20 கோடி மதிப்பு நகைக்கொள்ளை: குற்றவாளிகளைப் பிடிக்கும் போலீஸாருக்கு 1 லட்சம் பரிசு

டிஜிபி சைலேந்திர பாபு
டிஜிபி சைலேந்திர பாபு

சென்னையில் தனியார்வங்கியில் நடந்த கொள்ளை சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்யும் காவலர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை அரும்பாக்கத்தில் பெடரல் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் தங்க நகை அடகு வழங்கும் அலுவலகத்தில் நேற்று பிற்பகலில் கொள்ளை நடந்தது. வங்கியின் முன்னாள் மண்டல மேலாளர் முருகன் உள்ளிட்ட சிலரே இந்தக் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். வங்கிக் காவலாளிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, வங்கி ஊழியர்கள், மேலாளரைக் கத்தியைக் காட்டி மிரட்டிக் கட்டிப்போட்டு இந்த கொள்ளை சம்பவம் அரங்கேற்றப்பட்டது.

மூன்றுபேர் கொண்ட இந்த கொள்ளைக் கும்பல் வங்கியில் இருந்து 32 கிலோ நகைகளை எடுத்துச் சென்றது. இவற்றின் மதிப்பு 20 கோடியாகும். கொள்ளையடித்துச் சென்ற கும்பல் சிசிடிவி காட்சிகளின் வழியாக போலீஸார் தங்களைக் கண்டுபிடித்துவிடக் கூடாது என சிசிடிவி கேமராவின் சில முக்கிய பாகங்களையும் எடுத்துச் சென்றுவிட்டனர்.

இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்ய நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வங்கிக்கொள்ளைத் தொடர்பாக ஒருவரைப் பிடித்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து விசாரிக்க தனிப்படை குழு ஒன்று திருவண்ணாமலைக்குச் சென்றுள்ளது. இதனிடையே பட்டப் பகலில் சென்னையில் நடந்த இந்த தனியார் வங்கிக் கொள்ளையர்களைக் கைதுசெய்யும் காவலர்களுக்கு ஒருலட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என டி.ஜி.பி சைலேந்திர பாபு அறிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in