அமைச்சர்களுக்கு இலக்கு நிர்ணயித்த ஆதித்யநாத்!

அமைச்சர்களுக்கு இலக்கு நிர்ணயித்த ஆதித்யநாத்!

உத்தர பிரதேசத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தன்னுடைய அமைச்சரவை சகாக்கள் அடுத்த 100 நாட்களில் செய்ய வேண்டிய வேலைகளை இலக்காகத் தொகுத்து வழங்கியிருக்கிறார். முதல்முறையாக அமைச்சர்களுக்கான 100 நாள் வேலைத்திட்டமாக இதைக் கேள்விப்படுகிறோம்.

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, சாலை - பாலங்கள்-குடிநீர் - மின்சார வசதி - பள்ளிக்கூடங்கள் - மருத்துவமனைகள்-தகவல் தொடர்பு வசதிகள் - சந்தைகள் - போக்குவரத்து வசதி-பொதுவிநியோகத் திட்டம் - பாதுகாக்கப்பட்ட குடிநீர் - உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளை முன்னுரிமை தந்து முடிப்பது அல்லது முடிப்பதற்கான தொடர் மேற்பார்வைப் பணிகளைச் செய்வது, உத்தர பிரதேசத்தின் அனைத்துத் துறைகளிலும் வெளி முதலீடுகளை அதிகம் ஈர்ப்பது என்பவை பொதுவான இலக்குகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அனைத்து அமைச்சர்களும் அவரவர் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கலந்து அடுத்த 100 நாட்களில் செய்ய வேண்டிய வேலைகளைத் திட்டமிட வேண்டும். அவற்றை முடிப்பதற்குக் கடுமையாக உழைக்க வேண்டும். அடுத்த 100 நாட்களில் என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறோம் என்று முதல்வரிடம் முதலில் செயல்திட்ட அறிக்கையாகத் தர வேண்டும்.

அடுத்த மூன்று மாதங்களுக்குள் உத்தர பிரதேசத்தில் மிகப் பெரிய தொழில் முதலீட்டு மாநாட்டை நடத்த முதலமைச்சர் திட்டமிட்டிருக்கிறார். இந்தியாவின் முன்னணித் தொழில் நிறுவனங்களையும் வெளிநாட்டு நிறுவனங்களையும் அழைத்து நிலம், நீர், சாலை வசதி, மின்சாரம், அடித்தளக் கட்டமைப்பு ஆகியவற்றை அளிக்கத் தயார் என்று அறிவிக்கப் போகிறார். தொழிலதிபர்களை ஈர்க்க, சட்டம்-ஒழுங்கு முறையாக பாதுகாக்கப்படும் என்ற வாக்குறுதியை அளிக்கவிருக்கிறார். 2017 முதல் இதுவரையில் உத்தர பிரதேசம் மொத்தம் 4 லட்சம் கோடி ரூபாயை முதலீடாக ஈர்த்திருக்கிறது.

அமைச்சரவைக் கூட்டம்

கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 5) முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 100 நாள் வேலைத்திட்டம் இறுதி செய்யப்பட்டது. இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. அயோத்தி நகரில் சட்டம்- ஒழுங்கை மேம்படுத்த முதலமைச்சர் தலைமையில் சிறப்பு பணிக்குழு நியமிக்கப்படவுள்ளது. உள் துறைக்கும் முதல்வரே பொறுப்பு.

மாநிலத்தில் உள்ள 183 பேருந்து நிலையங்களையும் புதுப்பித்து, மேம்படுத்தி மக்களுக்கான வசதிகளை அதிகப்படுத்த போக்குவரத்துத் துறை திட்டம் தீட்டியிருக்கிறது. புதிய மதுபான ஆலையைத் திறக்குமாறு மாநில கலால்துறைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. இது மாநில அரசின் வருவாயைப் பெருக்க உதவும்.

மாநிலத்தில் புதிதாக 84 கலை – அறிவியல் கல்லூரிகளைத் தொடங்க மாநில கல்வித்துறை உத்தேசித்திருக்கிறது. இந்தக் கல்லூரிகளில் வகுப்பறைகள் நவீன தகவல் தொடர்பு, கணினி இணைப்பு, வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் ஸ்மார்ட் வகுப்பறைகளாக அமைக்கப்படும். டிஜிட்டல் தொழில்நுட்பம் கல்வித்துறையில் அதிகம் இனி பயன்படுத்தப்படும்.

அமைச்சர்கள் தங்களுடைய துறைப் பணிகள் தொடர்பாக ஆய்வுகளுக்குச் செல்வதை ஊடகங்களுக்குத் தெரிவிக்காமல், அதிக விளம்பரம் இல்லாமல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுகாதாரத் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் துணை முதலமைச்சர் பிரஜேஷ் பாடக் சமீபத்தில் லக்னௌவில் அரசு மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அங்குள்ள வசதிகளை ஆராய்ந்தார். அதை அனைத்து ஊடகங்களும் புகைப்படங்கள், காணொலிகளுடன் பெரிதாக வெளியிட்டன. இதைத் தவிர்க்குமாறு முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.

அமைச்சர்களின் அரசு இல்லங்களைப் புதுப்பிப்பது, பழுதுபார்ப்பது, அறைக்கலன்கள் வாங்குவது ஆகியவற்றை மிகுந்த கட்டுப்பாட்டுடன் செய்யுமாறு முதல்வர் அறிவுறுத்தினார். அவசியப்பட்டதை மட்டும் செய்துகொள்ளுங்கள் வசதிகளைப் பெருக்கிக்கொள்ளாதீர்கள் என்று ஆலோசனை வழங்கினார். அமைச்சர்களின் தனி உதவியாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்களை அவரவர்களே தேர்வு செய்துகொள்ள முடியாது, அது அரசால் கவனித்துக்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசில் பிரதமர் மோடி இந்த முறையைத்தான் கடைப்பிடிக்கிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரட்டிக்கொண்டேயிருக்கிறார் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமீபத்திய ஊடகப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி முறையை வெற்றிகரமாக நடத்திக் காட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இனி எந்த மாநிலத்திலும் எந்தக் கட்சி ஆட்சி நடத்தினாலும் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியாக வேண்டும். அமைச்சர்கள் உழைத்தாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டிருப்பது இந்திய ஜனநாயக வரலாற்றில் முக்கியமான திருப்புமுனை. இதற்கு அதிகார வர்க்கமும் முழு மனதுடன் ஒத்துழைத்தால் வளர்ச்சிப் பணிகள் வேகம் பெறும், மக்களுடைய பிரச்சினைகள் தணியும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in