10 சதவீத இந்திய கோடீஸ்வரர்களிடம் 50 சதவீத சொத்துகள்!

10 சதவீத இந்திய கோடீஸ்வரர்களிடம் 50 சதவீத சொத்துகள்!

இந்தியாவில் உச்சத்தில் இருக்கும் 10 சதவீத கோடீஸ்வரர்களிடம் 50 சதவீத சொத்துகள் குவிந்துள்ளன. கீழ்நிலையில் உள்ள 50 சதவீத வறியவர்களிடம் உள்ள சொத்துகளை முழுக்க கூட்டினால்கூட 10 சதவீதம் மதிப்பு கூட வரவில்லை.

இதை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட ‘அனைத்திந்திய கடன், முதலீட்டு மதிப்பீடு-2019’ தெரிவிக்கிறது. ‘தேசிய புள்ளிவிவர கணக்கெடுப்பு (என்எஸ்எஸ்) நிறுவனம்’ திரட்டிய தரவுகளைக் கொண்டு அறிக்கை தயாரிக்கப்பட்டது.

10 சதவீதம் மிகப் பெரிய பணக்காரர்கள் நகர்ப்புறங்களாக இருந்தால் 55.7 சதவீத சொத்துகளையும், கிராமங்களாக இருந்தால் 50.8 சதவீத சொத்துகளையும் வைத்திருக்கிறார்கள். வீடுகள், நிலம், கட்டிடங்கள், கால்நடைகள், வாகனங்கள், பங்கு பத்திரங்கள், வங்கி டெபாசிட்டுகள், தபால் அலுவலக சேமிப்புகள் என்று அனைத்துமே ரூபாய் மதிப்பில் கணக்கிடப்பட்டுக் கூட்டி, வரும் தொகையையே ‘சொத்து’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

சில மாநிலங்களில் இந்த ஏற்றத்தாழ்வு மிக மிக அதிகமாகவே இருக்கிறது. டெல்லியில் உயர் நிலையில் உள்ள 10 சதவீதப் பணக்காரர்கள் 80.8 சதவீத சொத்துகளை வைத்திருக்கின்றனர். அங்கே கீழ்நிலையில் உள்ள 50 சதவீத ஏழைகள் மொத்தமாகவே 2.1 சதவீத சொத்துகளைத்தான் வைத்துள்ளனர். இதற்குக் காரணம் டெல்லி போன்ற பெரு நகரங்களில் நிலங்களுக்குள்ள அதிக மதிப்பு.

டெல்லிக்கு அடுத்தபடியாக பெரிய மாநிலங்களில் இந்த ஏற்றத்தாழ்வு அதிகம் இருப்பது பஞ்சாபில். அங்கே 10 சதவீத பெரும் பணக்காரர்கள் 65 சதவீத சொத்துகளை வைத்துள்ளனர். கீழ்நிலையில் உள்ள 50 சதவீத வறியவர்களுக்கு மொத்த சொத்து மதிப்பே 5 சதவீதம்தான். உத்தராகண்ட், மத்திய பிரதேசம், ஹரியாணாவிலும் இந்த பாகுபாடு அதிகமாக இருக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வு மிகவும் குறைவாக இருப்பது ஜம்மு-காஷ்மீர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கே உயர் நிலையில் உள்ள 10 சதவீத பணக்காரர்களிடம் 32 சதவீத சொத்துகள்தான் உள்ளன. கீழ்நிலையில் உள்ள 50 சதவீத பேரிடம் 18 சதவீத சொத்துகள் உள்ளன.

”எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” பாடல்தான் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. வேறென்ன செய்ய?

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in