வாகனங்கள் சேதப்படுத்தியது தொடர்பாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விளக்கம் அளித்து விட்டார். 130 இன்ஸ்பெக்டர்களுக்கு ஓரிரு மாதங்களில் பதவி உயர்வு வழங்கப்படும்.1030 உதவிஆய்வாளர்களுக்கு விரைவில் பதவி உயர்வு வழங்கப்படும்’’ என தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in