ஜார்க்கண்ட் ரோப் கார் விபத்து: விரிவான தகவல்கள்

ஜார்க்கண்ட் ரோப் கார் விபத்து: விரிவான தகவல்கள்

ஜார்க்கண்ட் மாநிலம் தேவ்கர் மாவட்டத்தில் உள்ள பாபா வைத்தியநாத் கோயிலுக்குப் பக்தர்கள் சென்றுவர, அருகில் உள்ள மலைகளுக்கு இடையே ரோப் கார் வசதி உள்ளது. அடர்ந்த காடுகள் உள்ள பகுதி அது. சுமார் 100 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்ட இந்த ரோப் கார் கம்பிவழித்தடம், 766 நீளம் கொண்டது.

நேற்று முன்தினம் (ஏப்.10) ராமநவமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அங்கு வந்திருந்தனர். இந்நிலையில், மாலை 4 மணி அளவில் 392 மீட்டர் உயரம் கொண்ட திரிகூட் மலை அருகே சில ரோப் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.

ஒரு ரோப் கார் அங்கிருந்த பாறையில் மோதியதாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக கம்பிவடங்களில் மேலும் கீழுமாகச் சென்றுகொண்டிருந்த ரோப் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதாகவும், இதன் தொடர்ச்சியாக மற்ற ரோப் கார்கள் அனைத்தும் அந்தரத்தில் தொங்கியபடி நகராமல் நின்றுவிட்டதாகவும் ‘ஆஜ் தக்’ உள்ளிட்ட ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய விமானப் படை, தேசியப் பேரிடர் மேலாண்மைப் படை, இந்தோ - திபெத்திய எல்லைக் காவல் படை ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். தகவல் கிடைத்ததும் அங்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டதாக இந்தோ - திபெத்திய எல்லைக் காவல் படை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இரவு நேரத்தில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. மறுநாள் காலையில்தான் மீண்டும் மீட்புப் பணிகள் தொடங்கின. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்களும் மீட்புப் பணியில் பெரும் உதவி புரிந்தனர்.

அதுவரை குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் உயிரச்சத்தில் அந்தரத்தில் தொங்கியபடி மீட்புப் பணிகளுக்காகக் காத்திருந்தனர். அவர்களுக்கு டிரோன்கள் மூலம் குடிநீர், உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டன. உள்ளே இருந்து திறக்க முடியாத வகையில் வடிவமைக்கப்பட்ட ரோப் கார்கள் என்பதால் அவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளானார்கள். தொடர்ந்து மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் நடந்துவருகின்றன.

ஞாயிறு நிகழ்ந்த இந்த விபத்தில் நேற்று இரவு வரை மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மிகவும் ஆபத்தான இந்த மீட்புப் பணியில் கடும் நெருக்கடிக்கு இடையில் இதைச் செய்துகாட்டியிருக்கிறார்கள் நமது வீரர்கள். அச்சத்தில் உறைந்துபோயிருந்தவர்களை மனதளவில் தைரியப்படுத்தி மீட்பது பெரும் சவாலாக இருந்ததாக அவர்கள் கூறியிருக்கிறார்கள். மீட்கப்பட்ட குழந்தைகள் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.

நேற்று வெளியிடப்பட்ட காணொலிக் காட்சியில், இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட நபர், ஹெலிகாப்டரில் இருந்து தொங்கவிடப்பட்ட கயிற்றைப் பிடித்து மேலேறி ஹெலிகாப்டரை அடைந்த நிலையில் எதிர்பாராத விதமாகத் தவறி கீழே விழுந்தார். இந்தச் சம்பவத்தில் அவர் உடல் சிதறி உயிரிழந்தார். இதுவரை இந்தச் சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 14 பேர் மீட்கப்பட்டிருக்கிறார்கள். இன்று காலையும் மீட்புப் பணி நடைபெற்றதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார். நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகப் பிரதமர் மோடியும் தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.