`உங்களுக்கு பரிசு விழுந்திருக்கு, 10 லட்சம் அனுப்புங்கள்'- குமரி பெண்ணை ஏமாற்றிய உபி கும்பல் கைது

`உங்களுக்கு பரிசு விழுந்திருக்கு, 10 லட்சம் அனுப்புங்கள்'- குமரி பெண்ணை ஏமாற்றிய உபி கும்பல் கைது

உங்கள் எண்ணிற்கு பரிசு விழுந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து பரிசுப்பொருள்கள் அனுப்பிவைக்கிறோம் எனச் சொல்லி பெண்ணிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றிய வட மாநில இளைஞர்களை குமரி சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.

செல்போனில் பரிசு விழுந்திருப்பதாக வரும் அழைப்புகளை நம்ப வேண்டாம் என காவல்துறை சார்பில் மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஊட்டப்ப்பட்டு வருகிறது. இருந்தும் சமூகவலைதளங்களின் மூலம் ஏமாற்றுவோரும் அதிகளவில் உள்ளனர். அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டம், மருதங்கோடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஒரு போன் கால் வந்தது. அதில் பேசியவர்கள் வெளிநாட்டில் இருந்து பேசுகிறோம். உங்களின் செல்போன் எண்ணிற்கு பரிசு விழுந்துள்ளது.

உங்களுக்கு அதற்காக வெளிநாட்டில் இருந்து பரிசுகள் அனுப்புகிறோம். அதற்காக சுங்கக்கட்டணம், வருமான வரி ஆகியவற்றிற்கான தொகையை மட்டும் நீங்கள் செலுத்த வேண்டும் என பல தவணைகளாக 9,49,000 ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் குமரி மாவட்ட எஸ்.பி ஹரிகிரன் பிரசாத்திடம் புகார் கொடுத்தார். அவர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க சைபர் க்ரைம் போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து குமரி மாவட்ட சைபர் க்ரைம் கூடுதல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் மேற்பார்வையில் சைபர் க்ரைம் போலீஸார் நடத்திய விசாரணையில் மோசடியில் ஈடுபட்டது உத்தர பிரதேச மாநிலம், எட்டவா மாவட்டத்தைச் சேர்ந்த சதீஸ்குமார்(23) மற்றும் அவரது நண்பர் அமான்கான்(19) என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து உத்தர பிரதேசத்திற்கே சென்று இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். உத்தர பிரதேசம் வரை சென்று குற்றவாளிகளைப் பிடித்த குமரி சைபர் க்ரைம் போலீஸாரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in