நிழற்சாலை

நிழற்சாலை

பருகும் இசை


தீண்டுதலில் பனிச்சில்லுகள்

கசிந்துருகி மழைச்சாரலென

மனசை நனைக்கும்

வருகையை நிரப்பித் தரும் காற்றலைகள்

நான் கண்மூடி

உணரும் வானவில்

மனதைத் துளையிடுகிற வேய்ங்குழல்

ஆர்ப்பரித்து ஆட்கொள்ள

ஆகமத் தாமரையாய் நான்

இடைவிடாது திசுக்களில் வசந்தம் சுரந்து

எனைப் பருகிக்கொண்டேயிருக்கிறது இசை!

- ஆனந்தகுமார்

மரணக் குறிப்புகள்

மரணம் எனும் தூது

பாக்கெட்டின் பக்கத்து அறையில்

இதயமாக வட்டமடிக்கும்

வட்டத்தின் துடிப்பு நிற்கையில்

அடங்கிவிடுகிறது வாழ்வு

மரணத்திற்கு

வாக்கு கிடையாது

எப்போது வேண்டுமானாலும்

வரும்

ஆனால் வாக்கு தப்பாது.


மரணம் எப்போதும்

பாக்கெட்டில் இருக்கும்

ஒரு ரூபாய் நாணயம்.


மரித்ததும்

நெற்றிக்கு

தானாய்

இடம்பெயரும்.


- வீரசோழன் க.சோ. திருமாவளவன்

பறிகொடுத்தல்

பள்ளிக்காலமெல்லாம்

ஒன்றாகப் படித்து

ஊரையே உலகமாகச் சுற்றி

புழுதிகளோடு திரிந்து

பின்னாளில் அவரவர் சூழலில்

அறுபட்டுப் போய்

மீண்டும் தொடர்புக்குள் வந்து

இரு வாரங்களுக்கு முன்

தொடர்பெல்லைக்குள் நுழைந்த

பால்ய காலத்து நட்பின் முகம்

அஞ்சலிக் குறிப்புகளில் இடம்பிடித்ததன் வலி

பிள்ளைப் பிராய நினைவுகளையும் பீடிக்கிறது

சேர்த்தே பறிகொடுத்திருக்கலாம்

இணைந்து எடுத்த

செல்ஃபி சிரிப்புகளையும்.

- தெ.சு. கவுதமன்

உயிர்ப் பொம்மைகள்

வாலாட்டியபடி ஓடிவந்து

குப்பைக் குவியலில்

உணவைத் தேடி ஏமாந்த நாய்க்குட்டி

கைவிடப்பட்ட பொம்மையொன்றைக் கவ்வியபடி

விளையாட்டுப் பயில்கிறது

பசி மறந்து

பிஞ்சுக் கரங்களின் மென்தொடுகை

இழந்திருந்த பொம்மைக்கு

குட்டி நாயின் பற்களும் நகங்களும் தரும்

கீறல்கள் தான் ஆறுதல்

இப்போது!

- கி.சரஸ்வதி

காத்திருத்தல்


ஒரே நோக்காய்

உனை அடையாளம் வைத்து

நடந்துகொண்டிருக்கும்

எனது கால்கள்

ஒவ்வொரு எட்டிலும்

குண்டப் பள்ளத்தை மிதித்துத்தான்

முன்னேறுகின்றன

நீ நிற்கும்

சூடற்ற கரை

இவன்

சூடனைப் போல் கரைந்துருகிடுவான்

மூடன் மூடனென

மூளும் ஆத்திரத்தை

அலட்சியம் செய்துவிட்டு

அவசியம் காத்திரு

கால்சியம் குறைந்து வளையும்

எலும்புகளாக

காலமும் வளையும்.

- தசாமி

வேண்டுதல்கள்


விடுதியில் படிக்கும் மாணவர்களுக்கு

என்னென்ன

வேண்டுமென

பட்டியலிடச் சொன்னார் ஆசிரியர்

எல்லா பட்டியலிலும் நிரம்பி வழிகிறார்கள்

அப்பாவும் அம்மாவும்!


- மு.முபாரக்

உருமாற்றம்


பேருந்தின் முகப்புக் கண்ணாடியில் தூறல் விழுந்ததும்

சாளரங்கள் சில

வேகமாய் மூடப்படுகின்றன

திறக்கப்படும் சில சாளரங்களிலிருந்து

வெளியே நீளுகின்றன கரங்கள்

பரஸ்பரம் தீண்டலுக்குப் பின்

உற்சாகமடையும் தூறல்

மழைக்கு மாறுகிறது.


- மகேஷ் சிபி

பிழைத்திருத்தல்


தார்ச் சாலையில்

வட்டமாயிருந்த

தெரு விளக்கின் வெளிச்சத்தில்

மனைவியின்

தோளில் சாய்ந்திருக்கும் குழந்தை

கண்களைக் கசக்கியவாறு

பசிக்கிறது என்கிறாள்

உடம்பெங்கும் தேடிப் பார்த்தேன்

விட்டு விட்டுக் கிடைத்தது சில்லறை

தண்ணீரை வெறுக்கும்

தோசைக்கல்லில்

காம்பஸ் இல்லாமல்

வரையப்பட்டது

வட்ட தோசை

அதைப் பாயாகச் சுருட்டி

தலையணையாய் குழம்பும்

பாலிதீன் பையில்

குடிபுகுந்தன

முப்பது ரூபாயை

கைமாற்றியதும்

பொட்டலம் சொந்தமானது

ஆயுளை நீட்டித்தோம்.


- மு தனஞ்செழியன்

வலி

இழைத்து இழைத்துக்

கட்டிய வீட்டின்

அழகை பிரமித்துப் புகழ்கிறார்கள்

வலிக்கிறது விற்பவனுக்கு.

-ந.சிவநேசன்

நிலையாமை

ஓட்டலில் உணவு பரிமாறும்போது

ஒவ்வொரு

மேசையின் முன்பும்

திருக்குறள் சொல்கிறார்

பெருந்தொற்றுக் காலத்தில்

வேலையிழந்த

தமிழாசிரியர்.

- காசாவயல் கண்ணன்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in