மதுவை போதைப்பொருள் என்று கெஜெட்டில் வெளியிட வைத்தால் ஒரு லட்சம் பரிசு: வைரலாகும் அறிவிப்பு

செல்லபாண்டியன்
செல்லபாண்டியன்

அரசு டாஸ்மாக்கில் விற்கப்படும் மது வகைகளை போதைப்பொருள் என்று நிரூபித்து கெஜட்டில் வெளியிட வைத்தால் ஒரு லட்சம் பரிசு தருவதாக தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் அறிவித்துள்ளது. 

மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் லெட்டர் பேடில் வெளியிடப் பட்டிருக்கும்  இந்த அறிவிப்பு தமிழ்நாடு முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலாக சுற்றி வருகிறது. 

இந்த நிலையில் தமிழ்நாடு  மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் செல்லபாண்டியனிடம் பேசியபோது, 1971-ம் ஆண்டு வரை தமிழ்நாடு போதை இல்லாத தமிழ் நாடாகத்தான்  இருந்தது.  ஏதோ ஒரு சில இடங்களில் மறைவாக  கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படும்.  அதையும் காவல்துறை பறிமுதல் செய்து விற்பவர்களை கைது செய்து விடுவார்கள். ஆனால், தற்போது தமிழ்நாடு முழுவதும் அரசே நேரடியாக மதுக்கடைகளைத் திறந்து மதுவை விற்பனை செய்வதால் தமிழகத்தின் கலாச்சாரமே மாறிவிட்டது. 

தமிழகத்தின் பெரும்பாலான அமைச்சர்கள், மது விற்பதன் மூலமே அரசுக்கு நிதி கிடைக்கிறது என்றும், அரசை நிர்வாகம் செய்ய முடிகிறது என்று வெளிப்படையாக கூட்டங்களில் பேசி வருகிறார்கள்.  தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு  அண்மையில் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில், தமிழ்நாட்டில் போதைப்பொருள் கலாச்சாரம் 3000 மடங்கு அதிகரித்துள்ளதாக வேதனையுடன் தெரிவித்திருக்கிறார். அவரது பேச்சே தமிழகத்தில் எந்த அளவிற்கு போதைப் பொருள் கலாச்சாரம் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. 

இந்த நிலையில் நேற்று கூட தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் போதைப்பொருள் கலாச்சாரத்தை  முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆபரேஷன் கஞ்சா வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது புகையிலைப்  பொருட்கள் கடை கடையாக தீவிரமாக பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.  ஆனால், மதுக்கடைகள்  மூடுவது குறித்த எந்த அறிவிப்பையும் தமிழக அரசு செய்யவில்லை. 

இன்னும் சொல்லப்போனால் ஆகஸ்ட் 11-ம் தேதியை போதைப்பொருள் எதிர்ப்பு தினமாக தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது. அன்றைய தினத்தில் கூட டாஸ்மாக் கடைகளைத் தமிழக அரசு மூடவில்லை.  அப்படி என்றால் மதுபானங்கள் போதைப்பொருள் என்று இந்த அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. கஞ்சாவையும்,  புகையிலையையும், மற்ற போதைப்பொருட்களையும் தடுப்பதற்குத் தமிழக அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் மற்ற முக்கிய போதைப் பொருளான மதுவை ஒழிப்பதற்கு அவர்கள் எதையும் செய்ய தயாராக இல்லை.

எனவேதான், டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது வகைகளை போதைப் பொருள் என்று யாராவது நிரூபித்து அது போதைப் பொருள் தான் என்று அரசு கெஜெட்டில் வெளியிட வைத்தால் அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாயை பரிசாக அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அது குறித்துத்தான் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறோம்" என்றார்.

"அவர் சொல்வதில்  முழுக்க முழுக்க நியாயம் இருக்கிறது.  மது  போதைப் பொருள் இல்லை என்று அரசாங்கம் நினைக்கும் நிலையில் அது போதைப் பொருள்தான் என்று எடுத்துச் சொல்ல இப்படி சில அதிரடி அறிவிப்புகளை வெளியிடத்தான் வேண்டியிருக்கிறது" என்று சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in