அர்த்தமின்றி கொடுக்கப்பட்டதல்ல அப்துல்ரசாக் குர்னாவுக்கு நோபல் பரிசு!

அப்துல்ரசாக் குர்னா
அப்துல்ரசாக் குர்னா

ஆப்பிரிக்க எழுத்தாளரான அப்துல்ரசாக் குர்னாவுக்கு (Abdulrazak Gurnah) 2021-ம் ஆண்டுக்கான நோபல் இலக்கியப் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தச் செய்தி 40 ஆண்டுகளுக்கு முன் ’அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’ நூலை எழுதிய எனக்கு காதில் தேன் பாய்வதாக இருந்தது.

குர்னாவைத் தேர்ந்தெடுத்ததின் வாயிலாக ஸ்வீடிஷ் அகாடமி தங்களின் விருது உலகு தழுவியது என்பதையும், வியாபார ரீதியாகப் பிரபலமடையாத நிஜக் கலைஞர்களை நோபல் பரிசுக் கமிட்டி கண்டெடுக்கும் என்பதையும் நிரூபித்து இருக்கிறது.

வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் போன்ற முக்கிய சர்வதேச இதழ்களால் நோபல் பரிசு இவர்களுக்குக் கிடைக்கும் என்று ஜோதிடம் சொல்லப்பட்ட பிரபல எழுத்தாளர்கள் பலர். அவர்களையெல்லாம் புறம்தள்ளி நினைத்துக்கூடப் பார்த்திராத அரேபிய மூதாதையர் வழிவந்த ஒரு ஆப்பிரிக்க எழுத்தாளருக்கு, அதிலும் டான்சனியா தீவில் பிறந்த ஒருவருக்கு நோபல் பரிசு எனும் செய்தி என்னை ஆச்சரியப்படுத்தியது.

கலைநேர்த்திமிக்க பின்-காலனிய எழுத்து!

2017-ல் நோபல் இலக்கியப் பரிசு பெற்ற ஜப்பானிய எழுத்தாளர் காசுவோ இஷிகுரு, எப்படி நோபல் பரிசு போட்டி பட்டியலில் காணப்படாமல் இருந்து திடீரென பரிசு பெற்றாரோ, அதேபோல்தான் அப்துல்ரசாக் குர்னாவும் திடீரென நோபல் இலக்கிய விருதாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இருவருமே வேற்று மண்ணில் பிறந்து பிரிட்டனில் குடியேறியவர்கள்.

அப்துல்ரசாக் குர்னா என்னைப் போலவே 1948-ல் பிறந்த 73 வயதுக்காரர். அரேபியர். ஆப்பிரிக்கர். டான்சனியாவில் சான்சிபார் எனும் இடத்தில் பிறந்தவர். தாய்மொழியான ஸ்வாஹிலி மொழியில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதும் எழுத்தாளர். 1960-ல் தாய்நாட்டில் அரேபிய வழிவந்தவர்களுக்கு இன்னல்கள் தோன்றியபோது, பிரிட்டனுக்கு அகதியாகக் குடியேறியவர். 24 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தனது தந்தையின் மரணத்தின் பொருட்டு தாய்நாட்டுக்குப் போய் வருகிறார்.

ஆனால், இவரது எழுத்து எப்போதும் கிழக்கு ஆப்பிரிக்காவின் பின்னணியில் பின்–காலனித்துவம், புலம்பெயர்தல், அகதிகள், நிறவேற்றுமை குறித்த மிக முக்கியமான குரலாக ஒலித்து வந்திருக்கிறது. மாறிவரும் உலகத்தின் மிக முக்கியமான அங்கமாக ஆப்பிரிக்கர்கள் மாறி வருகிறார்கள் என்பதைச் சொல்லும் புனைவுகளையும், இலக்கிய விமர்சனங்களையும் கலைநேர்த்தியுடன் இவர் எழுதியிருக்கிறார்.

