
2046ல் இந்தியாவில் 15 வயது வரை உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைவிட முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியம் (UNFPA) தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியம் - இந்தியா, சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனத்துடன் இணைந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் முதியோர் குறித்த அறிக்கை 2023-ஐ வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை இந்தியாவில் முதியோர் பராமரிப்பு சார்ந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்த விவரங்களை அளித்துள்ளது. இந்த அறிக்கையை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் செயலாளர் சவுரப் கார்க் மற்றும் ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியத்தின் இந்திய பிரதிநிதி ஆண்ட்ரியா எம்.வோஜ்னர் ஆகியோர் கூட்டாக வெளியிட்டனர்.
அதன்படி, இந்தியாவில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 41 சதவீதம் வரை இந்த உயர்வு உள்ளது. வரும் 2050க்குள் இந்திய மக்கள் தொகையில் 20% பேர் முதியவர்களாக இருப்பார்கள். வரும் 2046ல், இந்தியாவில் 15 வயது வரை உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைவிட முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
இந்திய முதியவர்களில் 40% ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள். 18.7% பேர் எவ்வித வருமானமும் இன்றி வாழ்கிறார்கள். இது முதியவர்களின் வாழ்க்கைத் தரத்திலும், அவர்களின் ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். 2022 மற்றும் 2050க்கு இடையே 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 279% உயரும். முக்கியமாக விதவைகள், மற்றவர்களை சார்ந்து வாழும் முதியவர்களின் எண்ணிக்கை இதில் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, இந்திய அரசின் மக்கள்தொகைக் கணிப்புகள் (2011-2036) மற்றும் ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக விவகாரத் துறையின் உலக மக்கள்தொகை வாய்ப்புகள் 2022 ஆகியவற்றின் சமீபத்திய தரவுகளைப் பயன்படுத்தி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அறிக்கையை வெளியிட்டுப் பேசிய சவுரப் கார்க், "வயதானவர்களுக்கு ஆரோக்கியமான, கண்ணியமான மற்றும் நிறைவான வாழ்க்கையை வாழத் தேவையான கவனிப்பு மற்றும் ஆதரவு கிடைப்பதை உறுதி செய்வது அவசியம்" என்று தெரிவித்தார். இந்த இலக்கை அடைவதற்கான மதிப்புமிக்க வரைபடத்தை அறிக்கை வழங்குகிறது என்றும், அதன் பரிந்துரைகளை செயல்படுத்த அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்வதாக அவர் கூறினார்.
முதியோர்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டும். முதியோர்களின் சுகாதாரம், நிதி மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடு தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய திட்டங்கள் மற்றும் கொள்கைகளை அரசு வகுக்க வேண்டும். மகிழ்ச்சியான முதுமைக்கான கார்ப்பரேட் முயற்சிகள், சமூக உதவி, முதியோர் இல்லங்கள் மற்றும் முதியோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்த அறிக்கை பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
300 பேரைக் காணவில்லை... பெட்ரோல் மையத்தில் பயங்கர வெடிவிபத்து... பலி எண்ணிக்கை 68 ஆனது!
அதிர்ச்சி.... 7-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை!
ரூ.1.70 கோடி ஏமாற்றி விட்டார்... கட்டிடப் பொறியாளர் மீது நடிகர் பாபி சிம்ஹா பரபரப்பு புகார்!
வைரலாகும் புகைப்படம்... 'மாமன்னன்' பாணியில் அவமானப்படுத்தினாரா அமைச்சர் பொன்முடி?
அடேயப்பா... பிக் பாஸ் இந்த சீசனில் கமல்ஹாசனின் சம்பளம் 130 கோடி!