உதய்ப்பூர் மாநாடு: உயிர் பெறுமா காங்கிரஸ்?

உதய்ப்பூர் மாநாடு: உயிர் பெறுமா காங்கிரஸ்?

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஜனநாயகம் வலுப்பட அங்குள்ள அரசியல் கட்சிகள் ஆற்றியவை பெரும் பங்கு. இந்தியாவிலும் இடது, வலது, நடுநிலை சித்தாந்தங்களைப் பின்பற்றி பெரிய கட்சிகள் வளர்வதுதான் ஜனநாயகம் செழிக்க வழி செய்யும். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தன்மையும் தோற்றமும் மாறி, சவலைக் குழந்தையானதற்கு முக்கியக் காரணம் ஒரு குடும்பத்தின் ஆதிக்கம். அந்தக் குடும்பத்தினருக்கு மக்களிடையே செல்வாக்கு இருந்து அது வெற்றி பெற்றுக்கொண்டிருந்தபோது எந்த அரசியல் விமர்சகரும் வரலாற்று அறிஞரும் அதை சுட்டிக்காட்டவேயில்லை. இப்போது சொல்லி வைத்தார்போல எல்லோரும் அதுதான் காரணம் என்று ‘கண்டுபிடித்து’ அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

நேரு – இந்திரா குடும்பம் காங்கிரஸ் கட்சியின் தொடர் வெற்றிக்குக் காரணமாக இருந்தது ஒரு காலம். அதனால் தோல்விக்கும் அதன் மீதே பழியைப் போடுவது எளிதாக இருக்கிறது. உண்மை என்னவென்றால், காங்கிரஸ் கட்சி தன்னுடைய அரசியல், பொருளாதாரக் கொள்கைகளைக் கடந்த இருபதாண்டுகளில் நீர்த்துப்போகச் செய்ததுதான் செல்வாக்கு இழப்புக்கு வழிவகுத்தது. தேர்தல் வெற்றிக்காக மக்களை பெரும்பான்மை, சிறுபான்மை, பட்டியல் இனத்தவர், பழங்குடிகள் என்றெல்லாம் பிரித்துப் பார்த்து குஜராத்தில் ‘காம்’ (kham) ஃபார்முலாவுக்குக் கிடைத்த வெற்றியை அப்படியே பிற மாநிலங்களிலும் பின்பற்றினால் போதும் தொடர் ஜெயம்தான் என்ற தவறான முடிவே கட்சியின் தேய்மானத்துக்கு மூல காரணம். (க்ஷத்திரியர்கள், பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், முஸ்லிம்கள் ஆதரவு இருந்தால் போதும் வெற்றி பெற்றுவிடலாம் என்பதே ‘காம்’ சூத்திரம்.) இது சில காலத்துக்கு வெற்றியைத் தந்தது. ஆனால் போட்டி அரசியல் கட்சிகள் வெவ்வேறு விதமான அணி சேர்க்கைகளைப் பரிசோதித்துப் பார்த்து காங்கிரஸ் கட்சியை ஆட்டம் காண வைத்துவிட்டன. சாதிகளை அடிப்படையாகக் கொண்ட கட்சிகள் வெற்றிக் கூட்டணிகளை உருவாக்கின.

முஸ்லிம்களின் முன்னேற்றத்துக்கு வழிசெய்வதற்குப் பதிலாக அவர்களை மதச்சிறுபான்மையினராக மட்டுமே அடையாளப்படுத்தி அவர்களுக்கு எப்போதும் பாதுகாவலாக இருப்போம் என்று மேடைக்கு மேடைக்குப் பேசி, பொதுவெளியில் முஸ்லிம் அல்லாதவர்களிடம் அதிலும் குறிப்பாக இந்தி பேசும் மாநில இந்துக்களில் கணிசமானவர்களிடம் எதிர்மறையான எண்ணத்தை விதைத்ததில் காங்கிரஸுக்கு முக்கியப் பங்கு உண்டு. பட்டியலின மக்களைக் கறிவேப்பிலையைப் போல பயன்படுத்திய அதன் உத்தியும் நாளடைவில் அவர்களால் உணரப்பட்டது. முன்னேறிய சமூகத்தைச் சேர்ந்த சிலர் கட்சியிலும் ஆட்சியிலும் தங்களுக்கு முக்கியத்துவம் குறைவதையும், கல்வி – வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு மேலும் முக்கியத்துவம் பெறுவதால் எதிர்காலம் கேள்விக்குறியாவதையும் உணர்ந்தனர். இப்படித் தன்னையும் அறியாமல் காங்கிரஸ் கட்சி, சமூகத்தின் சில பிரிவினரை அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் தருவதைப்போல ஏமாற்றியும் - மற்றவர்களைப் புறக்கணித்தும் விலக வைத்தது.

