அரபு நாடுகளில் ஒலிக்கும் தமிழ்!

கவனம் குவிக்கும் கல்லூரிப் பேராசிரியர் ஜாகிர் ஹுசைன்
ஆத்திசூடி இசை ஆல்பம் அரபு மொழியில் வெளியீடு...
ஆத்திசூடி இசை ஆல்பம் அரபு மொழியில் வெளியீடு...

தமிழின் பெருமைமிகு அடையாளங்களான திருக்குறளும், ஆத்திசூடியும் இப்போது அரபு நாடுகளிலும் வலம்வருகின்றன. அதிலும் ஆத்திசூடியின் இசை ஆல்பத்தை வாட்ஸ்- அப் ஸ்டேட்டஸ்களாக வைத்திருக்கும் அரேபியர்களும் அதிகம். இதைச் சாத்தியமாக்கியவர் ஜாகிர் ஹுசைன்!

நல்ல தமிழ் இலக்கியங்களைத் தமிழில் இருந்து அரபு மொழிக்கு மொழிபெயர்த்ததோடு, அடுத்தகட்டமாக அவற்றை இசை ஆல்ப வடிவில் இளம் தலைமுறை அரேபியர்களிடமும் கொண்டுசேர்த்து வருகிறார் ஜாகிர் ஹுசைன்.

ஜாகிர் ஹுசைன்
ஜாகிர் ஹுசைன்

அரபு நாடக விழா

தமிழில் இருந்து அரபுக்கும், அரபு மொழியில் இருந்து தமிழுக்குமாக ஓசையின்றி இலக்கிய சேவை செய்துவரும் இவர், சென்னை பல்கலைக்கழகத்தின் அரபுத் துறை பேராசிரியர். கமல்ஹாசனின் மனம் கவர்ந்த அரபுமொழி வசன வழிகாட்டி என்பது இவரது கூடுதல் சிறப்பு.

ஜாகீர் ஹுசைனின் பூர்விகம், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை. பத்தாம் வகுப்பு வரை தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த ஜாகீர் ஹுசைனுக்கு, அப்போதே இலக்கியத்தின் மீது தீராத ஆர்வம். பத்தாம் வகுப்புக்குப் பின்பு அரபு சமயப்புலம் எனப்படும் இஸ்லாமிய மதரீதியான ’பாகவி’ படிப்புக்குச் சென்றவர், அதேசமயத்தில் தனித்தேர்வராக 12-ம் வகுப்பும், தொலைதூரக் கல்வியில் இளங்கலையும் படித்தார். தொடர்ந்து நேரடி வகுப்பில் முதுகலை படித்து, முனைவர் பட்டம் பெற்று, இன்று அரபு மொழிப் பேராசிரியராக உள்ளார். இந்தியாவிலேயே முதன்முறையாக அரபு நாடக விழாவை சென்னையில் நடத்திக்காட்டியதும் இவர்தான்!

ஆத்திசூடி இசை ஆல்பம் அரபு மொழியில்....
ஆத்திசூடி இசை ஆல்பம் அரபு மொழியில்....

அரபுக் கவிஞர்களை வசீகரித்த குறள்!

ஒரு காலைப் பொழுதில் தக்கலையில் ஜாகிர் ஹுசைனைச் சந்தித்தேன். மகத்தான சாதனை புரிந்திருக்கும் சுவடே இல்லாமல், எளிமையாகப் பேசினார்.

“அரபு வெறுமனே வழிபாட்டு மொழி மட்டும் அல்ல. உலக அளவில் 22 நாடுகளில் அது ஆட்சி மொழியாகவும், 400 மில்லியன் மக்களின் பேச்சு மொழியாகவும் உள்ளது. அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் அரபுக்கு இருக்கையும் உள்ளது. இத்தனை மக்கள் பேசும் அரபு மொழியில் வளமான இலக்கியங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இதேபோல் தரமான நம் தமிழ் இலக்கியங்களும் பரந்துபட்ட அரபுக்குச் செல்ல வேண்டியது அவசியம் எனப்பட்டது. அதனால்தான் மொழிபெயர்ப்பில் எனது பார்வையைத் திருப்பினேன்.

