புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு

புத்தாண்டை முன்னிட்டு  தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு

டிச.31-ம் தேதி இரவு பொது இடம் மற்றும் சாலைகளில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்த்து, அவரவர் வீடுகளில் குடும்பத்துடன் புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாடி மகிழுமாறு தமிழக காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

புத்தாண்டை பொதுமக்கள் பாதுகாப்பாகவும், அமைதியான முறையிலும் கொண்டாடும் வகையில் தமிழக காவல்துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடபடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக டிச. 31-ம் தேதி மாலை முதலே தமிழகம் முழுவதும் 90 ஆயிரம் காவல் துறையினர் மற்றும் 10 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் என 1 லட்சம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளதாக தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு வழிகாட்டுதல்கள் தமிழக காவல்துறையால் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: டிச.31-ம் தேதி இரவு பொது இடங்களிலும், சாலைகளிலும் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்த்து, அவரவர் வீடுகளில் குடும்பத்துடன் புத்தாண்டை பாதுகாப்பாக கொண்டாடி மகிழுமாறும், அன்றிரவு பொதுமக்கள் மோட்டார் வாகனங்களில் தேவையின்றி சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.மேலும், 1 மணிக்கு மேல் பொது இடங்களில் பொதுமக்களுக்கு குதூகலக் கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை. புத்தாண்டுக்கு முந்தைய நாளும், புத்தாண்டு அன்றும் இரவு நேரத்தில் கடற்கரைகளுக்கு வரும் பொதுமக்கள் கடலில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது.

மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். அதிவேகமாக மற்றும் கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் இரவு நேரங்களில் மோட்டார் வாகனங்கள் மூலம் நீண்ட தூரம் பயணிக்கும் பொதுமக்கள் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை பாதுகாப்பான இடங்களில் தங்கள் வாகனங்களை நிறுத்தி தேநீர் அருந்தி, பின்னர் பயணத்தை தொடர வேண்டும், அதற்காகவே நெடுஞ்சாலைகளில் இரவு முழுவதும் கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டையொட்டி வழிபாட்டுத்தலங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன்வழிபாட்டு தலங்களில் குழப்பம் விளைவிக்க முயல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள். அதேபோல கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பாக காவல்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்,

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தடுந்த சட்ட நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிக்கப்படுவார்கள்.

அப்படி சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக 100 என்ற அவசர எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம், அப்படி தகவல் அளிக்கும் பொதுமக்களின் ரகசியம் காக்கப்படும் எனவும் தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல அவசர உதவி தேவைப்படுபவர்கள் காவல் உதவி என்ற அதிகாரபூர்வ செயலியை பயன்படுத்தி உதவி கோரலாம். அதற்கு காவல் உதவி செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், அசம்பாவிதங்கள் இல்லாத, விபத்துக்கள் இல்லாத புத்தாண்டைக் கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழக காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in