இந்திரா – நேரு குடும்பத்தினர் உண்மையிலேயே சாதி – மத பேதம் பாராதவர்கள் என்பதில் சந்தேகமே கிடையாது. அந்த வகையில் இன்றுவரை முற்போக்கானவர்கள்தான். ஆனால் நாட்டின் மக்களில் பெரும்பாலானவர்களுடைய வறுமையைப் போக்கத் தீவிரமான திட்டங்களை நிறைவேற்றாமலும் அரசுத் துறை நிறுவனங்களைச் சரியாக நிர்வகித்து லாபத்தைப் பெருக்கி அதை சமுதாய நலனுக்குப் பயன்படுத்த வேண்டும் என்ற அக்கறை இல்லாமலும் கோட்டை விட்டார்கள்.

நாடு சுதந்திரம் அடைந்த முதல் இருபதாண்டுகளில் வெறுங்கையைக் கொண்டுதான் முழம் போட்டாக வேண்டும் என்ற நிலையிலும் ஐந்தாண்டு திட்டங்கள் மூலம் நேரு அடித்தளக் கட்டமைப்புகளை உருவாக்கினார். அதற்காக சோவியத் பாணி ஐந்தாண்டு திட்டங்களைக் கையாண்டார். அவருடைய தீர்க்கதரிசனமான திட்டங்களால்தான் அடிப்படைக் கல்வி, அறிவியல் ஆராய்ச்சி, அணுசக்தித் துறையில் வளர்ச்சி, நாடு முழுக்க சுகாதார நிறுவனங்கள், உயர் அறிவியல் தொழில்நுட்பக் கழகங்கள், பெருந்தொழில்கள், நுகர்பொருள் தொழில்கள், தடுப்பூசி மருந்து உற்பத்தி எல்லாம் சாத்தியமாயிற்று. மின்சார உற்பத்தி, வேளாண் உற்பத்தி, இரும்பு -உருக்கு உற்பத்தி, சிமென்ட் தயாரிப்பு என்று நாடு வளம் பெற வழிகண்டார். பொருளாதார வளர்ச்சியின் மூலம் ஜனநாயகத்தையும் வலுப்படுத்தினார். ஆனால் மாநிலங்களில் காங்கிரஸ் தலைவர்கள் மெல்ல மெல்ல பதவிச் சண்டைகளில் தீவிரம் காட்டி அதிருப்தி கோஷ்டிகளாக மாறி காங்கிரஸ் கட்சிக்கு அவப்பெயரையும் தோல்வியையும் பெற்றுத் தந்தனர்.