தமிழக அரசுக்காக, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் மேற்பார்வையில் திருக்குறளை அரபு மொழிக்கு கடந்த 2013-ம் ஆண்டு மொழிபெயர்த்தேன். அது ஒன்றரை ஆண்டுகாலம் உழைப்பில் சாத்தியப்பட்டது. அதை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். 2015-ல் சவுதியில் அரபுக் கவிஞர்கள் மாநாடு நடந்தது. அதில் திருக்குறளை அரபு மொழியில் வாசித்தேன். சவுதி அரேபியாவில் அரங்கேற்றப்பட்ட முதல் தமிழ் இலக்கியம் திருக்குறள்தான். அந்த மாநாட்டிலேயே, இதை ஆய்வுசெய்த அரபுக் கவிஞர்கள், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான, இத்தனை செறிவுடைய திருக்குறள் இவ்வளவு தாமதமாக அரபுக்கு வந்துள்ளதே என ஆதங்கப்பட்டனர்.

அரபு மொழியில் இருந்து தமிழுக்கு வந்திருக்கும் 
 ‘கிறுக்கி’
அரபு மொழியில் இருந்து தமிழுக்கு வந்திருக்கும் ‘கிறுக்கி’

நேரடி மொழிபெயர்ப்பு

தொடர்ந்து ஆத்திசூடியையும் அரபுக்கு மொழிபெயர்த்தேன். திருக்குறள் உள்ளிட்ட சில புத்தகங்கள் இதற்கு முன்பும் அரபுக்குச் சென்றுள்ளன. ஆனால் அவை, நேரடியான மொழிபெயர்ப்புகள் இல்லை. தமிழில் இருந்து ஆங்கிலம், உருது என சென்று அங்கிருந்து அரபுக்குச் சென்ற தழுவல்கள். முதல்முறையாக நேரடியாக நான் மேற்கொண்ட மொழிபெயர்ப்புகள் மூலத்தன்மையை சிதைக்காமல் சென்றன. அந்தப் பணியைச் செம்மையாகச் செய்ததில் எனக்கு மிகுந்த மனநிறைவு கிடைத்தது.

அதேபோல் திருக்குரான், நபிகள் நாயகம் பொன்மொழிகள் (ஹதீஸ்) ஆகியவைதான் அரபு மொழியில் இருந்து இதுவரை தமிழுக்கு வந்தவை. அடர்த்தியான இலக்கியங்கள் வரவில்லை. எனவே, சிரியா நாட்டு தலைசிறந்த கவிஞர் நிசார் கப்பானி, இஹசான் அப்துல் குத்தூஸ் ஆகியோரின் நூல்களையும் தமிழாக்கம் செய்துள்ளேன். இதில் குத்தூஸின் சிறுகதைத் தொகுப்பு அரபு மொழியில் இருந்து தமிழுக்கு, ‘கிறுக்கி’ எனும் பெயரில் காலச்சுவடு பதிப்பகத்தில் இந்த ஜனவரியில் வெளியானது.

தமிழின் வீச்சு

திருக்குறளை அரபு மொழியில் ஒலி வடிவில் கொண்டுசென்று பின்னணிக் குரலும் கொடுத்தேன். அது ஆறரை மணி நேரம் ஓடக்கூடியது. ஆத்திசூடியையும் இசை ஆல்பம் வடிவில் அரபு மொழிக்குக் கொண்டு சென்றேன். இதேபோல், கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய ‘மரணம் என்னும் அழகு’ என்னும் கவிதையையும் இசை வடிவில் அரபு மொழியில் வெளியிட்டிருக்கிறேன்” என்கிறார் ஜாகிர் ஹுசைன்.

இதுமட்டுமில்லாமல் ஈரோடு தமிழன்பன் எழுதிய ‘கனா காணும் வினாக்கள்’, ‘இன்னும் சில வினாக்கள்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் அரபு மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார் இவர். அது, 2021-ம் ஆண்டு சார்ஜா உலகப் புத்தகக் கண்காட்சியில் வெளியானது. அரபு மொழியில் தமிழில் இருந்து சென்ற முதல் புதுக்கவிதைத் தொகுப்பும் இதுதான்.

