
புதிய குடும்ப அட்டை வழங்குவதற்கு ரூபாய் 500 லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளருக்கு பத்தாண்டு சிறைத் தண்டனையும், ரூபாய் 6000 அபராதமும் விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பச்சமுத்து (45). இவர் கடந்த 2009-ம் ஆண்டு புதிதாக குடும்ப அட்டை பெறுவதற்கு வட்ட வழங்கல் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இலுப்பூர் வட்ட வழங்க அலுவலகத்தில் பணியாற்றும் வருவாய் ஆய்வாளர் சுப்பையா இவரது குடும்ப அட்டைக்கு பரிந்துரை செய்ய வேண்டுமானால் 500 ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பச்சமுத்து இதுபற்றி புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய நோட்டை ஆய்வாளர் சுப்பையாவிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் சுப்பையாவை கைது செய்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயக்குமாரி ஜெமிரத்னா லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் சுப்பையாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூபாய் 6000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
500 ரூபாய் லஞ்சம் பெற்றவருக்கு அளிக்கப்பட்ட இந்த அதிகபட்ச தண்டனை அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.