ஆடு, மாடுகளுடன் வெளியேறிய மக்கள்; கிராமங்களை மூழ்கடித்து கடலை நோக்கி விரைகிறது மேட்டூர் உபரிநீர்!

ஆடு, மாடுகளுடன் வெளியேறிய மக்கள்; கிராமங்களை மூழ்கடித்து கடலை நோக்கி விரைகிறது மேட்டூர்  உபரிநீர்!

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு ஒரு லட்சத்து 95 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளதால் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின்  கரையோர கிராமங்களை மூழ்கடித்தவாறு கடலை நோக்கி விரைந்து செல்கிறது காவிரி நீர்.

இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை மீண்டும் தனது முழு கொள்ளளவு எட்டியுள்ள நிலையில் கடந்த நான்கு நாட்களாக மேட்டூரில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. முதலில்  35 ஆயிரம் கன அடியாக இருந்த உபரி நீர் திறப்பு சிறிது சிறிதாக அதிகரித்து நேற்று காலை  ஒரு லட்சத்து 85 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. இந்த  நிலையில் மேட்டூருக்கு நீர் வரத்து 1.95 லட்சம் கன அடியாக உயர்ந்திருப்பதால் அது  அப்படியே காவிரியில்  திறந்து விடப்படுகிறது.

இதனால் ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு  வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் கரையோரங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.  செல்ஃபி எடுக்கவோ, குளிக்கவோ ஆற்றில் இறங்கவோ  வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் மூலம் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கொள்ளிடம் ஆற்றில் இந்த ஆண்டில்  ஐந்தாவது முறையாக அதிக அளவு நீர்  திறக்கப்பட்டுள்ளதால் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே சந்தப்படுகை, வேலை முடித்துவிட்டு நாதல்படுகை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள மக்கள் அங்கிருந்து தங்கள் உடமைகள், ஆடு, மாடுகள் உள்ளிட்டவற்றுடன்  வெளியேற்றப்பட்டுள்ளனர்.  இப்படி அவர்கள் ஊரை காலி செய்து வெளியில் தங்க வைக்கப்படுவது இந்த மூன்று மாதங்களில் இது ஐந்தாவது முறையாகும்.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தொடர்ந்து காவிரியில் அதிக அளவு நீர் வருவதால் ஒகேனக்கலை சுற்றியுள்ள பல கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பள்ளிக்கூடங்கள், சமுதாயக்கூடங்கள் ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒகேனக்கல் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகம் காவிரியில் நீர் திறக்க மறுத்து வருவதையே பார்த்து வந்த தமிழக மக்களுக்கு இப்படி  விடாமல் தொடர்ந்து தமிழகத்துக்கு நீரை அனுப்பி வைக்க உதவிய  இயற்கையை  தமிழக மக்கள் வணங்கி வழிபடுகின்றனர். ஆனாலும் இவ்வளவு நீரையும் சேமித்து வைக்க வழியில்லாமல் வீணாக கடலுக்கு அனுப்பும் மாநில அரசை நினைத்து கண்ணீரும் சிந்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in