நேரு காலத்தில் அரசுத் துறை நிறுவனங்கள் பல லாபம் ஈட்டின. ரயில்வே போன்றவை சமுதாய வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருந்தன. கிராமங்களைச் சேர்ந்த, ஓரளவுக்குப் பள்ளிப்படிப்பை முடிக்காதவர்கள் கூட அவற்றில் வேலைக்குச் சேர்ந்து தங்களுடைய குடும்ப நிலையை உயர்த்த வழி செய்தன. குழந்தைகளை அவர்களால் நன்கு படிக்க வைக்க முடிந்தது. இப்போது அரசுத் துறை நிறுவனங்களுக்குத் தொடர்ச்சியாக மூடு விழா நடத்துகின்றனர். தனியார் துறையை - அதிலும் பெருநிறுவனங்களை ஊக்குவிக்கின்றனர். ‘கிக் எகானமி’ என்றழைக்கப்படும் நிரந்தர வேலைவாய்ப்பும் வருமானமும் இல்லாத அத்தக்கூலி பொருளாதாரமே நாட்டின் அனைத்துத் துறைகளிலும் பரவிவிட்டது. வேலைவாய்ப்பைத் தரும் உயர் கல்வி என்பது வசதி படைத்தவர்களுக்கும் ஏற்கெனவே முன்னேறிய சமூகங்களுக்கும் மட்டுமே என்றாகிவிட்டது. பொறியியல், மருத்துவம், அறிவியல் துறைகளில் ஏராளமான கல்வி நிறுவனங்களும் படிப்புகளும் பெருகியிருந்தாலும் நடுத்தர வர்க்கத்துக்குக்கூட கல்வி என்பது அதிகம் செலவழித்துப் பெற வேண்டியதாக இருக்கிறது.

அரசுப் பள்ளிக்கூடங்களும், அரசுக் கல்லூரிகளும் பிற்காலத்திய அரசுகளின் அலட்சியத்தால் முக்கியத்துவம் இழந்து சுயநிதிக் கல்லூரிகளும் தனியார் கல்வி நிறுவனங்களும் கொழிக்கத் தொடங்கின. ஒன்றிய, மாநில அரசுப் பணிகளில் சேர்வதற்கு, தேர்வாணையத் தேர்வுகளுக்குக்கூட ஏதாவது பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்துதான் பொது அறிவு, ஆங்கிலம் ஆகியவற்றில் அதிக மதிப்பெண் பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. எல்லா சமூக மக்களும் அரசின் கட்டாயம் இல்லாமலேயே சிறு குடும்ப நெறியைப் பின்பற்றத் தொடங்கிவிட்டனர். அப்படிப் பெற்ற பிள்ளைகளை நல்ல கல்வி நிறுவனங்களில் சேர்க்கவும் பிறகு தகுந்த வேலைவாய்ப்பு பெற்றுத்தரவும் படாத பாடுபடுகின்றனர். நாட்டு மக்களின் பிரச்சினைகள் இவற்றைச் சுற்றியே இருக்கிறது. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் எல்லா அரசுகளிலுமே தொடர்கிறது. ஆனால் இப்போது வாழ்க்கையே போராட்டமாக, நிம்மதியற்றதாக மாறிக்கொண்டிருக்கிறது. எல்லோரும் கடுமையான பொருளாதார, சமூக சிக்கல்களில் ஆழ்ந்திருக்கின்றனர். இதையெல்லாம் கவனிக்காமல் காங்கிரஸ் கட்சியும் கடந்த இருபதாண்டுகளாக அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறது. கூட்டணி மூலம் மன்மோகன் சிங் தலைமையில் பத்தாண்டுகள் ஆட்சி செய்தபோது தங்களுக்கு அடுத்து வரவிருக்கும் சறுக்கல்கள் குறித்து காங்கிரஸில் ஒருவருமே உணர்ந்திருக்கவில்லை. இப்படியே அரசியல் செய்து காலம் தள்ளிவிடலாம் என்றே கருதினார்கள்.

இனி செய்ய வேண்டியது என்ன?

காங்கிரஸ் கட்சி மக்களை இந்துக்கள், சிறுபான்மைச் சமூகத்தினர், மகளிர், பழங்குடிகள், பட்டியல் இனத்தவர் என்றெல்லாம் இனம் பிரித்துப் பார்க்கும் நடைமுறையை முதலில் மூட்டை கட்ட வேண்டும். கட்சியிலும் நிர்வாகத்திலும் அந்தந்த பிரிவினரின் மக்கள் தொகைக்கேற்ப பிரதிநிதித்துவம் தரட்டும். ‘அட்ஹாக்’ கமிட்டி நடைமுறையைத் தலைமுழுக வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கொருமுறை கட்சியின் நிர்வாகிகள் தேர்தல் குறிப்பிட்ட மாதத்தில் குறிப்பிட்ட நாளில், நடக்கும் என்பதை கட்சியின் செயல்முறையில் விதியாகவே சேர்க்க வேண்டும்.

