தமிழுக்கு புதிய சொற்களைத் தந்த தமிழறிஞர் வ.உ.சி!

அரிய தகவல்களை அடுக்கும் ரவிக்குமார் எம்.பி.,
கருத்தரங்கில் ரவிக்குமார் உரை
கருத்தரங்கில் ரவிக்குமார் உரை

இலக்கிய அமைப்புகளின் சார்பில், விழுப்புரத்தில் நடத்தப்பட்ட வ.உ.சி-யின் 150-வது பிறந்தநாள் கருத்தரங்கில் பேசிய விசிக எம்பி-யான ரவிக்குமார், “வ.உ.சி-யின் தியாகத்தை நாம் முதன்மைப்படுத்திப் பேசுகிறோம். ஆனால், அதோடு தமிழுக்கு பல புதிய சொற்களையும் தந்தவர் அவர். அவரது தமிழ்த்தொண்டும் பேசப்பட வேண்டும்” என்று புதிய தகவல் ஒன்றையும் சொன்னார். அறியாத பல வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கியதாக இருந்த ரவிக்குமாரின் உரையிலிருந்து...

சிதம்பரனார் குறித்துப் பேசும்போது தியாகம் என்பதை முதன்மைப்படுத்திப் பேசுகிறோம். முன்னோர் செய்த தியாகத்தை மதித்துப் போற்ற வேண்டும் என்பது நமக்கு மரபுரீதியாக போதிக்கப்பட்ட ஒன்றாகும். அப்படிப் போற்றுவதன் மூலம் நாம் அவர்களுக்கு கடன்பட்டிருக்கிறோம் என்பதை உறுதி செய்கிறோம். எதிர்கால சந்ததியும் அவ்வாறு கடன்பட்டிருக்கிறது என்று சுட்டிக் காட்டுகிறோம். ஒருவருடைய செயல் தியாகம் என்ற தன்மையைப் பெறவேண்டுமென்றால், அவர் சிலவற்றை இழக்கவேண்டும் என்பது மட்டுமன்றி, அதனால் ஒன்றை இந்தச் சமூகம் பெறவேண்டும் என்பதும் அவசியமாகும்.

வ.உ.சி அவர்கள் செய்த தியாகம் இந்த நாட்டுக்கு சுதந்திரத்தைக் கொண்டுவருவதில் பங்காற்றியிருக்கிறது. இப்போது நாம் அனுபவித்து வரும் சுதந்திரம் வ.உ.சி போன்ற பலரது தியாகங்களால் பெறப்பட்டதாகும். அந்நிய நாட்டவரின் ஆட்சியை அகற்றிட தன்னாட்சியை நிறுவிட, அவர்கள் தமது வாழ்வைத் தியாகம் செய்தனர். அந்தத் தியாகத்தின் பலன் முழுமையாக உணரப்பட வேண்டும் என்றால் இங்கே அந்நிய ஆட்சி முற்றாக நீக்கப்பட்டு இருக்க வேண்டும்.

வ.உ.சி முதலானவர்களின் தியாகத்தால், போராட்டத்தால் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் அதிகாரம் அகற்றப்பட்டது என்றாலும் அந்த காலனிய ஆட்சிக்கு பதிலாக இன்று புதுவகையான காலனிய ஆதிக்கத்தை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். ‘நாமார்க்கும் குடியல்லோம்...’ என்று சொல்லிக்கொண்டாலும், நம்முடைய விதி அந்நியர்களால் தீர்மானிக்கப்படுகிற நிலையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நேரத்தில், அவர்களின் தியாகத்தின் விளைவு பற்றி அதற்கு இந்த நாடு அளிக்கும் மதிப்பைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

வ.உ.சி சிறையில் பல ஆண்டுகளைக் கழித்திருக்கிறார். அவர் சிறையில் இருந்த காலத்தில் நூல்கள் பலவற்றை எழுதியிருக்கிறார். ஒருவர் சிறைப்படுத்தப்பட்டால் அவரது உடல்தான் சிறைப்படுத்தப்படுகிறது; மனதை ஆட்சியாளர்களால் சிறைப்படுத்த முடிவதில்லை. ஒருவரது மனம் சுதந்திரமாக இருந்தால், அவர் தன்னளவில் சுதந்திரமானவராகவே இருக்கிறார். சுவர்களுக்குள் அடைபடவில்லை என்றாலும் பலர் சுதந்திரம் அற்றவர்களாக இருப்பதை நாம் பார்க்கிறோம்.

