காமிக்ஸ் வடிவில் ‘பொன்னியின் செல்வன்’: கறுப்பு - வெள்ளையில் ஒரு காவியம்!

காமிக்ஸ் வடிவில் ‘பொன்னியின் செல்வன்’: கறுப்பு - வெள்ளையில் ஒரு காவியம்!

தொன்மையான வரலாற்றுக்குச் சொந்தமானவர்கள் தமிழர்கள். அரசர்களின் வரலாறு தொடங்கி அடித்தட்டு மக்களின் வரலாறு வரை எதை நாம் தேடுகிறோமோ அது தமிழ் இலக்கியங்களின் வழியே இன்று நமக்குக் கிடைத்துவிடுகிறது. அந்த வகையில், ஆகப்பெரும் வளர்ச்சியும் வீழ்ச்சியும் மீட்சியும் பெற்ற சோழர்களின் வரலாற்றை அறிந்துகொள்ள, சங்க இலக்கியங்களும் பக்தி இலக்கியங்கள் என்று அறியப்படும், பன்னிரு திருமுறைகளும் நமக்கு உதவுகின்றன. இலக்கியங்களின் உண்மைத்தன்மையை அறிய உரைகற்களாக இருப்பவை கல்வெட்டுக்களும் செப்பேடுகளும்தான். இவை தவிர நாணயங்கள், கோயில் சிற்பங்கள், அகழ்வாராச்சியில் கிடைக்கப்பெறும் பொருட்கள் என ஏராளமான சான்றுகள் வரலாற்றைத் துல்லியமாக அறிய உதவியிருக்கின்றன.

இத்தகைய சான்றுகளுடன் சோழர்களின் அசுர மீட்சியின் தொடக்கப்புள்ளியை கல்கி கிருஷ்ணமூர்த்தி, ‘பொன்னியின் செல்வன்’ என்ற படைப்பின் வழியாக பதிவுசெய்து கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. இவருடைய இந்த வரலாற்றுப் புதினம் பிற்காலங்களில் சுருக்கமான கதையாகவும் சித்திரக்கதைகளாகவும் வானொலியில் சிறுபகுதிகளாக ஒலிச்சித்திரமாகவும் மேடை நாடகமாகவும் மக்களிடையே அறிமுகமாகி இருக்கின்றன. 70 ஆண்டுகளுக்குப் பிறகும் மக்களின் மனதுக்கு நெருக்கமான வரலாற்றுக் கதையாக இருக்கும் 'பொன்னியின் செல்வன்’ இன்றைக்குத் திரைப்படமாகவும் வெளியாகியிருக்கிறது.

அணையாத் தீப்பொறியாக கனன்றிருந்த சோழர் பரம்பரை, உலகெங்கும் வெளிச்சத்தைப் பரப்பத் தொடங்கியது, கி.பி.9 -ம் நூற்றாண்டில் இருந்துதான். அந்தக் கனலில் சிறுபொறியை மனதில் தாங்கியவன் பொன்னியின் செல்வன் என்ற இராஜராஜ சோழன். அவன் இராஜராஜன் ஆவதற்கு முன் நிகழ்ந்த சம்பவங்களே கல்கி எழுதிய புதினத்தின் அடிநாதம்.

மாபெரும் ராஜ்ஜியம் உடனே உருவாகிவிடுமா? போர், இழப்புகள், சூழ்ச்சி, தியாகம், துரோகம், நட்பு என எல்லாம் கடந்து உருவாவதுதானே? சோழ ராஜ்ஜியம் உருவாவதன் பின்னணியில் யார் யார் துணையிருந்தார்கள், யார் துரோகிகளாக இருந்தார்கள் என்பதை சுவாரசியமாகக் கதைவழியே சொல்லியிருப்பார் கல்கி. பல்வேறு நிறங்களைக் கொண்ட கதைமாந்தர்கள், நன்மைக்கும் தீமைக்கு நடுவில் நடக்கும் அவர்களின் உணர்வுப் போராட்டங்கள், அரசர்களுக்காக சாமானியர்கள் செய்யும் அர்ப்பணிப்புகள், தீர்க்கமான நெஞ்சம் கொண்ட மனிதர்கள், சலனப்படும் மனிதர்கள் என பல்வேறு நிறங்களைப் ‘பொன்னியில் செல்வ’னில் காணலாம். எதிர்மறையான கதைமாந்தர்கள் மீது கோபப்படும் அதே நேரத்தில் அவர்கள் மீது இரக்கமும் ஏற்படலாம்.

