தீபாவளி வேட்டையைத் தொடங்கிய அரசு அலுவலக ரெய்டுகள்: 1.12 கோடி, வெடிபாக்ஸ், மதுபாட்டில்கள் பறிமுதல்

தீபாவளி வேட்டையைத் தொடங்கிய அரசு அலுவலக ரெய்டுகள்: 1.12 கோடி, வெடிபாக்ஸ், மதுபாட்டில்கள் பறிமுதல்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெறுவதைத் தடுக்கும் வகையில்  நேற்று மாலையில் இருந்து நள்ளிரவு வரை  நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரின்  சோதனையில் கணக்கில் வராத  ஒரு கோடியே 12 லட்சத்து 57,803 ரூபாய், வெடிபாக்ஸ், மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகை வந்துவிட்டாலே அரசு ஊழியர்கள் தீபாவளி வசூலைத் தொடங்கி விடுவது வழக்கம். சில அதிகாரிகள் கட்டாய வசூலில் ஈடுபடுவதுண்டு. இதனைத் தடுக்கும் வகையில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது  முக்கிய அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார்  திடீர் சோதனை நடத்தினர். அப்போது முக்கியமான 54 அரசு அலுவலகங்களில் நடைபெற்ற சோதனையில் 4 கோடியே 29 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டது. 

இந்த ஆண்டும்  தீபாவளி வசூலைத் தடுக்கும் வகையில் நேற்று மாலை  திடீரென லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள்,  தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவுத்துறை வட்டார வளர்ச்சித்துறை,  ஊரக வளர்ச்சித்துறை, வட்டாட்சியர் அலுவலகங்கள், மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம், டாஸ்மாக், போக்குவரத்துத்துறை, மின்துறை உள்ளிட்ட 14 துறைகளைச் சேர்ந்த  30 அரசு அலுவலகங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.  


நள்ளிரவு வரை நடைபெற்ற இந்த சோதனையில்  கணக்கில் காட்டப்படாத 1,12,57,803 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது. பணம் மட்டுமில்லாமல் பட்டாசு பெட்டிகள்,  மது பாட்டில்கள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in