புல்வாமா தாக்குதலில் இறந்த வீரரின் தங்கை திருமணம்: சிறப்பித்த ’அண்ணன்கள்’

புல்வாமா தாக்குதலில் இறந்த வீரரின் தங்கை திருமணம்: சிறப்பித்த ’அண்ணன்கள்’

சைலேந்திர பிரதாப் சிங். இவர், சிஆர்பிஎஃப் படையின் 110-வது பட்டாலியனில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்தவர். கடந்த வருடம், புல்வாமாவில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணமடைந்தவர்களில் சைலேந்திர பிரதாப்பும் ஒருவர்.

மகனை இழந்த சைலேந்திர பிரதாப் சிங் பெற்றோர், ஒரு வருட துக்கத்துக்குப் பின்னர் தங்களது மகள் ஜோதியின் திருமணத்துக்கான ஏற்பாடுகளில் இறங்கினர். உத்தர பிரதேசத்தில் திருமண விழாவுக்காக வருகை தந்திருந்தோர் அதிசயிக்கும் வகையில், சைலேந்திர பிரதாப்பின் பெயரில் அந்த சம்பவம் அரங்கேறியது.

சைலேந்திர பிரதாப்புடன் பணியாற்றிய சிஆர்பிஎஃப் வீரர்கள் திரளாக, திருமண மண்டபத்தில் நுழைந்தனர். தங்கைக்கு ஒரு அண்ணனாக சைலேந்திர பிராதாப் நின்று செய்யவேண்டிய சடங்குகள் அனைத்தையும் அவர்கள் செய்தனர். அனைவரும் சீருடையில் இருந்ததும், சைலேந்திர பிரதாப்பை நினைவு கூர்ந்ததும், அண்ணனின் சடங்குகளை முன்னின்று செய்ததுமாக திருமண விழாவுக்கு வந்திருந்தவர்களை நெகிழ வைத்தனர்.

நிறைவாக ஆளாளுக்குப் பரிசுகளை அள்ளி வந்து, சைலேந்திர பிரதாப்பின் தங்கை ஜோதியை திக்குமுக்காடச் செய்தனர். ”எங்களது ஒரு மகன் நாட்டுக்காக வீர மரணமடைந்துவிட்டான். ஆனபோதும் இத்தனை மகன்கள் மண்டபத்தை நிறைக்கும் வகையில் கூடி நின்று, தங்கள் தங்கை திருமணத்தை சிறப்பித்திருக்கிறார்கள். சைலேந்திர பிரதாப் மறைந்தது முதலே இந்தக் குடும்பத்தின் மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் தோள் தந்து வருகிறார்கள்” என்று உருக்கமாக மகிழ்ந்திருக்கிறார்கள் சைலேந்திர பிரதாப்பின் பெற்றோர்.

Related Stories

No stories found.