வ.உ.சி அவர்கள் சிறையில் இருந்த காலத்தில் என்னவிதமான சித்திரவதைகளை அனுபவித்தார் என்பது முழுமையாக நமக்குத் தெரியாது. பிரிட்டிஷ் ஆட்சிக்கால தண்டனை முறை பற்றி தமிழில் எழுதப்பட்டுள்ள செய்திகள் மிக மிக சொற்பம்தான். காலனி கால போலீஸ் அமைப்பு குறித்து டேவிட் அர்னால்ட் ஒரு நூலை எழுதி இருக்கிறார். ஆனால், தமிழில் பிரிட்டிஷ் ஆட்சிக்கால சிறை மற்றும் தண்டனை முறைகள் பற்றிய நூல்கள் எழுதப்படவில்லை என்றே சொல்லவேண்டும். அதனால், அதுபற்றி நாம் அறிந்தவையெல்லாம் பெரும்பாலும் சுவாரசியமான கதைகளாகவே இருக்கின்றன.

இந்நிலையில், வ.உ.சி அவர்கள் அனுபவித்த துன்பங்களைப் பற்றி நம்மால் யூகிக்க மட்டுமே முடியும். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் தொழுவில் போடுவது என்ற தண்டனை முறை இருந்துள்ளது. 20-ம் நூற்றாண்டின் முற்பகுதிவரை அது, தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் பரவலாக பயன்பாட்டில் இருந்துள்ளதைப் பள்ளு இலக்கியங்கள் மூலமாக நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. தனது நிலத்தில் வேலை செய்யும் விவசாயத் தொழிலாளியை நில உடைமையாளர் தொழுவில் போட்டு தண்டித்தது பற்றிய செய்திகள், பள்ளு இலக்கியங்களில் பதிவாகியுள்ளன.

ஒருவரது கைகளையும் தலையையும் தொழுக்கட்டைக்குள் வைத்துப் பூட்டிவிடுவது என்பதுதான் அந்தத் தண்டனை. நாள் முழுவதும் அவர் அப்படியே நிற்க வேண்டும். ஒருநாள் அல்ல பல நாட்கள் கூட அவர் அந்தத் தொழுவிலேயே கிடக்க வேண்டும். அப்படியே செத்துப் போனவர்கள் அநேகம் பேர். அவ்வாறு தொழுவில் போட்டவர்களை காக்கை, கழுகுகள் கொத்தலாம்; நாய், நரிகள் கடிக்கலாம். எந்தப் பாதுகாப்பும் கிடையாது. அவ்வளவு மோசமான தண்டனை முறை அரசாங்கத்தால் மட்டுமின்றி, நில உடமையாளர்களாலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

வ.உ.சி படத்துக்கு மரியாதை
வ.உ.சி படத்துக்கு மரியாதை

அதைப்பற்றி அயோத்திதாசப் பண்டிதர் ‘தமிழன்’ இதழில் எழுதியிருக்கிறார். தொழுவில் போடும் தண்டனை முறையை நீக்க வேண்டும் என்று அரசாங்கத்தை அவர் வலியுறுத்தி இருக்கிறார். காலனிய ஆட்சியாளர்களின் கொடுமைகளை கண்டித்துப் பேசிய தேசிய விடுதலை வீரர்கள், இங்கே இருந்தவர்கள் தமது சொந்த மக்களுக்கு எதிராகச் செய்த ‘தொழுக்கட்டை கொடுமை’யை ஏன் கண்டிக்கவில்லை என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

வாழ்வின் மீது அதிகம் பற்று இல்லாதவராகவே வ.உ.சி இருந்துள்ளார் என்பதை, அவருடைய தன் வரலாற்றின் மூலமாக நாம் அறிந்து கொள்கிறோம். பலமுறை அவர் தனது வீட்டைவிட்டு வெளியேறி ஓடியிருக்கிறார். ஒவ்வொருமுறையும் அவரை அவரது தந்தை சென்று மன்றாடி வீட்டுக்கு அழைத்து வந்தாரென்ற செய்தி, அவரது தன் வரலாற்றில் பதிவாகியுள்ளது. இப்படி இருந்த வ.உ.சி சட்டக் கல்வியை பெற்று வழக்கறிஞராகப் பணியாற்றினார். அவர், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளில் ஆரம்ப காலம் தொட்டே ஆர்வம் உள்ளவராக இருந்திருப்பதை அறிய முடிகிறது.

