புதுச்சேரி மாநிலத்தில் வேகமாக பரவி வரும் விஷக் காய்ச்சல் காரணமாக ஆரம்ப வகுப்புகள் முதல் எட்டாம் வகுப்பு வரை இன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்த மாநில அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ஒருவகை விஷக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் கண்டவர்கள் மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை மிக கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதனை சமாளிக்க மாநில அரசுகளும் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தெலங்கானா மாநிலத்தில் அரை நாள் மட்டுமே பள்ளிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் சிறியவர், பெரியவர் என அனைத்துத் தரப்பினரும் சளி, காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகள், மருந்தகங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள ஆரம்ப வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் எதிர்வரும் 26-ம் தேதி வரை விடுமுறை அளித்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் நேற்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் இதனை அறிவித்தார்.
புதுச்சேரியில் இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சலால் பள்ளி மாணவர்கள், குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வருகிறது. எனவே புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களிலும் உள்ள ஆரம்பப் பள்ளி முதல் 8-ம் வகுப்பு வரையிலான அரசு, நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகள் அனைத்தும், 16-ம்தேதி முதல் வரும் 26ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது’ என்று அவர் அறிவித்துள்ளார்.