‘எவ்வளவு அடித்தும் ‘கிக்’ ஏறவில்லை’... ‘என் செருப்பைக் காணவில்லை’

ம.பி அமைச்சர், போலீஸாரைக் கலங்கடித்த புகார்கள்
‘எவ்வளவு அடித்தும் ‘கிக்’ ஏறவில்லை’... ‘என் செருப்பைக் காணவில்லை’

பல முக்கியமான வழக்குகளுக்கு நடுவே சில விநோதமான வழக்குகளுக்கும் புகார்களுக்கும் எப்போதும் பஞ்சம் இருப்பதில்லை. மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டக் காவல் துறையினர் அப்படியான இரு வில்லங்கமான புகார்களை எதிர்கொண்டிருக்கின்றனர்.

உஜ்ஜைனில் தனியார் கார் பார்க்கிங் நடத்தும் லோகேந்திர சோதியா, கடந்த வாரம் காவல் துறையினரிடம் ஒரு புகார் அளித்தார். அதில் ஏப்ரல் 12-ல் க்‌ஷீர்சாகர் காட்டி பகுதியில் உள்ள, உரிமம் பெற்ற மதுபானக் கடையில் உள்ளூர் தயாரிப்பு மதுபானம் வாங்கியதாகவும், இரண்டு குவார்ட்டர் அடித்தும் போதை ஏறவில்லை என்றும் அந்தப் புகாரில் அவர் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக கலால் வரித் துறைக்கும் அவர் புகார்க் கடிதம் எழுதியிருக்கிறார். அது மட்டுமல்லாமல், மத்திய பிரதேச உள் துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ராவுக்கும் அவர் இது குறித்துப் புகார் கடிதம் அனுப்பியிருக்கிறார். நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புக்கும் புகார் அனுப்பப்போவதாக எச்சரித்திருக்கிறார்.

அதே மாவட்டத்தைச் சேர்ந்த கச்ரோத் பகுதி காவலர்களுக்கு வேறு வகையில் ஓர் இம்சைப் புகார் வந்திருக்கிறது. மே 5-ம் தேதி தாரோத் கிராமத்தைச் சேர்ந்த ஜிதேந்திர பக்ரி எனும் விவசாயி, தனது செருப்பைக் காணவில்லை எனப் போலீஸாரை அணுகினார். ஒரு மாதத்துக்கு முன்பு 180 ரூபாய்க்கு வாங்கிய கருப்பு நிற ஸ்லிப்பர்களை யாரோ திருடிவிட்டதாகப் புகாரும் அளித்தார்.

அதற்கு அவர் சொன்ன காரணம்தான் காவல் துறையினரைக் கலங்கடித்துவிட்டது. தனது செருப்பை திருடிய நபர் ஏதேனும் குற்றச்செயலில் ஈடுபட்டு சம்பவ இடத்தில் அந்தச் செருப்பை விட்டுவிட்டுச் சென்றால் பழி தன் மீது வரும் என்று பயப்படுவதாக அந்தப் புகாரில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகார்களின் மீது என்ன நடவடிக்கை எடுப்பது எனக் காவலர்கள் குழம்பிப்போயிருக்கின்றனர்.

Related Stories

No stories found.