காங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்டு 13 ஆண்டுகளில், அதன் கிளையைத் தூத்துக்குடியில் வ.உ.சி நிறுவுகிறார். அந்த அளவுக்கு அக்கட்சியின் மீது அவருக்கு ஈடுபாடு இருந்துள்ளது. அவர் சுதேசி கப்பல் நிறுவனத்தை ஆரம்பித்தது, பிரிட்டிஷ் ஆட்சியாளர் களுக்குப் பொருளாதார ரீதியான சவாலை ஏற்படுத்தியது. அதனால், அற்ப காரணங்களைச் சொல்லி அவர் பிரிட்டிஷ் அரசால் சிறையில் அடைக்கப்படுகிறார். அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. அந்தச் செய்தியைக் கேட்ட அவருடைய சகோதரர்களில் ஒருவர் மனம் பேதலித்து நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார் என்பது துயரம் தரும் செய்தியாகும்.

சிறையிலிருந்து வெளிவந்த பிறகு வ.உ.சி பல துறைகளில் ஈடுபட்டு சாதனை புரிந்துள்ளார். அவற்றையெல்லாம் இங்கே விரிவாகப் பேசுவதற்குக் காலம் போதாது. அவர் தமிழ் மொழிக்குச் செய்த பங்களிப்புகளில் குறிப்பாக, புதிய சொற்களை உருவாக்கியது பற்றி மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் நவீனத்துவம் இந்தியாவில் பரவலாக அறிமுகமாகிறது. அதன் அங்கமாகவே ஜனநாயகம் என்கின்ற கருத்தாக்கமும் இங்கே பேசப்படுகிறது. அந்தச்சூழலில், இங்கே அறிமுகமான நவீன அறிவியல் நவீன சிந்தனைகளையெல்லாம் தமிழ்மொழியில் எடுத்துரைப்பதற்குப் புதியசொற்களை உருவாக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. மொழி தன் சொற்கிடங்கை விரிவுபடுத்திக் கொள்ளவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. புதிய சிந்தனைகள் புதிய சொற்களை உருவாக்க வேண்டிய தேவையை ஏற்படுத்துகின்றன

அப்படி புதிய சொற்களை உருவாக்குவதற்கென்றே ராஜாஜி ஒரு பத்திரிகையை நடத்தினார் என்ற செய்தி கவனத்துக்குரியது. இன்று எத்தனையோ விதமான பத்திரிகைகள் தமிழில் நடத்தப்படுகின்றன, இணைய இதழ்கள் இருக்கின்றன. ஆனாலும்கூட சொல் உருவாக்கத்துக்கென ஒரு பத்திரிகை இங்கே இல்லை. ஆனால், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னால் அதன் தேவையை உணர்ந்து இங்கே பத்திரிகையை நடத்தி இருக்கிறார்கள்.

ஆங்கிலத்தின் வழியாக அறிமுகமான அறிவியல் சிந்தனைகளை நவீன சிந்தனைகளை தமிழிலே விவரிக்கும்போது, இங்கிருந்த தலைவர்களுக்குப் புதிய சொற்களைக் கையாள வேண்டிய தேவை எழுகிறது. அன்றைய தேசிய அரசியலில் இருந்த தலைவர்களில் பெரும்பாலோர் சமஸ்கிருதத்தை, எவ்விதமான தடையும் இல்லாமல் ஏற்றுக்கொண்டனர். அதற்கு அவர்களுடைய உயர்சாதிப் பின்புலமும் ஒரு காரணமாக இருந்தது என்பதை மறுக்க முடியாது.

புதுமைக்கு பேர்போன மகாகவி பாரதி கூட சமஸ்கிருதத்தின் செல்வாக்கிலிருந்து விடுபடவில்லை. ராஜாஜியால் நடத்தப்பட்ட பத்திரிக்கையில் ஐரோப்பிய பதங்களை அப்படியே தமிழில் எழுதுவது தவறு என்று கண்டித்துள்ளனர். அப்படி எழுதினால், அது ‘மொழி விபச்சாரத்துக்கு ஒப்பாகும்’ என்று கடுமையாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆங்கிலத்துக்கு எதிராக அப்படி கடுமையாகப் பேசியவர்கள், சமஸ்கிருதத்தைத் தமிழ் மொழியில் அப்படியே எழுதுவது பற்றி எவ்வித குற்றவுணர்வும் இல்லாமல் இருந்தது, அவர்கள் சமஸ்கிருதத்தை அந்நிய மொழியாகக் கருதவில்லை என்பதையே காட்டுகிறது. தேசியவாதத்தின் உள்ளீடாக அப்போதே இந்து மதப் பற்றும், சமஸ்கிருத வழிபாடும் இருந்திருக்கின்றன என்பதைத்தான் நாம் அவர்களிடம் பார்க்கிறோம்.

