சிறுமியைக் கேலி செய்த கும்பல்… தட்டிக்கேட்டவர்களின் மண்டை உடைப்பு: பழநி அருகே பரபரப்பு

காயமடைந்த நரிக்குறவர் இன மக்கள்
காயமடைந்த நரிக்குறவர் இன மக்கள்

பழநி அருகே சிறுமியைக் கேலி செய்த இளைஞர்களைக் கண்டித்ததால் ஆவேசமடைந்த இளைஞர்கள்‌ கற்களை வீசி தாக்கியதில் 10-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் மண்டை உடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியை அடுத்துள்ளது‌ பெத்தநாயக்கன்பட்டி ஊராட்சி. இங்கு 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வரும் குடியிருப்பு உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு அக்குடியிருப்பில் வசித்து வரும் 13 வயது சிறுமியைக் கேலி செய்ததாக கூறப்படுகிறது. கேலி செய்த‌ இளைஞர்களைச் சிறுமியின் உறவினர்கள் சிலர் கண்டித்துள்ளனர்.

பிரச்சினையில் ஈடுபட்ட இளைஞர்கள்
பிரச்சினையில் ஈடுபட்ட இளைஞர்கள்

அப்போது, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதனால் ஆவேசமடைந்த இளைஞர்கள்‌ கண்மூடித்தனமாக கற்களை எடுத்து வீசியதில் நரிக்குறவர்‌ இனத்தைச் சேர்ந்த பெண்கள்‌ மற்றும் ஆண்கள் என 10-க்கும் மேற்பட்டோரின் மண்டை உடைந்தது. மேலும், சிலரின் முகங்களில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, காயமடைந்த அனைவரும் பழநி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தகவலறிந்து, வந்த பழநி தாலுகா காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியைச் சேர்ந்த பெண் துப்புரவு பணியாளர் ஒருவர் மர்மமான முறையில் ஆடைகள் களையப்பட்டு‌ கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கொலை செய்தவர்களைக் காவல்துறையினர் தேடிவரும் நிலையில், தற்போது 13 வயது சிறுமியை இளைஞர்கள் கேலி செய்ததும், அதைக் கண்டித்தவர்கள்‌ மீது இளைஞர்கள் கற்களை வீசி தாக்கியுள்ளதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in