பள்ளியில் 'தல யாரு’ என போட்டி; இருதரப்பாக மோதிக்கொண்ட மாணவிகள்: 10 பேர் அதிரடியாக சஸ்பெண்ட்

பள்ளியில் 'தல யாரு’ என போட்டி; இருதரப்பாக மோதிக்கொண்ட மாணவிகள்: 10 பேர்  அதிரடியாக சஸ்பெண்ட்

பள்ளி வளாகத்தில் யாரு பெரிய ஆளு என ஏற்பட்ட போட்டியில் சென்னையில் அரசு பள்ளி மாணவிகள் கடும் மோதலில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 10 மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் புல்லா அவென்யூ பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அமைந்தக்கரை, கீழ்ப்பாக்கம், டிபி சத்திரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த பிளஸ் 2 மாணவிகளில் சிலர் பள்ளி வளாகத்தில் ஒருவரை ஒருவர் அடித்து தாக்கிக் கொண்டனர். பின்னர் இரு கோஷ்டிகளாக பிரிந்து தாக்கிக்கொண்டதால் அப்பகுதியே கலவரம் போல் காட்சியளித்தது.
இதனைப் பார்த்து ஓடி வந்த ஆசிரியர்கள் மாணவிகளை சமாதனப்படுத்தி கூட்டத்தை கலைத்தனர். பின்னர் மாணவிகள் மோதல் குறித்து ஆசிரியர்கள் விசாரணை நடத்தினர்.

அப்போது, டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த மாணவிகளுக்கும், கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மாணவிகளுக்கும் இடையே தல யாரு, லீடர் யாரு என்பது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அது முற்றி கைகலப்பாக மாறி மோதல் உருவானது தெரியவந்தது.

இதனையடுத்து தலைமை ஆசிரியர் சின்னவெள்ளதாய் மோதலில் ஈடுபட்ட மாணவிகளின் பெற்றோரை வரவழைத்து கண்டித்துள்ளார். மேலும் கலவர சம்பவத்தில் ஈடுபட்ட மாணவிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் கொடுக்க உத்தரவிட்டார். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார், தலைமை ஆசிரியரிடம் பேச்சுவாரத்தை நடத்தினர். மோதலில் ஈடுபட்ட மாணவிகள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை அளிக்குமாறு கேட்டு கொண்டனர். அதன்பேரில் பள்ளியில் மோதல் சம்பவத்தில் ஈடுபட்ட 10 மாணவிகளை 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்து தலைமை ஆசிரியர் உத்தரவிட்டார்.

பள்ளி வளாகத்தில் தல யாரு என்ற போட்டியில் மாணவிகள் மோதிக்கொண்ட சம்பவம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in