கல்கியின் இந்தப் புதினத்தைப் படிக்கும்போது நம் அகக்கண்ணுக்குள் விரியும் கற்பனை அலாதியானது. அந்த உலகத்தில் அந்தக் கதைமாந்தர்களுக்கு மிக அருகில் நின்று அவர்களை நாம் பார்க்கலாம்; அவர்கள் பேசுவதைக் கேட்கலாம். நுட்பமான மனித மனதின் உணர்வுகளைக் கல்கி பதிவாக்கியிருப்பார். உணர்வுபூர்வமான மனிதர்களையும் பொன்னிநதி பாயும் ஊரையும் கடல்சூழ் இலங்கைத் தீவையும் தன் எழுத்தால் கல்கி வர்ணித்தார் எனில், ஓவியர் மணியம் தன் ஓவியங்களால் உயிரோட்டமாக அவற்றை வடித்திருப்பார்.

ஓவியர் ப.தங்கம்
ஓவியர் ப.தங்கம்

இருவரின் தாக்கமும் பல தமிழ் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தியது எனில் அது மிகையில்லை. அந்த வகையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஓவியரும் புகைப்படக் கலைஞருமாகப் பணியாற்றிய ஓவியர் ப.தங்கம் ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தை பத்துத் தொகுதி சித்திரக்கதைகளாகப் படைத்துள்ளார். தினத்தந்தி நாளிதழில் ‘கன்னித்தீவு’ சித்திரத் தொடர்கதைக்கு வரைந்த பெருமைக்குரிய ஓவியரான தங்கம், என்றும் எந்தத் தலைமுறையினரையும் ஈர்க்கும் இந்தப் புதினத்தை, குழந்தைகள் முதல் பெரியவர் வரை எளிதில் படிக்கும் வகையில் பதிவுசெய்திருக்கிறார்.

கதையின் தொடர்ச்சி குலையாமல், எந்த முக்கியக் கதைமாந்தரும் விடுபடாமல் 1,085 பக்கங்களில், 10 பாகங்களாக பொன்னியின் செல்வனை மீளுருவாக்கம் செய்திருக்கிறார். தன்னுடைய ஓவியங்களும் ஓவியர் மணியத்தின் தாக்கத்தால் உருவானவை என்கிறார். தன் மனதிற்கு மிகநெருக்கமான வரலாற்றுப் படைப்பை அவர் அடுத்த தலைமுறைக்குக் கடத்தியிருக்கிறார். குழந்தைகளும் வளரிளம் பருவத்தினரும் அவருடைய இந்தப் படைப்பை, எளிதில் வாசித்து மகிழலாம்.

அடர்த்தியான கோடுகளும், இருண்மையும் கலந்து அவர் உருவாக்கியிருக்கும் ஓவியங்கள் நம் மனத்திரையில் இயல்பாக ஒரு சலனச் சித்திரத்தை உருவாக்குகின்றன. ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் குறித்து ஆர்வமும் விவாதமும் எழுந்திருக்கும் இந்த நேரத்தில், அக்கதையை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த ஓவியர் தங்கத்தின் இந்தப் படைப்பு சரியான தேர்வு. குறிப்பாக, ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியாகியிருக்கும் இந்தச் சமயத்தில், பலர் கல்கியின் படைப்பைப் படிக்காதவர்களாக இருக்கிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிமையாக ‘பொன்னியின் செல்வ’னைப் புரிந்துகொள்ள இந்தச் சித்திரக்கதை நிச்சயம் உதவும்.


கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ சித்திரக்கதை

ஓவியர் ப.தங்கம்

தங்கப்பதுமை பதிப்பகம்

ஞானம் நகர் 6-வது தெரு

மெயின் ரோடு

மாரியம்மன் கோயில் அஞ்சல்

தஞ்சாவூர் - 613501

தொடர்பு எண்: 9159582467

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in