வேடந்தாங்கல் பகுதியில் விதிகளை மீறி விரிவாக்கம்: சன் பார்மா நிறுவனத்திற்கு 10 கோடி அபராதம்!

வேடந்தாங்கல் பகுதியில் விதிகளை மீறி விரிவாக்கம்: சன் பார்மா நிறுவனத்திற்கு 10 கோடி அபராதம்!

வேடந்தாங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் சன் பார்மா நிறுவன விரிவாக்கத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அந்த நிறுவனத்திற்கு 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உலக புகழ் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அருகே  சன் பார்மா என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகள் அருகில் உள்ள நீர்நிலைகளில் கலக்கின்றது. இதனால் வேடந்தாங்கலுக்கு வரும் பறவைகள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவதாகப் புகார் எழுந்து வந்தது. இந்நிலையில், கடந்த ஆட்சியில், விதிகளை மீறி சன் பார்மா நிறுவன விரிவாக்கத்துக்கு அனுமதி வழங்க மறுத்து வந்தது. சன் பார்மா நிறுவனத்தின் விரிவாக்கத்திற்குத் தடை விதிக்கக் கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர் வெண்ணிலா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் ‘மத்திய வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் ஒப்புதல் நிராகரிக்கப்பட்டுள்ளதால் சன் பார்மா தொழிற்சாலை விரிவாக்கம் செய்ய  அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், சரணாலயம் அமைந்திருக்கும் பகுதிகளை மேம்படுத்தும் நோக்கிலேயே சரணாலயத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்த 5 கி.மீ என்ற பரப்பளவை 3 கி.மீட்டராக குறைக்கத் அரசு முடிவெடுத்துள்ளது எனத் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சரணாலய நிலப்பரப்பு குறைக்கப்படுவதற்கு எதிராக மனுதாரர் மத்திய அரசிடம் மனு அளித்து நிவாரணம் பெற்று கொள்ளலாம் என தெரிவித்து வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது. இதையடுத்து இந்த வழக்கானது தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் விசாரணைக்கு சென்றது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், ‘1994-ம் ஆண்டு முதல் 2006 வரையில் நடந்த விரிவாக்க பணிகளுக்குச்  சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை. விதிகளை மீறி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது’ என தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. மேலும் அந்த நிறுவனத்திற்கு 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in