
சென்னையில் கார் கண்ணாடிகளை உடைத்து லேப் டாப்களைத் திருடும் ராம்ஜி நகர் கொள்ளையன் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் சென்னை வந்த 4 பேர் கொண்ட கும்பலைப் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
சென்னையில் பாரிமுனை, பாண்டி பஜார், தி. நகர், தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடிகளை உடைத்து லேப்டாப், பணம் உள்ளிட்ட பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றதாக புகார்கள் வந்தன. இதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகள் எங்கெங்கு பயணித்துள்ளனர் என்பதைக் கண்டறிந்தனர்.
பின்னர் கொள்ளையர்கள் பெங்களூருவில் பதுங்கியிருப்பதை தேனாம்பேட்டை தனிப்படை போலீஸார் உ றுதி செய்தனர். அதன் அடிப்படை யல் பெங்களூரு சென்று சபரி என்ற முக்கிய கொள்ளையனைச் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து போலீஸார் அவரிடம் இருந்து 6 லேப்டாப்புகளைப் பறிமுதல் செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
போலீஸார் நடத்திய விசாரணையில். திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த கும்பல் மீண்டும் சென்னையில் களம் இறங்கி கார் கண்ணாடிகளை உடைத்து லேப்டாப் உள்ளிட்ட பொருட்களைக் கொள்ளையடித்தது தெரியவந்தது.
கடந்த 2021 டிசம்பர் மாதம் திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த 8 பேர் கொண்ட கும்பல் சென்னை அண்ணா நகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கார் கண்ணாடிகளை உடைத்து லேப்டாப்புகளைத் திருடிச் சென்றது. அக்கும்பலை சென்னை அண்ணாநகர் தனிப்படை போலீஸார் பெங்களூருவில் கைது செய்தது தெரியவந்தது. தற்போது அதே பாணியில் இந்த கும்பல் மீண்டும் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
மேலும் பெண்கள் பயன்படுத்தும் ஸ்லைடு பின், ரப்பர் பேண்ட், சாக்லேட் கவர் மற்றும் இரும்பு குண்டு என கையடக்க பொருட்களை வைத்து கவண் போல செய்து கார் கண்ணாடியை உடைத்து லாவகமாக பொருட்களை திருடிச் செல்வதை இக்கும்பல் வழக்கமாக கொண்டுள்ளது தெரியவந்தது.
சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் திருச்சி ராம்ஜி நகரிலிருந்து 5 பேர் கொண்ட கும்பல் வந்து கொள்ளைச் சம்பவங்களை நிகழ்த்தி சென்றதாக கைதான சபரி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து சபரியின் கூட்டாளிகளான தீபக், மதன், பிரதீப், விவேக் ஆகிய நான்கு பேரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். குறிப்பாக, கொள்ளையில் ஈடுபட்ட நபர்களுக்கு பதிலாக திருச்சி ராம்ஜி நகரில் இருக்கும் வேறு ஒரு ஆட்களை சரணடைய வைத்து வழக்கில் தப்பித்துக் கொள்ளும் முறையை திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையர்கள் கையாளுகின்றனர். அவ்வாறு சிறைக்கு செல்லும் நபர்கள் 'கொன்னையன்கள்' என்று அழைக்கப்படுகின்றனர். எனவே, இந்த வழக்கில் அது போன்று நிகழாமல் இருக்க சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளைச் சம்பவத்தை நிகழ்த்திய கொள்ளையர்களை மட்டும் கைது செய்ய போலீஸார் நடவடிககையில் ஈடுபட்டுள்ளனர்.