’ஆஃப்டர் லைவ்ஸ்’ நாவலை படித்தபோது பாண்டிச்சேரியில் பிறந்து அல்ஜீரியாவிலும், வியட்நாமிலும் பிரெஞ்சுப் படைகளில் சிப்பாய்களாகப் பங்குகொண்டு போரிட்ட என் தாய் மாமன்களின் மீது புதிய வெளிச்சங்களைக் கொட்ட முடிந்தது. அவர்களை வரலாற்றுரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் புரிந்து கொள்ள வைத்தது.

உள்முகமாகத் தொட்ட படைப்புகள்!

பிரிட்டனில் கெண்ட் பல்கலைக்கழகப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற குர்னா, புனைகதையாளர் என்பதைவிடவும் விமர்சகராகவே அதிகம் அறியப்பட்டவர். இவர் ’கேம்ப்ரிட்ஜ் கம்ப்பேனியன் டு சால்மன் ருஷ்டி’ நூலின் தொகுப்பாசிரியர். கூகி வா தியாங்கோவின் ’பெங்குவின் கிளாசிக் கலக்‌ஷனு’-க்கு இவர் எழுதிய முன்னுரை மிக முக்கியமானதென்று கருதுகிறேன். என்னுடைய வியப்பு என்னவென்றால், உலகம் முழுவதும் அறியப்பட்ட மிகச் சிறந்த எழுத்தாளரான கூகி வா தியாங்கோ நோபல் பரிசு பெறாமல், அவரைப் பற்றி மிகச் சிறப்பான இலக்கிய விமர்சனக் கட்டுரைகளை எழுதிய அப்துல்ரசாக் குர்னா நோபல் விருது பெறுகிறாரே என்பதுதான்.

சென்ற ஆண்டு இவரது ’ஆஃப்டர் லைவ்ஸ்’ (Afterlives), ’பாரடைஸ்’ (Paradise) ஆகிய இரு நாவல்களைப் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது. பிரிட்டனுக்கு வெளியே அதிகம் அறியப்படாத ஒரு புனைகதையாளர் என்றே இவரை நினைத்திருந்த என்னை, இவ்விரு நாவல்களும் வெகுவாகக் கவர்ந்தன.

இவ்விரு நாவல்களில் ’ஆஃப்டர் லைவ்ஸ்’ நாவல் உள்முகமாகத் தொட்டது. இதை படித்தபோது பாண்டிச்சேரியில் பிறந்து அல்ஜீரியாவிலும், வியட்நாமிலும் பிரெஞ்சுப் படைகளில் சிப்பாய்களாகப் பங்குகொண்டு போரிட்ட என் தாய் மாமன்களின் மீது புதிய வெளிச்சங்களைக் கொட்ட முடிந்தது. அவர்களை வரலாற்றுரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் புரிந்து கொள்ள வைத்தது. இந்த நாவலில், யார் தங்களைக் காலனி ஆதிக்கத்தின்கீழ் வைத்திருக்கிறார்களோ அவர்களின் சார்புப் படையில் அங்கம் வகிக்கும் சிப்பாய்கள் குறித்து மிகநுட்பமான கவனிப்புகளை முன் வைத்திருந்தார். அப்போதுகூட குர்னாவுக்கு நோபல் பரிசு கிடைக்குமென நான் நினைக்கவில்லை.

குர்னாவுக்கு இவ்விருது ஏன் அளிக்கப்படுகிறது என்று நோபல் பரிசுக் கமிட்டி சொல்லியிருக்கிறது. காலனி ஆதிக்கத்தின் விளைவுகளையும், பண்பாடுகள் மற்றும் கண்டங்களுக்கு இடையே புலம்பெயர்ந்தவர்களின் தலைவிதியையும் சமரசங்கள் ஏதும் செய்து கொள்ளாமல் இரக்கத்தோடு ஊடுருவும் நாவல்களையும், விமர்சனங்களையும் எழுதியதற்காக இவருக்கு நோபல் விருது அளிக்கப்படுவதாக ஸ்வீடிஷ் அகாடமி அறிவித்திருக்கிறது.

நிஜக் கலைஞர்களைத் தேடுதல்!

