செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1,000 கனஅடி நீர் வெளியேற்றம்: கரையோர மக்களுக்கு அலர்ட்

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 1,000 கனஅடி நீர் வெளியேற்றம்: கரையோர மக்களுக்கு அலர்ட்

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கரையோர மக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் செம்பரம்பாக்கம் ஏரியும் ஒன்று. தற்போது பெய்து வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஏரிக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அணையில் இருந்து இன்று காலை வினாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட்டது.

ஏரியில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் வெளியேற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரி திடீரென திறக்கப்பட்டதால் சென்னையில் முக்கிய பகுதிகள் நீரில் மூழ்கியது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தற்போது அந்த நிலைமை ஏற்படாத வண்ணம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பின்னரே செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டு வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடியாகும். தற்போது ஏரியின் நீர்மட்டம் 23 அடியாக உயர்ந்து இருப்பதால் படிப்படியாக நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in