ஆம்புலன்ஸ் கட்டணம் செலுத்த பணமில்லை: மகனின் உடலை பையில் வைத்துக்கொண்டு 200 கி.மீ பயணித்த தந்தை

ஆம்புலன்ஸ் கட்டணம் செலுத்த பணமில்லை: மகனின் உடலை பையில் வைத்துக்கொண்டு 200 கி.மீ பயணித்த தந்தை
ஆம்புலன்ஸ் கட்டணம் செலுத்த பணமில்லை: மகனின் உடலை பையில் வைத்துக்கொண்டு 200 கி.மீ பயணித்த தந்தை

மேற்கு வங்க மாநிலம்  முஸ்தபாநகர் பஞ்சாயத்தின் டாங்கிபாரா கிராமத்தில் வசிக்கும் தொழிலாளியான அசிம் தேவசர்மா, ஆம்புலன்ஸ் கட்டணம் செலுத்த பணமில்லாத காரணத்தால் தனது குழந்தையின் உடலை பையில் வைத்துக்கொண்டு 200 கி.மீ பயணம் செய்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

அசிம் தேவசர்மாவின் இரட்டைக் குழந்தைகளும் கடுமையாக நோய்வாய்ப்பட்டதால் கலியாகஞ்ச் மாநில பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர்களின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததால் ராய்கஞ்ச் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அதன்பின்னர் குழந்தைகள் இருவரும் மேல் சிகிச்சைக்காக சிலிகுரியில் உள்ள வடக்கு வங்க மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் ஒரு குழந்தையின் உடல்நிலை மேம்பட்டதால் அசிம் தேவசர்மாவின் மனைவி வியாழக்கிழமை கைக்குழந்தையுடன் வீடு திரும்பினார். மற்றொரு குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு பரிதாபமாக உயிரிழந்தது.

அதன்பின்னர் உயிரிழந்த மகனின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ்க்காக மருத்துவமனையை அணுகினார் அசிம். அவர்கள் அதற்கான கட்டணமாக ரூ.8000 கேட்டதால் அதிர்ச்சியடைந்தார். இதனைத் தொடர்ந்து வேறு வழியின்றி அவர், குழந்தையை ஒரு பையில் வைத்துக்கொண்டு சிலிகுரியில் இருந்து தனது சொந்த ஊரான கலியாகஞ்ச்க்கு பேருந்தின் மூலமாகவே சென்றடைந்தார்.

இது தொடர்பாகப் பேசிய அசிம்,”சிலிகுரியில் உள்ள மருத்துவமனையில் ஆறு நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு எனது ஐந்து மாத மகன் உயிரிழந்தான். இதற்காக நான் 16,000 ரூபாய் செலவழித்தேன். இறந்த உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் டிரைவரிடம் கேட்டபோது இந்த வசதி நோயாளிகளுக்கு மட்டும் இலவசம். ஆனால் இதில் சடலங்களைக் கொண்டு செல்ல முடியாது என்றனர். இதனால் பேருந்திலேயே குழந்தையின் உடலை எடுத்துவந்தேன். பேருந்தில் இது சக பயணிகளுக்குத் தெரிந்தால் இறக்கிவிட்டுவிடுவார்களோ என்ற அச்சத்திலேயே பயணம் செய்தேன்”என்றார். இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

மேற்கு வங்க பாஜக தலைவர் சுகந்தா மஜூம்டர், இதுதான் மேற்கு வங்காளத்தில் உள்ள சுகாதார வசதியின் நிலை. மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இதுதான் உண்மை நிலை என்றார். இதற்கு பதிலளித்த திரிணமூல் தலைவர்கள், ஒரு குழந்தையின் துரதிர்ஷ்டவசமான மரணத்தில்கூட பாஜக அரசியலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in