நிழற்சாலை

நிழற்சாலை

பார்வையற்றவனின் பாடல்

பாதையினை விலக்கும் கைமணியோசை

தேவைப்படவில்லை

அடிக்கடி குலுக்கியும் நிறைபடவில்லை

உண்டியலின் கண்

சில்லறை சத்தமிடாததால்

சுதிசுத்தமாகவே ஒலிக்கிறது

‘பொன்மகள் வந்தாள்’ பாடல்

பெருஞ்சத்தங்களால்

நிறைந்துள்ள கடலில்

அப்பாடல் துளையிட்ட

கோப்பை நீராய் ஒழுகுகிறது

கடைசிவரை வரவே இல்லை

பொருள் கோடி!

- ரகுநாத் வ

பிணைப்பு


அந்திக் கருக்கலில்

திசைமறவாமல்

கூடு திரும்புகிறது பறவை

எத்தனை விரட்டினாலும்

மீன் தொட்டியையே சுற்றி வருகிறது பூனை

அழுகையைத் தந்தாலும்

நினைவில் நிற்கிறது

ஏதேனுமொரு அன்பு

வரமோ சாபமோ

மழைக்காலத்தில்

உதித்துவிடுகிறது

ஒரு கவிதை.

- ந.சிவநேசன்

தாய்மை

பள்ளி சுற்றுலாப் பயணம்

இரையைக் கவ்வியபடி

கூடுநோக்கிப் பறந்த பறவையின்

சிறகசைப்பில் அம்மாவின் சாயல்

இரண்டாம் நாளுக்கான

புளியோதரையில் வீசியது

அம்மாவின் வாசனை.

- தஞ்சை சதீஷ்

மந்தைப் பசி

கொட்டும் மழை

கூரைவீட்டின் பின்புறம்

ஊன்றிய நான்கு கம்புகளின்

நடுவில் தொய்வலாக கட்டப்பட்ட

பிளக்ஸ் பேனருக்குள்ளிருந்து

ஓயாமல் ஒலிக்கின்றன

பசிக்குரல்கள்

‘நாளைக்கு வானம் என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்

பேசாம படுங்க’

தண்ணீரை மட்டும்

அருந்தியவன்

சொன்ன வார்த்தைகளில்

பசியாறிக்கிடக்கின்றன

ஆடுகள்.

- நேசன் மகதி

அம்மா

பள்ளிப்பேருந்துவிட்டு

இறங்கியவுடன்

பட்டாம்பூச்சியாய் பறந்து

கழற்றாத சாக்சுடனே வீட்டுக்குள் ஓடி

கிடைக்கும் திட்டுக்களைக்

காற்றில் தொலைத்தபடி

பசியாயிருக்கும் என

பொம்மையை

உயிர்த்தெழச் செய்கையில் புதிதாய்

பிறக்கிறாள் ஒரு அம்மா!

- ஆனந்தகுமார்

நிறைவு

ஊர் எல்லையில் வீற்றிருந்த

மதுரைவீரனுக்குப் படையலிட்டு

பூசை முடித்து

கிளம்பினர் பங்காளிகள்

காய்ந்துபோன

படையல் சாப்பாட்டை

எங்கிருந்தோ வந்த

மனநலம் பிறழ்ந்த மனிதன்

சாப்பிட்டு முடித்தான்

இப்போதுதான்

ஏப்பம் வந்தது

மதுரைவீரனுக்கு!

- கமலக்கண்ணன்.இரா

பக்தி

கோயில் சுவரில் திருநீற்றைப் பூசி

தூண்களில் குங்குமத்தைத் தடவி

சுற்றுப் பாதைகளில் பழத் தோல்களைப் போட்டு

ஆங்காங்கே கற்பூரம் ஏற்றி

கையிலிருக்கும் காகிதங்களை எங்கும் வீசி

கருவறையின் பின்புறத்தில் தேர்வு எண்கள் எழுதிவைத்து

எல்லாம் செய்யும் பக்தகோடிகள்தான்

மிகத் திருத்தமாக

சந்தனம் இட்டுக்கொள்கிறார்கள்

‘உபயம்’ என்றெழுதப்பட்ட கண்ணாடியைப் பார்த்து.

- கி.சரஸ்வதி

பிரார்த்தனை

சாலையோரத்துக் கடவுள்களுக்கெல்லாம்

நொடி நேர

பிரார்த்தனைகளைச் செலுத்தியபடி

சஞ்சலத்துடன்

உங்களருகே அமர்ந்திருப்பவனின் மனதில்

இறங்க மறுக்கும் பாரமொன்று

குடியிருக்கலாம்

கண்டுகொள்ளாதீர்கள்

இந்தப் பேருந்தில்

அவனின் செய்கைகளை.

- மகேஷ் சிபி

மழைக்கண்

ஊர் குளத்தைப்

பெருக்கிய மழைகளைத்தான்

அதிகமாக ஞாபகம் வைத்திருந்தார் தாத்தா

ஐப்பசி கார்த்திகையில்

குளத்தைப் பெருக்கிய

மழைகளைவிட

கோடைகளில் பெய்து

பெருக்கிய மழைகளை

இன்னும் ஞாபகம் வைத்திருந்தார்

துல்லியமாக

கீழக்குளம் பெருகி

கானாக்குளம் பெருகி

வாகைக்குளத்திற்கு நீர் வந்து

மட்டம் தட்டி போகும் என்று

ஊரில் இருக்கும் ஒரு குளம்

பெருகும் வழியையும் சொல்வார்

மலைக்காட்டில்

அழுது தீர்க்கும் மழை

நதிகளைக்கூட

வெள்ளக்காடுகளாக்கி விடுகிறது

எவ்வளவு அழுதாலும் மழையால்

கடலை மட்டும் பெருக்கிவிட முடியவில்லை

தெய்வத்திருவாகிவிட்ட

தாத்தாவை நினைக்கையில்

கண்ணீரால்

பெருக்கிவிட முடிகிறது கடலையும்.

- மு.ஆறுமுகவிக்னேஷ்

பார்வையாளன்

சுவரின் மீது ஓடிக்கொண்டிருந்த

இரண்டு அணில்கள்

கீழிறங்கி

சில நிமிடங்களாயிற்று

ஒன்று சாலையை

கடந்தும்

இன்னொன்று அதன்

எதிர்திசையிலும்

சென்றுவிட்டன

இப்போது

சுவரின் இந்தப் பக்கமும்

அந்தப் பக்கமும்

என் இரண்டு கண்கள்.

- ச.ஜெய்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in