இப்போது நினைத்துப் பார்க்கிறேன். 1983-ல் நான் ’அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’ நூலை எழுதியபோது, ஒரு ஆப்பிரிக்க எழுத்தாளர்கூட நோபல் பரிசு வாங்கியிருக்கவில்லை. கூகுள் இல்லாத காலம் அது. 15 ஆண்டுகளாகப் புத்தகம் புத்தகமாக ஆப்பிரிக்க எழுத்தைத் தேடிப் படித்து வந்தபோது, வோல்லே சொயிங்கா எனும் நைஜீரியாவைச் சேர்ந்த ஆப்பிரிக்க எழுத்தாளரை என் விருப்பத்துக்குத் தேர்வு செய்து தமிழில் மொழிபெயர்த்தேன். 1986-ல் வோல்லே சொயிங்காவுக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. ஏதோ எனக்கே நோபல் பரிசு கிடைத்து விட்டதுபோல சந்தோஷப்பட்டேன். எந்தவிதத் தகவலும் தெரியாதபோது, வெறும் பிரதியின் இலக்கியத்தரத்தை நான் சரியாக எடைபோட்டு இருக்கிறேன் என்று என்னையே நான் மெச்சிக் கொண்டேன். அப்போது அவரை யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. சென்னை ஹிக்கின்பாதம்ஸ் கடையில் போய்க் கேட்டால், அப்படி ஒரு எழுத்தாளர் இருக்கிறாரா என்று கேட்டார்கள்.

இந்த ஆண்டு இலக்கியத்துக்கு நோபல் பரிசு பெற்றிருக்கும் அப்துல்ரசாக் குர்னாவையும், இன்று தமிழ் மொழியில் யாரும் படித்திருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் அமெரிக்க எழுத்துச் சந்தையில் இவரது அச்சு நூல்கள் விற்று இருக்கின்றன. இவரும் வோல்லே சொயிங்காவைப் போலவே ஆங்கிலத்தில் தன் சொந்த மண்ணின் பண்பாட்டை எழுதுபவர் என்ற விதத்தில், உலகப் பண்பாட்டில் ஆப்பிரிக்கப் பண்பாட்டைக் கலந்த மந்திரவாதியாகிறார். இந்த ஆண்டு குர்னாவைத் தேர்ந்தெடுத்ததின் வாயிலாக ஸ்வீடிஷ் அகாடமி தங்களின் விருது உலகு தழுவியது என்பதையும், வியாபார ரீதியாகப் பிரபலமடையாத நிஜக் கலைஞர்களை நோபல் பரிசுக் கமிட்டி கண்டெடுக்கும் என்பதையும் நிரூபித்து இருக்கிறது.

தமிழில் முன்னரே மொழிபெயர்க்கப்பட்டு அறிமுகமான சர்வதேச கருப்பு எழுத்தாளர்களான ச்சினுவா அச்சபே, மாயா ஆஞ்சலோ, வோல்லே சொயிங்கா, கூகி வா தியாங்கோ, சிமானந்தா அடிச்சி ஆகியவர்களைப் போல் அல்லாமல் நோபல் பரிசு பெற்றதினால் புதியதொரு குரலாகத் தமிழ் இலக்கியப் பரப்புக்குள் இன்று ஊடுருவுகிறார் அப்துல்ரசாக் குர்னா.

மிக விரைவில், இவரது நாவல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை நாம் உள்முகமாகப் புரிந்து கொள்ளும் காலம் தமிழர்களுக்கு வாய்க்கும் என நம்பலாம். அதுமட்டுமில்லாமல் தமிழ் இனத்தின் பண்பாட்டையும் புலம்பெயர் வாழ்வையும் அப்துல் ரசாக் குரானவைப்போல், ஆங்கிலத்தில் எழுதும் ஒரு தலைமுறை தோன்றாதா என்ற ஏக்கமும் மனதில் அரும்புகிறது.

கட்டுரையாளர்: கவிஞர், மொழிபெயர்ப்பாளர், கலை விமர்சகர். ‘பறவைகள் ஒருவேளை தூங்கி போயிருக்கலாம்’ மொழிபெயர்ப்பு தொகுப்பு உள்ளிட்ட நூல்களை எழுதியவர். தொடர்புக்கு: poetindran@gmail.com

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in