நிழற்சாலை

நிழற்சாலை

மழை மனது

சாளரக் கண்ணாடியில்

அங்கொன்றும் இங்கொன்றுமாய்

துளிர்த்திருக்கும் துளிகளை

ஒன்று சேர்க்கிறேன்

விரல் நுனி கொண்டு

வெளியே பெய்யும்

மழையின் ஓசைக்குள்

ஒருவித நிசப்தம்

நினைவுகளுக்கு

கதவுகள் முளைக்கின்றன

திறக்கச் சொல்லி...


- மகேஷ் சிபி

பாரம்

தூசு தட்டி

பாரம் குறைக்க

கீழே இறக்கப்பட்டாலும்

மீண்டும் நினைவுகளின்

பாரத்தோடுதான்

பரணில்

ஏற்றப்படுகிறது

பழைய பெட்டி.

- கி.ரவிக்குமார்

வானவில்

வானவில்லை

இரையென நினைத்து

குஞ்சுகளுக்காய்

விரித்த சிறகுகள் மீது

வேடன் விட்ட கல்லடியில்

அடுத்தொரு வண்ணமாய்

காற்றில் தோய்ந்தது

வெண்புறாவின்

செங்குருதி.

- கருவை ந.ஸ்டாலின்

நியாயவிலை

இலவச வேட்டி

இட்லித் துணிக்கென்றும்

ஜன்னல் திரைக்கே

சேலையென்றும்

காரில் வந்து

வாங்கிப்போனார்கள்

வெகுநேரம் வரிசையில் நின்று

குடும்ப அட்டையோடு

ஆதார் எண் இணைக்கவில்லையென

விரட்டப்பட்டு

மாற்றிக்கட்ட உடுப்பில்லாத

பாட்டியின் நைந்த சேலை

ஆங்காங்கே

கிழிந்து தொங்குகிறது

அரசு எந்திரத்தில் சிக்கி.

- காசாவயல் கண்ணன்

கவனம்

பண்டிகை நெரிசலில்

ஊருக்குச் செல்லும்

பேருந்துப் பயணத்தில்

அலைபேசியில் மனைவியோடு

பேசும் அம்மனிதன்

அவ்வப்போது

தொட்டுப் பார்த்துக்கொள்கிறான்

சட்டைப்பையை

எதிர்பார்ப்புடன்

காத்திருக்கும்

மகளின் கைகளை

நினைவில் இறுகப் பற்றியபடி!

-ந.சிவநேசன்

உயிர்ப்பு

ஓட்டையான குடம்

உடைந்த ப்ளாஸ்டிக் வாளி

வீணான சிமென்ட் சாக்கு

தக்காளிப் பெட்டியென

கழிவுப் பொருட்களில்தான்

மண் நிரப்புகிறேன்...

அரிசி கழுவு நீர்,

காய்கறி, டீத்தூள், முட்டை

கழிவுகளைத்தான்

மண்மேல் கொட்டுகிறேன்...

அழகழகாய் பூக்கவும்

புதிதுபுதிதாய்க் காய்க்கவும்

தவறுவதில்லை தொட்டிச்செடி.

- வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

கரிசனம்

அடிக்கடி

அறுபடும்

அப்பாவின்

செருப்பை

ஏழாவது முறையாக

தைக்கக் கொடுக்கிறேன்

நான்

அணிந்திருந்த

புதுச் செருப்பை

உற்றுப் பார்த்தபடி

சில வார்த்தைகளையும்

ஊசியில் கோர்க்கிறார்

செருப்பு தைக்கும்

அந்தத் தந்தை.

- ச.சக்தி

அடையாளம்


சிட்டுக்குருவிக்கு

அமர்தலே போதும்

பருந்திற்குத்தான்

சிறகை விரித்துக்காட்ட

வேண்டியிருக்கிறது!


- ரகுநாத் வ

பாஞ்சாலி மனைவி

திரெளபதி வேடம் கட்டிய

கணவனின் மாற்றுடையாக

லுங்கியும் சொக்காயும்

வைத்துக்கொண்டு

மணல்துகளின்

பரப்பில்

காத்திருக்கிறாள்

மனைவி

மனதில் புரளும்

வார்த்தைகளைச் சலித்தபடி!

-கமலா பார்த்தசாரதி

அன்பின் வண்ணம்

வெட்டப்பட்ட மரக்கிளையில்

உட்கார்ந்து சென்றது

ஒரு பட்டாம்பூச்சி

பின்னொரு பொழுதில்

துளிர்விடத் தொடங்கிய

இலைகளில்

ஒளிர்கின்றது

வண்ணத்துப் பூச்சியின்

நிறம்.


- கி.சரஸ்வதி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in