19 மாத கால திமுக ஆட்சியில் ரூ.1.30 லட்சம் கோடி கடன் - முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றச்சாட்டு

முன்னாள் அமைச்சர் உதயகுமார்
முன்னாள் அமைச்சர் உதயகுமார்

அதிமுக ஆட்சியில் மொத்தமே ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே கடன் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், திமுக ஆட்சியில் 19 மாத காலத்திலேயே ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டி உள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டிகொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது, “போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றுதான் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். ஆனால், முன்பே எடப்பாடி பழனிசாமி போதையில்லாத தமிழகத்தை உருவாக்கவேண்டும் என சட்டசபையில் பேசினார். தமிழகத்தில் நிலவும் மக்கள் விரோத சக்திகளுக்கு எதிராக இடதுசாரிகள் கேள்வியோ, போராட்டமோ எழுப்புவதில்லை. அதிமுக மட்டுமே போராடிவருகிறது. அதிமுக ஆட்சியில் மொத்தமே ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே கடன் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், திமுக ஆட்சியில் 19 மாத காலத்திலேயே ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

திமுக ஆட்சியில் 2 லட்சத்து 80 ஆயிரம் கோடியாக கடன் தொகை உயர்ந்துள்ளது. நிதி அமைச்சரிடம் முதல்வர் கேள்வி கேட்கமுடியாத நிலை உள்ளது. எதிர்கட்சித் தலைவர் சட்டசபையில் கேள்வி எழுப்பினால் அமைச்சர்கள் உரிய பதில் சொல்வதில்லை. அதனால்தான் மின்கட்டணம், சொத்துவரி உயர்வைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தினோம். விருகம்பாக்கம் பெண் போலீஸாரிடம் திமுகவினர் அத்துமீறியுள்ளனர். இதன்மூலம் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது”என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in