நானூறு நாட்கள்... நாற்பதாயிரம் பாக்கள்!

கவிகளை வளர்த்தெடுக்கும் ‘கவிதை மட்டும்’ வாட்ஸ்-அப் குழு
நானூறு நாட்கள்... நாற்பதாயிரம் பாக்கள்!
‘கவிதை மட்டும்' மாத இதழ் தொடக்க விழா...

‘காலமொரு ஞானன்.

சிறு குழந்தையென அடம்பிடிக்கும்.

கொடூர முகம் காட்டி அலைக்கழிக்கும்.

குடிசைகளைக் கோபுரமாக்கும்.

அதே கோபுரங்களையும் சிறு குடிசையாக்கும்.

அனுபவங்களைத் தரும் அதே வேளையில்...

அவஸ்தைகளையும் இறக்கிவைக்கும் இடியென.


ஏற்றத்தாழ்வு பார்ப்பதில்லை

உச்சங்களையும் எச்சங்களாக மாற்றும்.

எச்சங்களையும் உச்சங்களென ஏற்றும்.

எலிக்கொரு காலங்களையும்

பூனைக்கொரு காலங்களையும்

மறைத்தே வைத்திருக்கிறது

தன்னுள் பூட்டி - காலமொரு ஞானன்!

காத்திருந்தால் காலம் தரும் பதிலில்

உணரலாம் அன்னையின் அன்பை!’

- க.தங்கபாபு


* * *

‘என்னவொரு கருணை...

புல்லுக்குப் பிடிக்கிறதே

குடை... காளான்!’

- கோபிநாத்

* * *

‘மரத்தைப் பார்த்ததும்...

அசைகிறது

ஊஞ்சல் நினைவுகள்!’

- ஈரோடு செந்தில்


... இந்தக் கவிதைகளெல்லாம் ஏதோ வெகுஜன இதழ்களில் பிரசுரமானவை அல்ல. வாட்ஸ்-அப் குழு ஒன்றில் பதிவிடப்பட்டவை.

குடும்ப உறுப்பினர்கள், பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், சக ஊழியர்கள், சொந்த ஊர்க்காரர்கள் என எத்தனையோ வாட்ஸ்-அப் குழுக்களை உருவாக்கி நட்பையும், உறவையும் வளர்த்துவருகிறது நம் தமிழ்ச் சமூகம். அதுபோல அண்மைக்காலமாகத் தமிழை வளர்க்கவும் பல குழுக்கள் உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் உலவுகின்றன. அவற்றுள் தனித்து கவனத்தை ஈர்க்கிறது ‘கவிதை மட்டும்’ என்ற வாட்ஸ்-அப் குழு.

தினமும் கவிதைப் போட்டி

திரைப்படத் துறையினரும், கவிஞர்களும் பெருமளவில் அங்கம் வகிக்கும் இந்தக் குழுவில் கடந்த 400 நாட்களில் 40,000 கவிதைகள் பதிவிடப்பட்டிருக்கின்றன. அவையனைத்தும் இந்தக் குழு நடத்தும் போட்டிகளுக்காகவே எழுதப்பட்டு, எழுதியவர்களாலேயே பதிவிடப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

கரோனா பொதுமுடக்க காலத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1-ல் தொடங்கப்பட்ட ‘கவிதை மட்டும்’ வாட்ஸ்-அப் குழு 400 நாட்களைக் கடந்து, ஒரு நாள்கூட இடைவிடாது தினசரி கவிதைப் போட்டிகளை நடத்திவருகிறது. உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் இதன் அங்கத்தினர்களாக உள்ளார்கள். அவர்களுக்கு தினமும் ஒரு கவிதைத் தலைப்பை வாட்ஸ்-அப் மற்றும் யூடியூப் சேனல் வாயிலாக அறிவித்து, கவிதைப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

நடுவர்களாகத் திரைத் துறை ஆளுமைகள்

போட்டிக்கு நடுவர்களாக அறிவிக்கப்படுகிறவர்கள் அனைவருமே திரைப்படத் துறையைச் சேர்ந்த ஆளுமைகள் என்பது இன்னொரு சிறப்பு. கவிஞர்கள் யுகபாரதி, ஏகாதசி, சிநேகன், விவேகா, யுரேகா, குட்டி ரேவதி, இயக்குநர்கள் வசந்தபாலன், கே.எஸ்.அதியமான், பரதன், பேரரசு, ராஜூ முருகன், சசி, கதிர், இசையமைப்பாளர்கள் பரணி, ஜூபின், ஸ்ரீராம், தாஜ்நூர் ஆகியோர் இதுவரை நடுவர்களாக இருந்திருக்கிறார்கள். இன்றளவும், இவர்களில் யாராவது ஓரிருவர் போட்டிக்கு நடுவர்களாக இருந்து சிறந்த கவிதைகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

போட்டி முடிவுகள் உடனுக்குடன் தெரிவிக்கப்படுவதால், கவிஞர்கள் படு உற்சாகமாகப் போட்டிகளில் பங்கேற்கிறார்கள். போட்டி முடிவுகளை காணொலியாகவும் வெளியிடுவதால், போட்டியில் கலந்துகொள்ளும் கவிஞர்களுக்கு ஒருவித எதிர்பார்ப்பு அனுபவமாகவே அமைந்து விடுகிறது. அதனால் இதில் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்கிறார்கள் கவிகள்!

