சுதாவாகிய நான்...

சமூகத்தை திரும்பிப் பார்க்க வைத்த திருநங்கை!
நூலின் முகப்பு
நூலின் முகப்பு

மூன்றாம் பாலினத்தவர்கள் தங்களுக்கு இருந்த தடைகளை எல்லாம் தகர்த்து இன்று சகல துறைகளிலும் கோலோச்சி வருகின்றனர். அந்தவகையில் இலக்கியம் பேச வந்திருக்கிறார் திருநங்கை சுதா.

‘சகோதரன்’ என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் செயற்பாட்டாளரான சுதா இப்போது அகவை ஐம்பதைத் தொட்டிருக்கிறார். அந்தவகையில் ஒரு திருநங்கையின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய மனிதர்களுக்கு நன்றி சொல்லும் வகையில், ‘திருநங்கை சுதா 50’ என்ற தனது படைப்பை வெளிக்கொண்டு வருகிறார்.

நிகழ்ச்சி தொகுப்பாளராக  சுதா ...
நிகழ்ச்சி தொகுப்பாளராக சுதா ...

சுதாவின் அம்மா சென்னை; அப்பா திருநெல்வேலி. பிழைப்புக்காக சென்னைக்குக் குடிபெயர்ந்த இவர்களது குடும்பத்தில் சுதாவோடு பிறந்தவர்கள் மொத்தம் 5 பேர். அதில் மூன்றாவது பிள்ளையான சுதா, 8 வயதிலேயே தனக்குள் பாலின மாற்றத்தை உணர்ந்தார். மூன்றாம் பாலினத்தவரை பொதுச்சமூகம் கேலியாகப் பார்த்தக் காலத்தில் நிராகரிப்பின் நிழலாக இருந்த சுதா, இன்று திருநங்கைகளின் மத்தியில் தன்னம்பிக்கைச்சுடர்! மூன்றாம் பாலினத்தவர்களின் வாழ்வை மையப்படுத்திய 80 சிறுகதைகளை எழுதியிருக்கும் சுதா, அவற்றையும் நூலாக்கும் முனைப்பில் இருக்கிறார்.

நெல்லையில் நடைபெற்றுவரும் புத்தகத் திருவிழாவில், சுதா எழுதிய, ’திருநங்கை சுதா 50’ என்ற நூலும் வெளியிடப்படுகிறது. அதற்கான முன்னேற்பாடுகளில் இருந்த சுதாவிடம் காமதேனு மின்னிதழுக்காகப் பேசினோம்.

”கடந்த 30 ஆண்டுகளாக நான் திருநங்கைகளின் சமூக மேம்பாட்டிற்காக பணிசெய்து வருகிறேன். அதற்காக ‘சகோதரன்’ தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆக்கபூர்வ பணிகளை முன்னெடுத்து வருகிறேன். திருநங்கைகளுக்கான பிரத்யேக நிகழ்ச்சிக் குழுவையும் நடத்திவருகிறேன். 1992-ல் நான் என் வீட்டை விட்டு வெளியேறினேன். இன்று போல, பொதுச்சமூகத்தில் மூன்றாம் பாலினத்தவர் குறித்த புரிதலே இல்லாத காலம் அது. இன்னும் சொல்லப்போனால், திருநங்கை, திருநம்பி என்னும் நல்ல மரியாதையான சொற்கள்கூட அப்போது உதயமாகி இருக்கவில்லை. கொச்சையான வார்த்தைகளைச் சொல்லி பலரது நிராகரிப்பிற்கும் ஆளாகி இருக்கிறேன். அந்தத் தருணத்தில் எல்லாம் என் அம்மாவும், என் மூத்த சகோதரியும் மட்டுமே எனக்கு ஆறுதல்” என்று தனது ஃபிளாஷ் பேக்கை சொன்னார் சுதா.

தனது கலை திறமைக்காக தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்றிருக்கிறார் சுதா. மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தில் திருநங்கைகளை பயன்படுத்தியது, தமிழக அரசின் ஆவின் பொருட்களை மக்கள் விரும்பி நுகர வேண்டும் என்பதை வலியுறுத்தி திருநங்கைகளைக் கொண்டு வீதி நாடகம் அரங்கேற்றியது, திருநங்கைகளைக் கொண்டு 60 மணிநேரம் இடைவிடாத கலை நிகழ்ச்சி நடத்தியது என சுதாவின் பொதுவெளி பங்களிப்புகள் அதிகம்.

தனது தற்போதைய தயாரிப்பான, ‘திருநங்கை சுதா 50’ நூலைப் பற்றி பேசிய சுதா, “கடந்த 30 ஆண்டுகளாக எனது பயணத்தில் எனக்கு உதவிய நல்ல ஆளுமைகளை மக்கள் முன்வைக்கும் படைப்பாகத்தான் இந்த நூலை எழுதி இருக்கிறேன். இதில் மொத்தம் 30 ஆளுமைகள் வருகிறார்கள். அதில் 5 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள்.

90-களில் எல்லாம் திருநங்கையைப் பார்த்தால் பேருந்துகூட நிற்காது. அப்போது என் சொந்த வீட்டிலேயே சிலரால் தனிமைப்படுத்த வேண்டிய சூழலுக்கு ஆளானேன். ஒருகட்டத்தில் சக மாணவர்களும் கேலிசெய்ய, பத்தாம் வகுப்போடு பள்ளிக்குப் போகவில்லை. அதன் பிறகு தொழிற்பயிற்சி வகுப்புகளில் சேர்ந்துவிட்டார்கள். அங்கேயும் ஒரேநாளில் என்னைக் கண்டுபிடித்து விடுவார்கள். இதனால் அங்கே இருந்தும் வெளியேறிவிடுவேன். அந்த சமயங்களில் எல்லாம் எனக்கு இளைப்பாறுதலாக இருந்ததே வாசிப்பு பழக்கம்தான்” என்றார்.