‘ஆங்கிலத்துக்கு இணையான தமிழ்ப் பதத்தை முதலில் தேட வேண்டும். அவ்வாறு கிடைக்கவில்லை என்றால், சமஸ்கிருதத்தைப் பயன்படுத்த வேண்டும்’ என்று பாரதி ஆலோசனை கூறியுள்ளார். ‘சமஸ்கிருதத்தில் ஒரு சொல்லை உருவாக்கி விட்டால், அதை நாடுமுழுவதும் எளிதாகப் பயன்படுத்தலாம்’ என்றும் அவர் கூறியிருக்கிறார். ஆனால் வ. உ. சி அவர்களோ, ‘எந்த மொழியையும் நம் தமிழ் மக்களில் எவரும் எளிதில் அறியுமாறு சமஸ்கிருத சொற்களின் கலப்பு இல்லாத தனித் தமிழில் மொழிபெயர்த்து கொடுக்கும் திறமை உடையேன்’ என்று தன்னைப்பற்றிக் குறிப்பிடுகிறார்.

சொன்னதோடு மட்டுமின்றி, சிறையில் இருந்த காலத்தில் ஆங்கிலத்தில் இருந்து சில நூல்களை மொழிபெயர்க்கும்போது புதிய சொற்களை அவர் உருவாக்கியும் இருக்கிறார். இன்று நாம் பயன்படுத்துகிற சில சொற்கள் அவரால் அறிமுகப் படுத்தப்பட்டவைதான். ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்தது மட்டுமல்ல... வட சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களையும் அவர் உருவாக்கியிருக்கிறார்.

‘இன்பம்’ என்றால் ‘பொறிக் களிப்பு’; ‘சுகம்’ என்றால் ‘மனக் களிப்பு’ என்று அவர் அளித்த விளக்கம் கவனிக்கத்தக்கது. சமஸ்கிருதத்தை எழுதுவதற்கான கிரந்த எழுத்துகளை தமிழ் மொழியில் சேர்க்க வேண்டும் என்று பாரதி, அரவிந்தர் முதலானோர் வாதிட்டபோது அதை மறுத்து, அப்படி வாதிடுபவர்கள் தமிழில் உள்ள ழ, ற, ன முதலான எழுத்துகளை சமஸ்கிருதத்திலும் வங்காள மொழியிலும் சேர்க்குமாறு வலியுறுத்துவார்களா என்று அவர் கேட்டார்.

நாம் வ.உ.சியின் தமிழ்ப் பணியை பாராட்டிக் கொண்டு இருந்தால் மட்டும் போதாது, நாமும் நம்மால் ஆன பங்களிப்பைச் செய்ய வேண்டும். நாம் என்ன தமிழறிஞரா, தமிழுக்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்று நினைக்க வேண்டாம். நாமும் நம்மால் ஆன பணியைச் செய்ய முடியும். தமிழில் இருந்த எத்தனையோ சொற்கள் இப்பொழுது வழக்கொழிந்து போய்விட்டன. ஔவை ஒரு பாடலில் பாணரைக் குறிக்க ‘அகவன்’ என்று ஒரு சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். அது இப்போது புழக்கத்தில் இல்லை.

சட்டரீதியாக சில சொற்கள் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கின்றன. அமெரிக்காவில் ‘நீக்ரோ’ என்ற சொல்லும், இங்கே ‘அரிசன்’ என்ற சொல்லும் அப்படித்தான் தடை செய்யப்பட்டன. ஆனால், தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதன் மூலமாக சில சொற்களை நாம் மீட்க முடியும். ஒரு நபர் ஆண்டொன்றுக்கு ஒரு சொல்லை அப்படி மீட்டு எடுத்தாலே போதும், ஏராளமான சொற்களை நாம் மீண்டும் புழக்கத்துக்குக் கொண்டு வந்துவிடலாம்.

அதற்குத் தேவை தமிழில் மிகப்பெரிய ஆராய்ச்சியோ புலமையோ அல்ல. திட்டமிட்ட முறையில் தொடர்ச்சியாக ஒரு சொல்லை நாம் பயன்படுத்தினால், அது பயன்பாட்டுக்கு வந்துவிடும். அவ்வாறு தமிழைப் புதுப்பிக்கவும் பழந்தமிழ் சொற்களை மீட்கவும் நம்மால் ஆன பங்களிப்பைச் செய்வோம். அது தமிழுக்குச் செய்யும் நற்பணியாக மட்டுமின்றி, வஉசி போன்ற தமிழறிஞர்களுக்குச் செய்யும் மரியாதையாகவும் இருக்கும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in