
சென்னையில் மளிகைக் கடை உரிமையாளரின் செல்போனை ஹேக் செய்து ஆன்லைன் மூலம் வங்கிக் கணக்கில் இருந்து 10 லட்ச ரூபாய் நூதனமாக திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அமைந்தக்கரை லட்சுமி டாக்கீஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன்(50). இவர் கீழ்பாக்கம் புல்லா அவென்யூ பகுதியில் மளிகைக்கடை(ஹோல்செல்) நடத்தி வருகிறார்.
இவர் இன்டஸ் வங்கியில் வங்கி கணக்கு வைத்துள்ளார். நேற்று முன்தினம் இவரது செல்போன் எண்ணுக்கு ஓடிபி் ஒன்று வந்துள்ளது. பின்னர் சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கில் இருந்த இரண்டு தவணையாக 5 லட்சம் ரூபாய் எடுத்துள்ளதாக இரண்டு குறுஞ்செய்தி வந்தது.
தனது வங்கிக் கணக்கில் இருந்து 10 லட்ச ரூபாய் எடுத்ததாக வந்த குறுஞ்செய்தியை கண்டு அதிர்ச்சியடைந்த ஆனந்தன் உடனே இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பதறிப்போன ஆனந்தன் அமைந்தக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் சைபர்கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மளிகைக்கடை உரிமையாளர் வங்கிக்கணக்கில் இருந்து 10 லட்ச ரூபாய் திருடப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.