“தமிழ் மொழியின் வீச்சை அரபு நாடுகளில் பிரமிப்புடன் பார்க்கின்றனர். இவ்வளவு தத்துவார்த்தமாக இருக்கிறதே என ஆச்சர்யப்படுகின்றனர்” எனப் பெருமிதத்துடன் சொல்லும் ஜாகிர் ஹுசைன், ‘விஸ்வரூபம்’ படத்தில் கமல்ஹாசனின் அரபு மொழி வசனங்களையும் மெருகூட்டியவர்.

நுட்பமாக உள்வாங்கிய உலக நாயகன்

அதுபற்றியும் நம்மிடம் பேசிய ஜாகிர் ஹுசைன், “கமல் சார் ‘விஸ்வரூபம்’ படத்தில் சில இடங்களில் அரபு வசனங்கள் தேவை எனச் சொன்னார். நானும் என் உதவியாளர்களும் அவருக்கு உறுதுணையாய் நின்றோம். கமலைப் பொறுத்தவரை எதையும் நுட்பமாகச் செய்யவேண்டும் என எதிர்பார்ப்பவர். ஒவ்வொன்றுக்கும் தகுதியான ஆட்கள் இருக்க வேண்டும் என்பது அவரது எண்ணம்.

அரபு வசன உச்சரிப்பையும்கூட வெகுவிரைவாகவே புரிந்துகொண்டார். படத்தில் மற்ற நடிகர்களுக்கு அரபு சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு முன்னேறினார். அதிலும், ‘சினிமா மொழியில் சொல்றேன் ஜாகிர்... அப்போ ஈசியா புரிஞ்சுப்பாங்க’ என அவரே இறங்கி சொல்லிக்கொடுத்தார். அந்தப் படத்தில் ஒரு திருப்புமுனை வசனம் வரும். கமல் முட்டி போட்டு நிறுத்தப்பட்டிருப்பார். எதிரிகள் அவரை அடிப்பார்கள். கைகள் கட்டப்பட்டு இருக்கும். ‘என்னை ஏதாவது செய்றதுக்கு முன்னாடி என்னை ப்ரேயர் பண்ண விடுங்க’ என்பார் கமல். அப்போ ‘ரப்பனா ஆதினா’ எனத் தொடங்கும் வசனத்தைப் பேசுவார். அது முடிந்ததும் சண்டை, ‘எவனென்று நினைத்தாய்?’ பாடல் அப்போதுதான் வரும். முஸ்லிம்கள் பிரார்த்தனை, தொழுகை என மார்க்க வழிபாட்டின்போது பயன்படுத்தும் வார்த்தை அது. அதனால் அதை மிகவும் பக்குவமாகக் கையாண்டார் கமல். மத உணர்வுகளைத் தவறாக உச்சரித்து புண்படுத்திவிடக் கூடாது என்பதற்காக அந்த வசனத்தை சிரத்தை எடுத்து உள்வாங்கியும், மனனம் செய்து அதிக கவனம் செலுத்தினார்.

கமல்ஹாசனுடன் ஜாகிர் ஹுசைன்
கமல்ஹாசனுடன் ஜாகிர் ஹுசைன்

கடைசியில் டப்பிங்கின்போது என்னைக் காட்டி, ‘குடலை உருவி எடுத்துட்டாரு’ என மனம்திறந்து பாராட்டினார். இதேபோல் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்திலும் அரபு வசனங்கள் நான்தான் எழுதினேன். நடிகர்களுக்குப் பேசக் கற்றுக்கொடுக்கவும் செய்தேன். எனது தமிழ் ஆல்பங்களுக்கு தாஜ் நூர் இசையமைத்துள்ளார். அடுத்ததாக நம் தமிழன்னைக்குப் புகழ் சூட்டும் வகையில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக் காணொலி உருவாக்கத்திலும், பாரதியார் பாடல்களை அரபு மொழிக்குக் கொண்டு செல்லும் முனைப்பிலும் ஈடுபட்டிருக்கிறேன்” என்றார்.

அன்னைத் தமிழின் பெருமை, அரபு நாடுகளிலும் ஒலிக்கக் காரணமான ஜாகிர் ஹுசைனின் அனைத்து முயற்சிகளும் வெற்றிபெற வாழ்த்துவோம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in