மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டருக்குள் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்: ஊழியர் மீது பெண் பரபரப்பு புகார்

மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டருக்குள்  என்னை  பாலியல் பலாத்காரம் செய்தார்: ஊழியர் மீது பெண் பரபரப்பு புகார்

பித்தப்பை அறுவை சிகிச்சைக்குச் சென்ற பெண்ணை பிரபல தனியார் மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டரில் வைத்து ஊழியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையின் 39 வயது பெண் ஒருவர் பித்தப்பை அறுவை சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். நேற்று முன்தினம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. இதனால் மயக்கத்தில் இருந்த அந்த பெண்ணை மருத்துவமனை ஊழியர் ஒருவர் ஆபரேஷன் தியேட்டருக்குள்ளேயே பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், பூல்கான் காவல் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் கூறுகையில்," ஆபரேஷன் தியேட்டரில், எனது வலது பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவர் என்னைத் தடவிக் கொண்டிருந்தார். சுயநினைவு பெற முடியாத நிலையில் இருந்ததால் அவரை தள்ளி விடவோ, தடுக்கவோ முடியவில்லை. நான் மயக்கத்தில் இருந்து தெளிந்த போது அவரால் பலாத்காரம் செய்யப்பட்டதை உணர்ந்தேன். இந்த குற்றம் நடந்த போது ஆபரேஷன் தியேட்டரில் பெண் ஊழியர்கள் இல்லை. எனது வலது மார்பில் காயம் ஏற்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி பிரியோபிரதோ ராய் கூறுகையில்," அப்பெண் அளித்த புகாரின் பேரில், அடையாளம் தெரியாத குற்றவாளி மீது ஐபிசி 354 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரித்துக் கொண்டிருக்கிறோம்" என்று கூறினார். மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறுகையில், “ஊழியர் ஒருவரின் தகாத நடத்தை குறித்து பெண் நோயாளி புகார் அளித்துள்ளார். இதுபோன்ற குற்றச்சாட்டு குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். இந்த விசாரணைக்கு காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்" என்றனர். கொல்கொத்தாவில் உள்ள பிரபல மருத்துவமனையில் நடைபெற்றுள்ள பாலியல் பலாத்கார சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in