அண்ணா
அண்ணா

அண்ணா ஏந்திய அறிவுச் சுடர் – ரவிக்குமார் எம்.பி

இன்று அண்ணா பிறந்தநாள். அதை முன்னிட்டு தனது சுட்டிரை மற்றும் முகநூல் பக்கத்தில் அண்ணாவைப் பற்றிய மிக நீண்ட கட்டுரையை எழுதியிருக்கிறார் விசிகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார். அதிலிருந்து...

அறிஞர் அண்ணாவுக்கு எத்தனையோ பரிமாணங்கள் உண்டு. ஒரு கட்சியை நிறுவி அதன் தலைமைப் பொறுப்பிலிருந்து வழிநடத்தியவர்; நாடாளுமன்றத்தில் தனது அறிவார்ந்த உரைகளால் இந்திய அளவில் தலைவர்களின் கவனத்தை ஈர்த்தவர்; நாடகத்தைத் திரைப்படத்தைத் தனது அரசியல் பரப்புரைக்கான கருவிகளாக்கியவர்; இந்தித் திணிப்பை எதிர்த்துக் களம் கண்டவர்; இன உணர்வும் மொழி உணர்வும் கொண்ட ஒருவர் ஆட்சியமைத்தால் அவர் செய்யவேண்டியவை எவை என்பதற்கான முன்னுதாரணங்களை உருவாக்கியவர்; ஆழமான கருத்துகளை எளிமையான ஈர்ப்புமிக்க தமிழில் எழுதிக் குவித்த எழுத்தாளர், எதிராளிகளையும் ஏற்கச்செய்யும் ஆற்றல் மிக்க பேச்சாளர் – இப்படி அவரது பரிமாணங்களை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

ரவிக்குமார்
ரவிக்குமார்

அண்ணாவும், அண்ணலும்...

ராமாயணத்தைப்பற்றி புரட்சியாளர் அம்பேத்கர் எழுதியுள்ள கருத்துகளோடு அண்ணாவின் சிந்தனைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் அவற்றுக்கிடையே உள்ள வியக்கத்தக்க ஒற்றுமையை நாம் புரிந்துகொள்ளலாம். வால்மீகி படைத்துக்காட்டிய ராமனது பாத்திரத்தை தனி மனிதன் என்ற நிலையில் வைத்து ஆராய்ந்த அம்பேத்கர் அவன் மறைந்துநின்று வாலியைக் கொன்றதையும், சீதையை நடத்திய முறையையும் கடுமையாக விமர்சிக்கிறார். அவனை மன்னன் என்ற நிலையில் வால்மீகி எப்படி சித்திரித்துள்ளார் என்பதை அம்பேத்கர் எடுத்துக் காட்டுகிறார்:

“ ராமன் அரியணை ஏறிய பின் அவனுடைய அன்றாட நடவடிக்கைகளை மிகக் குறிப்பாகவும் தெளிவாகவும் வால்மீகி குறிப்பிடுகிறார் (உத்தர காண்டம், சருக்கம் 42, சுலோகம் 27). அதன்படி ராமனின் வாழ்வில் ஒரு நாள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. நண்பகலுக்கு முன்பு வரை ஒரு பகுதி என்றும், நண்பகலுக்கு பின் வேறொரு பகுதி என்றும் வரையறுக்கப்பட்டது. காலை முதல் நண்பகல் வரை ராமன் மத ஆச்சாரங்கள் மற்றும் சடங்குகளை நிறைவேற்றுவதிலும் பிரார்த்தனை செய்வதிலும் காலத்தைக் கழித்தான். நண்பகலுக்குப் பின் அரசவைக் கோமாளிகளுடனும் அந்தப்புரப் பெண்களுடனும் மாறி மாறி தன் நேரத்தைக் கழித்தான்” என்று சுட்டிக்காட்டியுள்ள அம்பேத்கர், “ நாட்டு மக்களின் குறை கேட்டு நிவர்த்தி செய்கிற பழங்கால மன்னர்களின் பழக்கத்தைக் கூட ராமன் ஒருபோதும் கடைபிடிக்கவில்லை.” என்கிறார்.

ராமாயணத்தைப் பொறுத்தவரை அண்ணல் அம்பேத்கர் வால்மீகி ராமாயணத்தைப்பற்றி சொல்லியிருக்கும் கருத்துகளும் , அண்ணா கம்ப ராமாயணத்தை விமர்சித்து சொன்ன கருத்துகளும் ஒன்றுபோலவே இருக்கின்றன. ராமாயணத்தை விமர்சித்ததிலும், அம்பேத்கரின் மதமாற்ற முடிவை ஆதரித்ததிலும் அண்ணாவின் அரசியல் தெளிவு வியக்க வைக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கர் இந்து மதத்தைத் துறந்து பௌத்த மதத்தை ஏற்றபோது அதை ஆதரித்து திராவிடநாடு இதழில் அண்ணா கட்டுரை ஒன்றை எழுதினார் ( 21.10.1956)

“டாக்டர் அம்பேத்கரின் மத மாற்றச் சம்பவம், உலக மக்களின் சிந்தனையைத் தூண்டத் தவறிவிடாது. மூன்று லட்சம் மக்களை உடனழைத்துக் கொண்டு டாக்டர் அம்பேத்கர் ஏன் இந்து மதத்தை விட்டு வெளியேறத் துணிந்தார் என்ற கேள்வியை, பல்வேறு நாடுகளிலுமுள்ள அறிஞர் பெருமக்கள் தங்களுக்குத் தாங்களே கேட்டுக்கொள்ளத்தான் போகின்றனர்.” என அந்தக் கட்டுரையில் குறிப்பிட்ட அண்ணா , “ தீண்டாமை, பாராமை, நெருங்காமை, பிறப்பினால் உயர்வு தாழ்வு போன்ற மிக மிகக் கொடிய தொற்றுநோய்க் கிருமிகள் குடியேறியுள்ள மாளிகை, தங்கத்தால் ஆக்கப்பட்ட அரண்மனையாக இருந்தாலும், அங்கு டாக்டர் அம்பேத்கர் போன்றவர்கள் நீண்ட நாள் வாழ ஒப்பமாட்டார்கள்; வெளியேறித்தான் தீருவர்.

டாக்டர் அம்பேத்கரின் இந்த மதமாற்றம் நல்லறிவாளர்கள் அனைவருடைய பாராட்டுதலுக்கும் உரியதாகும்.” என்று அம்பேத்கரின் மதமாற்றத்துக்கு ஆதரவாக அண்ணா நற்சான்று அளித்தார்.

அறிஞர் அண்ணா பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர். அவற்றுள் எந்த அண்ணாவை நாம் இப்போது முன்னிறுத்துவது? 20 -ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்ததைப்போல சனாதனம் தமிழ் நாட்டை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இன்றையைச் சூழலில் நாம் முன்னிறுத்தவேண்டியது சனாதனத்தை சுட்டெரிப்பதற்காக அறிவுச் சுடர் ஏந்திய அண்ணாவைத்தான்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in