பிஹாரில் 10 பேரைக்கொன்ற ஆட்கொல்லி புலி சுட்டுக்கொலை

பிஹாரில் 10 பேரைக்கொன்ற ஆட்கொல்லி புலி சுட்டுக்கொலை

பிஹாரில் 10 பேரைக் கொன்ற ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் இன்று சுட்டுக்கொன்றனர்.

பிஹார் மாநிலம், மேற்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள பகுதி பகாஹா. இப்பகுதியில் சுற்றித்திரிந்த ஆட்கொல்லி புலியால் அன்றாடம் மக்கள் பீதியில் இருந்தனர். கடந்த 5-ம் தேதி சிங்கி கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியைத் தாக்கிக் கொன்றது. கடந்த 6-ம் தேதி இரவு, ஹர்ஹியா சாரே பகுதியில் பெண்ணைக் கொன்ற புலி, அந்த பெண்ணின் உடலையும் இழுத்துச் சென்றது. இதனால் அச்சமடைந்த பகாஹா பகுதி மக்கள் புலியைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

புலி நடமாட்டம் காரணமாக வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவித்து வந்தனர். இந்த நிலையில், கோவர்தன் காவல் நிலையம் அருகே, பாலுவா கிராமத்தில், ஒரு வீட்டிற்குள் புகுந்த புலி, தாய், மகனை அடித்துக் கொன்றது.

கடந்த இரண்டு மாதங்களில் 10 பேரைக் கொன்ற ஆட்கொல்லி புலியைச் சுட்டுக்கொல்ல வனத்துறை அதிகாரி பிரபாத் குப்தா உத்தரவிட்டார். இதையடுத்து 400-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பகாரா பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பகாஹா நகரில் உள்ள கரும்பு தோட்டத்தில் பதுங்கியிருந்த புலியை வனத்துறையினர் இன்று சுட்டுக் கொன்றனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in