குமரியில் பாரதியாரை கொடிகட்டிக் கொண்டாடிய பாஜக!

குமரியில் பாரதியாரை கொடிகட்டிக் கொண்டாடிய பாஜக!

பாரதியார் நினைவு நாளை குமரி மாவட்டத்தில் பாஜக பாஜகவினர் அனைத்து ஊராட்சிகளிலும் அனுஷ்டித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது. அதேநேரம் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரதியாரின் பேனாவின் தலைகிரீடம் கழற்றப்படும் போதெல்லாம் ஆங்கிலேயனின் ஆட்சிக்கிரீடம் ஆட்டம் கண்டது. பாரதி தேசியக் கவி என அழைக்கப்பட்டாலும், விடுதலை வேள்வியில் தூங்கிக்கிடந்த தமிழர்களையே அவர் பாடல்கள் தட்டி எழுப்பியது. தனக்கு பலமொழிகள் தெரிந்திருந்தாலும், ‘ யாம் அறிந்த மொழிகளில் தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ என்றார் பாரதி. பாரதி தனது எழுத்துக்களில் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு மானுடத்துக்கே முக்கியத்துவ்ம் கொடுத்தார். பட்டியல் இன மக்களை அக்கிரஹாரத்துக்கு உள் அழைத்துச் சென்று பூனூல் போட்டு புரட்சி செய்தவர் பாரதி. காக்கையும், குருவியும் எங்கள் கூட்டம் என சொன்னவர். சாதிகள் இல்லையடி பாப்பா என பாப்பாக்களுக்கு புத்தி சொல்லி சாதிக்கு எதிராக சாட்டை சுழற்றினார். மண் விடுதலையையும், பெண் விடுதலையையும் ஒரு சேர பாஞ்சாலி சபதத்தில் வெளிப்படுத்திய பெருமையும் அவருக்கு உண்டு.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாரதி நினைவுநாளான செப்டம்பர் 11 - ம் தேதி, மகாகவி நாளாகக் கொண்டாடப்படும் என்பது உள்ளிட்ட 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். அதேநேரம் திமுக, அதிமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகள் கடைக்கோடி கிராமம் வரை பாரதியின் நினைவுநாளைக் அனுஷ்டிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் பாரதியின் பார்வை புரட்சிகரமானது. அவரது சாதிகள் இல்லையடி பாப்பாவின் நீட்சி தான் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கக்கோரிய பெரியாரின் பாதை. திராவிடக் கட்சிகளால் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்துக்கும் முன்னோடி பாரதி தான். ஆம், பெண்கல்விக்கு வித்திட்டது, விதை போட்டது பாரதி தான். வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிவைக்கும் விந்தை மனிதர்கள் தலைகுனிந்தார் என பாடினார் பாரதி. பெண் கல்விக்கு திராவிடக் கட்சிகள் ஏராளம் சலுகைகள் வழங்கின. தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் கூட பட்டம் படித்த பெண்களுக்கு கூடுதல் நிதி வழங்கப்பட்டு வருகிறது.

இப்படியெல்லாம் திராவிடக் கட்சிகள் பாரதியின் கருத்துருக்களில் இருந்து நிறையவே திட்டங்களை வகுத்திருந்தாலும், திராவிடக் கட்சியின் கடைக்கோடி கிளைகள் வரை பாரதியைக் கொண்டாடவில்லை.

இந்நிலையில் பாஜக இவ்விஷயத்தை கையில் எடுத்துள்ளது. குமரி மாவட்டத்தில் ஒன்றியம், கிராம ஊராட்சிகள் வாயிலாக பாரதியாரின் புகைப்படம் வைத்து அவருக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்தக் கூட்டங்களில் பாரதியாரின் படத்தின் இருபுறத்திலும் பாஜக கொடியும் கட்டியிருந்தனர். இதைப் பார்த்துவிட்டு, “பாரதியார் போன்ற தமிழுக்கு பெருமை சேர்ந்த, விடுதலை உணர்வை ஊட்டிய தலைவருக்கு ஒரு குறிப்பிட்ட கட்சியின் கொடியைக் கட்டி அவரது புகழை சுருக்குவது நியாயமானதா என தமிழ் ஆர்வலர்கள் புலம்புகிறார்கள். குழந்தைகள் இதைப் பார்த்தால் பாஜகவில் பாரதியார் இருந்தார் என்பது போல் தோற்றத்தைத் தந்துவிடாதா என்பது அவர்களின் அச்சம்.

பாரதியார் இறந்தபோது அவர் உடலைச்சுற்றியிருந்த ஈக்களைவிட வந்திருந்தோர் எண்ணிக்கை குறைவு. வாழ்ந்த காலத்தை விட்டுவிடலாம். பாரதி எல்லாருக்குமானவர். தேசியம், திராவிடம், தமிழ் தேசியம் என சிந்தாந்தங்களின் எந்த எல்லை யினூடும் கொண்டாடப்பட வேண்டிய மகத்தான கவி பாரதி என்பதை அனைவரும் நினைவில் கொள்வது நல்லது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in