தொ.ப., இளங்குமரனார் நூல்கள் நாட்டுடைமை

குடும்பத்தினர் மகிழ்ச்சி
தொ.பரமசிவன், இரா.இளங்குமரனார்
தொ.பரமசிவன், இரா.இளங்குமரனார்

எச்சங்களாகவும், மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை, தன் கட்டுரைகள் வாயிலாக உலகறியச் செய்தவர் பேராசிரியர் தொ.பரமசிவன். ஓர் ஆய்வு எப்படி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு முன்னுதாரண நூலாக ஆய்வாளர்கள் இன்றும் போற்றுவது, இவரது ’அழகர்கோயில்’ நூலையே.

பேராசிரியர் தொ.ப.வின் ஆரம்பகால நூல்கள் சொந்தப் பதிப்பாகவும், சில நூல்கள் சின்னச் சின்ன பதிப்பகங்கள் வாயிலாகவும் வெளிவந்தன. இதனால், அவை எல்லோருக்கும் கிடைப்பதில் சிரமங்கள் இருந்தன.

எனவே, இவரது நூல்கள் அனைத்தையும் அரசுடமையாக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். அது பரிசீலனையில் இருப்பதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஏற்கெனவே கூறிவந்தார்.

இதேபோல பெரும்புலவர் இரா.இளங்குமரனாரின் நூல்களையும் அரசுடைமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை, அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் வைக்கப்பட்டது. இவ்விரு கோரிக்கைகளையும் ஏற்று, முனைவர் தொ.பரமசிவன், பெரும்புலவர் இரா.இளங்குமரனார் ஆகியோரது நூல்களை அரசுடைமையாக்குவதாக ஆகஸ்ட் 31-ம் தேதி சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

அரசின் இந்த அறிவிப்புக்கு தொ.ப.வின் மகன் மாசானமணி, நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விரைவில் அமைச்சர் தங்கம் தென்னரசுவை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேபோல, பெரும்புலவர் இரா.இளங்குமரனாரின் மகன் மதுரை இளங்கோவும் அரசுக்கு நன்றி தெரிவித்தார். ”அய்யாவின் நூல்கள் பல, மறு பதிப்பு காணாமலேயே போய்விட்டன. அரசின் இந்த அறிவிப்பின் மூலம் இனி, யார் வேண்டுமானாலும் அய்யாவின் நூல்களை அச்சிட்டு விற்கலாம் என்பதால் இனி அவரது கருத்துகள் நாடு முழுக்கப் பரவும்” என்றார் இளங்கோ.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in