நூறாண்டு பழமையான வீடு இடிந்து மூதாட்டி பலி: 15-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம்

நூறாண்டு பழமையான வீடு இடிந்து மூதாட்டி பலி: 15-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம்

சென்னையில் நூறாண்டுகள் பழமையான வீடு இடிந்து விழுந்து மூதாட்டி பலியானார். மேலும் மற்றொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன.

சென்னை சௌகார்பேட்டை மின்ட் தெருவில் சத்ரதாஸ் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. நூறாண்டுகள் பழமையான இந்த வீட்டின் முதல் தளம் காலியாகவும், தரைத்தளத்தில் செல்போன் ரீசார்ஜ், மருந்தகம் உள்ளிட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று மாலை வீட்டின் முதல் தளம் இடிந்து விழுந்தது. இதில் மருந்து கடையில் மருந்து வாங்க வந்த பெண் ஒருவர் இடர்பாடுகளில் சிக்கி சம்பவயிடத்திலேயே பலியானார்.

மேலும் அவ்வழியாக நடந்து சென்ற ஆண் ஒருவர் படுகாயமடைந்தார். இதனைப் பார்தது அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனே தீயணைப்பு மற்றும் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் யானைக்கவுனி போலீஸார் மற்றும், வண்ணாரப்பேட்டை, எஸ்பிளனேடு ஆகிய பகுதியில் இருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் இடர்பாடுகளில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் படுகாயமடைந்த வாலிபரை மீட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் இவ்விபத்து குறித்து யானைகவுனி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண் சௌகார்பேட்டை ஏகாம்பரேஸ்வரர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த கங்குதேவி(60) என்பதும், மருந்து வாங்க வந்த போது அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வாலிபர் பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சங்கர்(36) என்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளை அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இவ்விபத்தில் 15-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு புளியந்தோப்பில் இதேபோல் வீட்டின் பால்கனி இடிந்து பெண் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in