கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: சிறையில் இருந்த 5 பேரை காவலில் எடுத்து என்ஐஏ விசாரணை

கோவை கார் குண்டு வெடிப்பு
கோவை கார் குண்டு வெடிப்புகோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: சிறையில் இருந்த 5 பேரை காவலில் எடுத்து என்ஐஏ விசாரணை

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக ஐந்து பேரிடம் என்ஐஏ விசாரணை 3வது முறையாக நடக்கிறது.

கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக்டோபர் 23்ம் தேதி கார் வெடித்தது. இதில் அந்த காருக்குள் இருந்த அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் (29) என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபினுக்கு தடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஜமேஷா முபினின் கூட்டாளிகளான முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது ரியாஸ், முகமது தல்கா, முகமது தவ்பீக், உமர் பாரூக், பெரோஸ் இஸ்மாயில், ஷேக் இதயத்துல்லா, சனோபர் அலி உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பான வழக்கு விசாரணை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 1ம் தேதி முகமது அசாருதீன், அப்சர்கான், பெரோஸ்கான், முகமது தவ்பீக், ஷேக் இதயத்துல்லா, சனோபர் அலி, முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 7 பேரை காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரித்தனர்.

இந்நிலையில் என்.ஜ.ஏ. அதிகாரிகள் கார் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள முகமது அசாருதீன், பெரோஸ் இஸ்மாயில், நவாஸ் இஸ்மாயில், உமர் பாரூக், பெரோஸ் கான் ஆகிய 5 பேரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நேற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி 5 பேரையும் 7 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தார். இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஐந்து பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று கோவைக்கு அழைத்து வந்தனர். கோவையில் போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து 5 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, இவர்களிடம் 2 முறை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தற்போது 3வது முறை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in