‘கவிதை மட்டும்’ வாட்ஸ்-அப் குழுவை நிர்வகிக்கும் என்.ஏகம்பவாணன்
‘கவிதை மட்டும்’ வாட்ஸ்-அப் குழுவை நிர்வகிக்கும் என்.ஏகம்பவாணன்

வாட்ஸ்-அப் குழுவை நிர்வகிக்கும் என்.ஏகம்பவாணனும் திரைத் துறையைச் சேர்ந்தவர்தான். திரைப்பட வசனகர்த்தா, இணை இயக்குநர் என திரைத் துறையில் தடம் பதித்தவர் இவர். 25 ஆண்டுகள் திரைத் துறையில் பணி அனுபவம் பெற்ற இவர், இயக்குநர்கள் சங்கத்தின் ‘தமிழ்த்திரை’ மாத இதழில் பொறுப்பாசிரியராகவும், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் இணைச் செயலாளராகவும் இருந்துவருகிறார்.

கவிகளுக்கான பிரத்யேகக் குழு

‘கவிதை மட்டும்’ வாட்ஸ்-அப் குழுவைப் பற்றி நம்மிடம் உற்சாகத்துடன் பேசினார் ஏகம்பவாணன்.

“கவிதைகளுக்கு மட்டுமாகவே ஏற்படுத்தப்பட்ட மேடை இது. முழு நேரமும் கவிதைகளுக்கான களமாக இந்தக் குழு இயங்குகிறது. இதில் கவிதைகளைத் தவிர வேறு எதற்கும் இடமில்லை. தினந்தோறும் மாலை 7 முதல் இரவு 10 மணி வரை கவிதைப் போட்டிக்கான நேரம். காலையில் அன்றைய கவிதைப் போட்டிக்கான தலைப்பையும், யார் நடுவர் என்பதையும் தனித்தனிக் காணொலியாகப் பதிவிட்டுவிடுவோம்.

போட்டிக் கவிதைகளைப் போட்டிக்கான பதிவு நேரத்தில் மட்டுமே கவிஞர்கள் பதிவிட வேண்டும். அதற்குப் பின் பதிவிடும் கவிதைகள் ஏற்றுக்கொள்ளப்படாது. ஆனால், தாமதத்திற்கு வேலையே இல்லை. போட்டி ஆரம்பமானதுமே உலகெங்குமிருந்தும் கவிதைகள் வந்து குவிந்துவிடுகின்றன. அந்தக் கவிதைகளைத் தொகுத்து உடனே நடுவருக்கு அனுப்பிவிடுவோம். அவர் சிறந்த கவிதையைத் தேர்ந்தெடுத்து அறிவிப்பார்.

அதுதவிர இரவு 10 முதல் மறுநாள் காலை 10 மணி வரையிலும் ஹைக்கூ நேரம். அதற்கும் ஏதாவது ஒரு தலைப்பு வழங்கப்படும். அத்தலைப்பில் ஹைக்கூ கவிதை எழுதலாம். இவை தவிர சிறப்புக் கவிதை நேரமும் உண்டு. காலை 10 முதல் மாலை 5 மணி வரையிலும் எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் கவிதைகள் எழுதலாம். அந்த நேரத்தில் கவிஞர்கள் பதிவுசெய்யும் கவிதைகளுக்கு மாலையில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

குழு உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். அதிக வாக்குகள் பெற்ற கவிதைகள் சிறப்புக் கவிதைகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பிக்கப்படும். வாக்கெடுப்பு நடப்பதாலும், அன்றைய தினமே முடிவுகள் வருவதாலும் தரமான கவிதைகளைப் படைக்க வேண்டும் என்ற ஆர்வம் கவிஞர்கள் மத்தியில் இயல்பாகவே உருவாகியிருக்கிறது” என்றார் ஏகம்பவாணன்.

க.தங்கபாபு
க.தங்கபாபு

கவித்திறனுக்கான களம்

நானூறு நாட்களிலுமே தவறாமல் போட்டியில் பங்கெடுத்திருக்கிறார் கவிஞர் இரா.வசந்தகுமார். இவரைப் போல பலரும் பெரும்பாலான நாட்களில் கவிதைப் போட்டியில் கலந்துகொள்கிறார்கள். இந்தக் குழு நடத்திய கவிதைப் போட்டிகளில் பலமுறை முதல் பரிசு பெற்ற கவிஞர் க.தங்கபாபுவிடம் பேசினோம்.

“பல்வேறு கவிதைக் குழுக்களில் தொடர்ந்து இயங்கிவருகிறேன். ஆனாலும் ‘கவிதை மட்டும்’ வாட்ஸ்-அப் குழு என்னை ரொம்பவே வசீகரித்து வருகிறது. நமது கவித்திறனுக்காகச் சரியான களமாக இது இருக்கிறது. போட்டியின் தலைப்புகள் ஈர்க்கும் விதமாக இருப்பதால், எப்படியாவது அதில் கலந்துகொண்டு கவிதை எழுத வேண்டும் என்ற தவிப்பே வந்துவிடுகிறது. வெற்றிபெறும் கவிஞர்கள் உடனுக்குடன் கவுரவிக்கப்படுவது கவிஞர்களுக்கு மேலும் உத்வேகத்தைத் தருகிறது” என்றார் தங்கபாபு.

கவிதைகளால் இயங்கும் இந்தக் கவிஞர்களைக் கொண்டாட, ‘கவிதை மட்டும்’ என்ற பெயரிலேயே ஒரு மாத இதழையும் தொடங்கியிருக்கிறார் ஏகம்பவாணன்.

மாறிவரும் காலத்துக்கு ஏற்ப தமிழும் தன்னைத் தகவமைத்துக்கொண்டு செழித்து வளரும் என்பதற்கு, ‘கவிதை மட்டும்’ வாட்ஸ்-அப் குழுவும் ஓர் உதாரணம்!

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.