கோடைக்காலக் குறிப்பு
அடித்த வெயிலின் மயக்கத்தில்
அசையாமல் நிற்கின்றன மரங்கள்
நனைதலை
ரசிக்க முடியவில்லை
வழிந்தோடுகிறது வியர்வை
சூரியன் மறைந்தாலும்
வெயில் நீடிக்கவே செய்கிறது
இரவென்பதே
வெயிலின் நிழல்தான் போல.
- சாமி கிரிஷ்
இலக்கு
ஒற்றைக்காலில்
தவமிருக்கும்
நீள்வாயனின்
விழிகளில்
எஞ்ஞான்றும்
அசையாமலிருக்கிறது
ஒரு வெள்ளை மீனின்
பிம்பம்!
- ரகுநாத் வ
காகித வனம்
பேத்தி வரைந்த பூனை
புலியானதால் அதன் பசிக்கு
அவசர அவசரமாய்
மானொன்றை வரைகிறேன்.
புலியும் மானும் வந்த கணத்தில்
மலைகளும் மரங்களும்
சூழ்ந்த அடர்
வனமாகிக்கொண்டிருக்கிறது
கண்முன்னே காகிதம்.
- பாரியன்பன் நாகராஜன்
வெளி
கதவைத் திறந்ததும்
சாலைக்கு
ஓடிவிடுகிறாளென
எந்நேரமும் சாத்தியே
கிடக்கும்
கதவின் சுவரின் ஓரம்
கோடு கிழித்து
பிஞ்சுப் பாதங்களால்
உள்ளே வெளியே
குதிப்பவள் முணுமுணுக்கிறாள்
உள்ளே பூமியாம்
வெளியே வானமாம்.
-ந.சிவநேசன்
ஒளிக் கோலம்
சிறு சிறு
சரவிளக்குகளைத் தாங்கி
ஒளி வீசுகிறது
மஞ்சள் கொன்றை
அணில்களின் காதல் விளையாட்டில்
உதிர்கின்றன குளிர்ந்த தீபச்சுடர்கள்
விடியற்காலையில் கதவைத் திறந்த சிறுமி
பூக்கோலம் கண்டு
சிரித்து நிற்க
புகைப்படம் எடுக்கத்தொடங்குகிறது
முதல் ஒளி!
- கி.சரஸ்வதி
பிழைத்தல்
சீவிய நுங்கில்
சிராய்ப்புகளும்
சிந்தும் இளம் நீரும்
புங்கன் இலையில்
படர்ந்து
விற்பனைக்கு
தயாராகிறது.
பேரம் பேசி
ஒண்ணுபோடு
என்பதிலேயே
விற்பனைக்காரியின்
மனதோரம் சிராய்ப்புகள்.
மீந்து கிடக்கும்
கழிவு நுங்குகளை
நெகிழியில்
சேர்க்கிறாள்
கத்தி வீச்சத்தின்
சிறு பிசகல்
கணக்கோடு.
- சூர்யமித்திரன்