கட்சிக்கு எதிராக அறிக்கை விடுவது, கட்சித் தலைவரைப் பொதுவெளியில் விமர்சித்து பேட்டி தருவது, பதவி கிடைக்காவிட்டால் தூற்றுவது போன்ற ஒழுங்கீனங்களுக்கு இடம்தரக் கூடாது. கட்சியின் தொண்டர்கள் அடையாளம் காட்டும் நல்லவர்களுக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும். முன்னாள் முதல்வர்கள், அமைச்சர்கள், தலைவர்கள் போன்றோரின் வாரிசுகளுக்கு வாய்ப்பு தரவே கூடாது என்றும் தீர்மானிக்க வேண்டியதில்லை. அவர்களில் புத்திசாலிகள், உழைப்பாளிகள், நேர்மையாளர்களைப் புறந்தள்ள வேண்டியதில்லை. கட்சியிலும் ஆட்சியிலும் இடம்பெற கல்வித் தகுதியும் உழைப்புத் தகுதியும் முக்கியமான அம்சமாகக் கொள்ளப்பட வேண்டும். எல்லா சமயத்தவருக்கும் சமூகத்தவருக்கும் காங்கிரஸ் முன்னர் போல வாய்ப்பு தர வேண்டும். அதற்காக கட்சிப் பதவிகளில் இடஒதுக்கீடு செய்வதில்கூட தவறில்லை.

மக்கள் தொண்டு

மகளிர் அமைப்பு உள்ளிட்ட தொண்டர்கள் அனைவரும் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்குத் தொண்டாற்றுவதைக் கட்டாயமாக்க வேண்டும். இப்போதும்கூட சாதிச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், ஆதார் கார்டு புதிதாகப் பெறுதல் அவற்றில் திருத்தல் மேற்கொள்ளுதல், சாலை வசதிகளுக்காக உரிய அதிகாரிகளைச் சென்று பார்த்து முறையிடல், குடிமைப் பொருட்கள் சரியாக விநியோகிக்கப்படுவதை மேற்பார்வையிடுதல், மக்களுடைய பொதுப்போக்குவரத்துத் தேவைகளைக் கேட்டுக்கொண்டு அதற்கேற்ப மாநில, ஒன்றிய அரசுகளிடம் முறையிடுதல், மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் கிடைக்க உதவுதல், பொது இடங்களைத் தூய்மையாக வைக்கவும் நீர்நிலைகளை ஆழப்படுத்தி நீர்பெருக்கை அதிகப்படுத்தவும் உதவுதல் என்று தொண்டர்கள் மக்களிடம் தங்களைக் கொண்டு செல்ல எவ்வளவோ வாய்ப்புகள் உள்ளன.

அதைவிட்டுத் தலைவர்களின் பிறந்த நாளில் பிரியாணி - இனிப்பு வழங்குதல், சிலிண்டர் விலை ஏறும்போது மட்டும் முச்சந்திகளில் காலி சிலிண்டர்களுடன் கோஷமிடுதல் போன்றவற்றால் மக்கள் ஆதரவு தந்துவிட மாட்டார்கள். விவசாயிகள், தொழிலாளர்கள் பிரச்சினைகளில் காங்கிரஸ் அமைப்புகள் தீவிரப் பங்கெடுக்க வேண்டும். இந்தியதேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (ஐஎன்டியுசி) என்பது தலைமறைவு இயக்கம் போல வெளியிலேயே தெரியாமலேயே கமுக்கமாகச் செயல்பட்டால் எப்படி?

உதய்ப்பூர் மாநாட்டில் முதல் முறையாக லால் பகதூர் சாஸ்திரி, நேதாஜி போன்ற காங்கிரஸின் இதர தலைவர்களின் படங்களையும் சுவரொட்டிகளில் போட்டிருக்கிறார்கள். மாநாட்டின் இறுதிப் பேருரையை ராகுல் காந்தி ஆற்றுவார் என்று தெரிகிறது. அந்த வாய்ப்பை மன்மோகன் சிங்குக்குத் தந்திருக்க வேண்டும்.

