'நாங்கள் சிறைக்குச் செல்ல நீ தான் காரணம்': காங்கிரஸ் பிரமுகரை சரமாரியாக கத்தியால் வெட்டிய வழிப்பறி கும்பல்

'நாங்கள் சிறைக்குச் செல்ல நீ தான் காரணம்': காங்கிரஸ் பிரமுகரை சரமாரியாக கத்தியால் வெட்டிய வழிப்பறி கும்பல்

சென்னையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகியைக் கடைக்குள் புகுந்து சரமாரியாக வெட்டிய வழிப்பறி கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை பெரியமேடு காட்டூர் சடையப்பன் தெருவைச் சேர்ந்தவர் அப்ரோஸ் அகமது(37). இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் ஆர்டிஐ பிரிவில் மாநில செயலாளராக உள்ளார்.. மேலும் இவர் பெரியமேடு பகுதியில் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு லைட், ஷாமியானா அமைக்கும் கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு அப்ரோஸ் கடைக்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல், நாங்கள் சிறைக்குச் செல்ல நீ தான் காரணம் எனக் கூறி அவரை சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு தப்பிச் சென்றது. இதில் படுகாயமடைந்த அப்ரோஸ் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து அப்ரோஸ் அளித்த புகாரின் பேரில் பெரியமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த மாதம் பெரியமேடு பகுதியில் கொரியர் நிறுவன ஊழியரை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அடித்து உதைத்து, பணத்தை பறித்துச் சென்றது. இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி மற்றும் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து அப்ரோஸ், பெரியமேடு போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் போலீஸார் வழிப்பறியில் ஈடுபட்ட பெரியமேடு பேரக்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த லோடுமேன் கபில்(27), விக்கி என்ற விக்னேஷ்(27) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த இருவரும் தங்கள் சிறைக்குச் செல்ல காரணமாக இருந்த அப்ரோஸ்சை பழிக்கு பழிவாங்க கூட்டாளிகளுடன் சென்று அவரை வெட்டி விட்டுத் தப்பிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் தப்பி ஓடிய கபில், விக்னேஷ், லோகேஷ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சதீஷ் என்பவரைத் தேடிவருகின்றனர்.

வழிப்பறி கும்பலால் பாதிக்கப்பட்ட அப்ரோஸ் அகமது சரித்திரப்பதிவேடு குற்றவாளி என்றும், வேப்பேரி காவல் நிலையத்தில் அவர் மீது சரித்திரப் பதிவேடு பராமரிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in