உபி ப்ளஸ் யோகி... உபயோகி!

எதிர்க்கட்சிகளை வறுத்தெடுக்க வார்த்தை ஜாலத்தில் இறங்கிய மோடி
உபி ப்ளஸ் யோகி... உபயோகி!
பிரதமர் மோடி

உத்தர பிரதேசத் தேர்தலை மனதில் வைத்து, அம்மாநிலத்தில் மெகா திட்டங்களைத் தொடங்கிவைப்பதாக விமர்சித்துவரும் எதிர்க்கட்சிகளுக்குக் கடுமையான பதிலடி தந்திருக்கிறார் பிரதமர் மோடி. சமாஜ்வாதி கட்சியினர் மாஃபியாக்களை வளர்த்தெடுப்பவர்கள் என்றும் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

லக்னோ அருகே உள்ள ஷாஜஹான்பூரில் ரூ.36,230 கோடி மதிப்பீட்டில் கங்கை எக்ஸ்பிரஸ்வே திட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசிய மோடி, “இன்றைக்கு மாஃபியாக்கள் புல்டோசரை எதிர்கொள்கின்றனர். சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டிடங்களை புல்டோசர்கள் இடித்துத்தள்ளுகின்றன. ஆனால், மாஃபியாக்களை வளர்த்தெடுப்பவர்கள்தான் அதன் வலியை உணர்கின்றனர். அதனால்தான் ‘உபி + யோகி... அதிக உபயோகி’ (அதிகப் பலன் தரும்)’ என மக்கள் சொல்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் ஆதரவாளர்களுக்குச் சொந்தமான இடங்களில் இன்று வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். மவு நகரில், சமாஜ்வாதி கட்சியின் தேசியச் செயலாளர் ராஜீவ் ராயின் வீட்டில் இன்று சோதனை நடந்தது. அக்கட்சியைச் சேர்ந்த மனோஜ் யாதவின் மைன்புரி வீட்டிலும், லக்னோவில் உள்ள ஜெய்னேந்திர யாதவ் வீட்டிலும் சோதனைகள் நடந்தன.

இதுகுறித்துப் பேசிய ராஜீவ் ராய், “பெங்களூருவில் எனக்குத் தெரிந்தவர்கள் வீடுகளிலும் சோதனை நடத்துவதாக வருமான வரித் துறையினர் என்னிடம் கூறினர். நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை. உத்தர பிரதேசத்தில் நான் எந்தத் தொழிலையும் நடத்தவில்லை. என்னிடம் மறைக்க எதுவும் இல்லை. அமித் ஷாவுக்குத் தெரிந்தவர்கள் வசிக்கும் இடங்களில் சோதனை நடத்த அவர்கள் தயாரா எனச் சவால் விடுகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்

இதுகுறித்துப் பேசிய அகிலேஷ் யாதவ், “இதுவரை வருமான வரித் துறையினர் வந்துசென்றிருக்கிறார்கள். வரும் நாட்களில் அமலாக்கத் துறையினர், சிபிஐ அதிகாரிகள், பிற துறையினர் என எல்லோரும் வருவார்கள். தவறான ஊகங்கள் பரப்பப்படும். ஆனால், பாஜக உத்தர பிரதேசத்திலிருந்து துடைத்தகற்றப்படும்” எனக் கூறினார். “தேர்தல் நேரத்தில் ஏன் இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுகின்றன? தேர்தலில் வருமான வரித் துறையும் போட்டியிடுகிறது போலும்” என்றும் சாடியிருந்தார்.

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கான் மீதான வழக்குகள் பொய் வழக்குகள் என்று கூறிய அகிலேஷ், இது காங்கிரஸ் பயன்படுத்திய பழைய உத்திதான் என காங்கிரஸையும் வாரியிருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து ஷாஜஹான்பூர் நிகழ்ச்சியில் பேசிய மோடி, “இதற்கு முன்பு, ஆவணங்களில் மட்டுமே திட்டங்கள் தொடங்கப்படும். அப்படித்தான் முந்தைய ஆட்சியாளர்கள் தங்கள் கஜானாவை நிரப்பிக்கொண்டார்கள். ஆனால், இன்றைக்கு இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்படுவதன் மூலம் மக்களின் பணம் காப்பாற்றப்படுகிறது” என்று கூறினார்.

அத்துடன், உத்தர பிரதேசத் தேர்தலை முன்னிட்டு மெகா திட்டங்களைத் தொடங்கிவைப்பதாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த மோடி, “சில கட்சிகளுக்கு நாட்டின் பாரம்பரியமும் வளர்ச்சியும் பிரச்சினைகளாக இருக்கின்றன. ஏனெனில் அவர்களுக்கு வாக்குவங்கி எனும் தலைவலி இருக்கிறது. அவர்களுக்குக் காசி விஸ்வநாதர் கோயிலும் பிரச்சினைதான். அயோத்தி ராமர் கோயிலும் பிரச்சினைதான்” என்று கூறினார்.

மோடி மட்டுமல்ல, எல்லாக் கட்சியினரும் உத்தர பிரதேசத் தேர்தலைக் குறிவைத்தே அரசியல் களத்தில் அனல் சேர்த்துவருகிறார்கள். ராகுல் காந்தியும் இன்று உத்தர பிரதேசத்தில் உள்ள அமேதி மக்கள் தொகுதியில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, பாஜகவின் பல்வேறு கொள்கை முடிவுகள் குறித்து விமர்சனங்களை எழுப்பியிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in