காந்தியைச் சொந்தம் கொண்டாடும் காங்கிரஸாருக்கு தமிழ்நாட்டில் திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் போன்ற இடங்கள் புனிதத் தலமாக இருக்க வேண்டும். கள்ளுக்கடை மறியல் காங்கிரஸின் முக்கியப் போராட்டமாக ஒரு காலத்தில் இருந்தது. ஏழை மக்கள் மதுவுக்கு அடிமையாகி வாழ்க்கையையே தொலைத்தனர். இப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் மதுபானம் குடிக்கக்கூடாது என்ற நிபந்தனையை நீக்கிவிட்டார்கள். இதுவா சுதந்திரத்துக்காகப் போராடிய காங்கிரஸ் செய்யக்கூடிய சீர்திருத்தம்?

உதய்ப்பூர் மாநாட்டில் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது, பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போராடியவர்கள் யாராவது உங்கள் கட்சியில் இருக்கிறார்களா, ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டவர்கள் ஒருவர் உண்டா என்று கேட்டிருக்கிறார். நியாயமான கேள்வி. அப்படிப்பட்டவர்கள் இப்போது காங்கிரஸில் இன்னமும் இருக்கிறார்களா? நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டன. பாஜகவில் 70 வயதுக்கு மேற்பட்டவர்களை ஓரம் கட்ட ஒரு அமைப்பையே ஏற்படுத்திவிட்டார்கள். இப்போதுள்ள காங்கிரஸ்காரர்களில் 99 சதவீதம் பேர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களாகக்கூட இருக்க முடியாது. அந்த காங்கிரஸ்தானா இப்போதிருப்பது என்று எதிர்க் கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்ல முடியும். காங்கிரஸ்காரர்கள் இப்படிப் பழம் பெருமையைப் பேசினால், நெருக்கடி கால அவலங்களுக்கு மட்டும் எப்படி உங்களை விமர்சிக்காமல் இருக்க முடியும். எனவே சிந்தித்துப் பேச வேண்டும். அதற்காகத்தான் இந்த மாநாடு. சோனியா காந்தி காங்கிரஸ் உறுப்பினராக சேர்ந்தது எப்போது என்று கேட்டால் கார்கே என்ன பதில் சொல்ல முடியும்? நாட்டுக்காக உழைத்த தியாகிகளில் எத்தனை பேர்களுடைய குடும்பங்களை காங்கிரஸ் இப்போது பதவி தந்து வாழவைத்துக் கொண்டிருக்கிறது. இவையெல்லாம் திசை திருப்பும் பேச்சுகள். காங்கிரஸுக்குத் தோழமையாக வாய்த்திருக்கும் கட்சிகளில் எத்தனை சுதந்திரத்துக்காகப் போராடியவை, அவற்றின் தேசிய – சர்வதேசியக் கொள்கைகள் என்ன?

காங்கிரஸ் தன்னுடைய சோஷலிசக் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். வகுப்புவாதம் வளராமலிருக்க மக்களை இந்தியர்களாக மட்டும் பார்க்கும் கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அனைத்துப் பிரிவு மக்களுக்கும் சட்ட, பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று அறிவிக்க வேண்டும். வெளியுறவுக் கொள்கையில் எந்த வல்லரசு முகாமுக்கும் காவடி தூக்க வேண்டியதில்லை, அதே வேளையில் இந்திய நலனுக்கான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கமாட்டோம் என்று அறிவிக்க வேண்டும். நேரு காலத்தில் கனரகத் தொழில்துறைக்கு தந்த முக்கியத்துவத்தை எல்லா துறைகளுக்கும் தர வேண்டும். ‘கிக் எகானமி’க்கு முடிவு கட்டி, நிரந்தர ஊதியம் – ஓய்வூதியம் கொண்ட பொருளாதாரத்துக்குத் திரும்புவோம் என்று உறுதியளிக்க வேண்டும். முதலமைச்சர், பிரதமர், மாநில – ஒன்றிய அமைச்சர்களாக பத்தாண்டுகள் மட்டுமே பதவி வகிக்க அனுமதிக்க வேண்டும். நேர்மையாளர்கள் மற்றும் திறமைசாலிகளுக்கு விதிவிலக்கு தரலாம். எந்தக் கட்சியிலும் அப்படி அதிகம் பேர் இருந்துவிடப் போவதில்லை.