கலைஞர் டிவி பேச்சரங்கத்தில் பரிசுபெற்ற போது...
கலைஞர் டிவி பேச்சரங்கத்தில் பரிசுபெற்ற போது...

பள்ளியில் அதிகம் படிக்காவிட்டாலும் தொடர்ந்து நூலகங்களுக்குச் சென்று வாசிக்கும் வழக்கம் சுதாவுக்கு இருந்தது. அப்படித்தான் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த ஒரு கட்டுரையைப் படித்த சுதாவிற்கு, அதை எழுதிய சகோதரன் என்னும் அமைப்பைத் தொடங்கிய சுனில் மேனனோடு அறிமுகம் கிடைத்தது. அவரிடம், திருநங்கையாக தான் அனுபவிக்கும் சிக்கல்களைச் சொல்ல, “இதில் உன் தவறே இல்லை. இது ஹார்மோன் மாற்றத்தினால் நிகழ்வது. உன்னைப் போல் லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள்” என தன்னம்பிக்கையூட்டிய சுனில், தனது சகோதரன் நிறுவனத்திலேயே அவருக்கு ஒரு வேலையும் கொடுத்துள்ளார்.

தனது இந்த நூலில் சுனில் மேனன் பற்றியும் எழுதியிருக்கிறார் சுதா. நடிகை ஷகிலா, எஸ்.வி.சேகர், பாடகி ஜானகி என திரையுலக ஆளுமைகள் பற்றியும் பேசுகிறது இவரின் நூல். அவர்களுடனான தனது நட்பு குறித்தும் பேசினார் சுதா.

“நடிகை ஷகிலா திருநங்கை சமூகத்தின் மீது அளவுகடந்த பிரியம் கொண்டவர். சமீபத்தில்கூட ஒரு திருநங்கையை தத்தெடுத்து வளர்த்தவர். என்னை அவரது முதல் சகோதரி எனச் சொல்லுவார். எனது பிறந்தநாளைக் கூட தனது வீட்டிற்கே அழைத்துக் கொண்டாடியவர். என்னை திருநங்கையாக ஒதுக்கிவிடாமல் அரவணைத்த அவருக்கு மரியாதை செய்ய அவரைப்பற்றியும் எழுதியுள்ளேன்.

எஸ்.வி.சேகர் சார் 1998 -ல் ஒரு நிகழ்ச்சி நடத்தினார். அதற்கு நானும் போயிருந்தேன். அப்போது அவர் திருநங்கைகள் பற்றியும் பேசினார். அப்போது நான் அவரிடம், ‘எங்களைப்பற்றி பொதுவெளியில் புரிதல் உருவாக்கும் வகையில் யாரும் பேசுவதில்லையே’ என வருத்தப்பட்டேன். மறுவாரமே நேரடியாக என் வீட்டிற்கே வந்துவிட்டார். வீட்டு வாசலில் குவிந்திருந்த மக்கள் கூட்டத்தின் நடுநாயகமாக நின்றுகொண்டு, ‘சுதாவும், மற்ற திருநங்கைகளும் என் சகோதரிகள். பகுதிவாசிகளான நீங்கள் அவர்களை கேலி செய்யக்கூடாது. பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும்’ என புரிதலை ஏற்படுத்திச் சென்றார். அன்றைய சூழலில் இது எவ்வளவு பெரிய ஆறுதல்? அதேபோல் தனது நாடக அரங்கேற்றத்தின் போது திருநங்கைகளை முன்வரிசையில் அமரவைப்பார் எஸ்.வி.சேகர். அதனால் தான் அவரைப் பற்றியும் எழுதியிருக்கிறேன்.

ஜானகி அம்மா 2008-ம் ஆண்டு நான் ஏற்பாடு செய்த கச்சேரியில் வந்து பாடினார். அதன்பிறகு தான் என் நிகழ்ச்சிகளுக்கு மதிப்பு கூடியது. அதனால் அவரையும் எனது நூலில் நினைவுகூர்ந்திருக்கிறேன்” என்றார் சுதா.

நிறைவாக நம்மிடம் பேசிய அவர், “ஒரு குடும்பத்தில் ஆண் பிள்ளையும், பெண் பிள்ளையும் எது செய்தாலும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் மூன்றாம் பாலினத்தவர்களான எங்களைப் போன்றவர்கள், சாதித்தால் மட்டுமே இந்த உலகம் திரும்பிப் பார்க்கிறது. சறுக்கினால் கீழே தள்ளி மிதித்து விடுகிறார்கள். அன்றைக்கு என்னை வெறுத்து ஒதுக்கிய எனது சுற்றம் இப்போது என்னை குடும்பத்தில் சேர்த்துக் கொள்ள நினைக்கிறது. ஆனால், அன்றைக்கு எனக்கு ஆறுதலாய் நின்ற எனது அம்மாவிடமும், சகோதரியோடும் மட்டுமே நான் தொடர்பில் இருக்கிறேன். தள்ளிநின்று அவர்களை நேசிக்கிறேன். எனக்கான இந்தப் பிறவியையும் இப்போது அமையும் எனக்கான இந்த வாய்ப்புகளையும் நான் சார்ந்த மூன்றாம் பாலினத்து சொந்தங்களை மேம்படுத்துவதற்காக இறைவன் எனக்குக் கொடுத்த வரமாகவே நினைக்கிறேன்” என்று நெகிழ்ச்சியோடு சொல்லி முடித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in