திரிணமூல் காங்கிரஸில் இணைந்த பாபுல் சுப்ரியோ
பாபுல் சுப்ரியோ

திரிணமூல் காங்கிரஸில் இணைந்த பாபுல் சுப்ரியோ

பாஜகவிலிருந்து மேலும் பலர் மம்தா கட்சிக்குச் செல்லவிருப்பதாகத் தகவல்

மோடி தலைமையிலான பாஜக அரசில் சுற்றுச்சூழல் துறை இணையமைச்சராகப் பதவி வகித்த பாபுல் சுப்ரியோ, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருக்கிறார்.

கடந்த ஜூலை மாதம் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்ய, மத்திய அமைச்சர் பதவியிலிருந்து பாபுல் சுப்ரியோ நீக்கப்பட்டார். இதனால் விரக்தி அடைந்த பாபுல் சுப்ரியோ, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்வதாகவும் அரசியலைவிட்டே விலகிவிட முடிவு செய்திருப்பதாகவும் அறிவித்தார். தன் மீது ஊழல் கறைபடவில்லை என்பதில் மகிழ்ச்சியே என்றும் அப்போது குறிப்பிட்டார். அவரது வருத்தத்தை உணர்ந்த பாஜக மூத்த தலைவர்கள் அவரை அழைத்துப் பேசினர். அமைச்சர் பதவி போனால் என்ன, நாடாளுமன்ற உறுப்பினராக கடமையைச் செய்யலாமே என்று சமாதானம் கூறினர். இதையடுத்து, “இனி நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்படுவேன், கட்சி அரசியலிலிருந்து விலகியிருப்பேன்” என்று அவர் அறிவித்தார்.

இந்நிலையில், இன்று (செப்.18) திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்துவிட்டார். மம்தா பானர்ஜியுடன் சிரித்தபடியே பாபுல் கைகுலுக்கும் புகைப்படத்தை திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அவருடன் அபிஷேக் பானர்ஜி, டெரிக் ஓபிரையான் அந்தப் படத்தில் உள்ளனர்.

இன்னும் பல பாஜக தலைவர்கள் திரிணமூலில் சேர வரிசையாக காத்துக்கொண்டிருப்பதாக, குணால் கோஷ் என்ற திரிணமூல் தலைவர் கூறியிருக்கிறார். மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 பேர் திரிணமூல் கட்சியில் சேர்ந்துவிட்டனர். அவர்கள் பாஜக மீது அதிருப்தியடைந்திருக்கிறார்கள் என்று குணால் கோஷ் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.