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என்பது நல்ல முடிவு. விதி விலக்காக ‘ஒன்-பை டூவையும்’ அனுமதிக்கலாம், ராகுல் – பிரியங்காவுக்காக. கட்சியில் இனி நியமனப் பதவியே கூடாது. தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஊழல் செய்கிறார், கட்சி விரோதச் செயல்களில் ஈடுபடுகிறார் என்றால் கட்சி அமைப்பிலேயே அவருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவந்து விவாதித்து வாக்கெடுப்பு எடுத்து நடத்தி நீக்க வேண்டும். கட்சி முழுமையான ஜனநாயத்துடன் செயல்பட வேண்டும். கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளின் முன்னேற்றங்களுக்கு புதிய அணுகுமுறையுடன் கூடிய திட்டங்களை அறிவித்து மக்களுடைய நம்பிக்கையை மீட்க வேண்டும்.

காங்கிரஸ் என்பது மக்களுடைய – கட்சித் தொண்டர்களுடைய இயக்கமாக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்துக்கு மட்டுமே பாத்தியப்பட்ட கட்சி, அவர்கள்தான் எஜமானர்கள், அவர்களுக்கு முறை வாசல் செய்தால் கட்சியில் பதவி நிச்சயம் என்ற பழங்கதை மாற வேண்டும். கட்சி அடிக்கடி வட்ட, மாவட்ட, மாநில அளவில் கூட்டங்களையும் மாநாடுகளையும் நடத்த வேண்டும். கூடுவாஞ்சேரி 18-வது வார்டு காங்கிரஸ் வேட்பாளரைத் தீர்மானிக்கும் முடிவைக்கூட சோனியா – ராகுலிடம் விட்டுவிடும் போக்கு மாற வேண்டும். உதய்ப்பூர் மாநாடு புதிய உதயத்தை காங்கிரஸுக்குத் தரட்டும். நாடு வலுவான, பாரம்பரியமிக்க கட்சியாக காங்கிரஸ் வளர்வதைத்தான் விரும்புகிறது.

வட மாநிலங்களில் இப்போதிருக்கும் ஆளும் கட்சிகளைப் பிடித்ததால் மக்கள் ஆதரிக்கவில்லை, காங்கிரஸை ஒரு கட்சியாகவே கருத முடியாத நிலைகண்டு வெதும்பித்தான் ஆதரிக்கிறார்கள். காங்கிரஸ் தலைவர்கள் கட்சியிலும் ஆட்சியிலும் பதவியை எதிர்பார்க்காமல் சுயமரியாதையுடன் செயல்பட வேண்டும். பொது மக்களுடைய பிரச்சினைகளில் நேரடியாக கவனம் செலுத்தினாலே மக்கள் அடையாளம் பார்த்து ஆதரிப்பார்கள். ‘பிரியாணி – குவார்ட்டர் – பேட்டா’ அரசியல் நீண்ட காலத்துக்கு உதவாது. காங்கிரஸ் ஒரு கட்சி - மாபெரும் தேசிய இயக்கம் என்ற எண்ணம் முதலில் காங்கிரஸ்காரர்களிடம் வலுப்பட வேண்டும். பிறகுதான் தோழமைக் கட்சிகள் உள்பட அனைவரும் மதிப்பார்கள். காங்கிரஸ்காரர்கள் சுதந்திரப் போராட்ட காங்கிரஸ் தியாகிகளின் வரலாற்றை மீண்டும் ஒரு முறை வாசித்தால், மக்கள் தொண்டு என்றால் என்ன என்று தெளிவாகப் புரியும்!

Related Stories

No stories found.