நிழற்சாலை

நிழற்சாலை

மனசு

ஏமாற்றிவிடலாமென

கிழிந்திருந்த

பத்து ரூபாய் தாளை

மடித்து கொடுத்து

டீக்கடை அக்காவிடம்

ஒரு டீ சொன்னேன்

தாளை விரித்துப் பார்த்து

“என்ன தம்பி எங்க ஏமாந்தீங்க?”

என்று சொல்லிவிட்டு

அந்த அக்கா

போட்டுக் கொடுத்த

டீ சுருக்கென சுட்டது

உதட்டையும் மனதையும்!

- யுவராஜ் மாரிமுத்து

ஜீவன்

நெருக்கடியான

சாலையில் அவரவர்க்கான

அவசரத்தில் விரையும்

வாகனங்களைக்

கட்டுப்படுத்துகிறது

ஒரு நிமிடம்

சாலையைக் கடக்கும்

நாய்க்குட்டியொன்று.

- ஹரணி

பாரம்

தலை ஆட்டியபடி

அவன் கூறிய பொய்களுக்கும்

சின்னதொரு உண்மைக்கும்

உறுதுணையாகிறது

பூம்பூம் காளை

பாவம்

அனைத்தையும் கேட்டுக்கொண்டு

பாரத்தை இறக்கி வைக்கிறது

ஒரு படி அரிசியில்

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பெண்மனம்.

- சே கார்கவி

கட்டுப்பறவை

காற்றின் திசையில்

பறந்துவந்த இறகொன்று

தொட்டிச் செடியில்

அமர்ந்து பின் ஜன்னல் உரசி

கூடத்தில் விழுந்து

தோளில் வந்தமர்ந்த மறுநொடி

சுழன்றடித்த காற்றினூடாக

மீண்டும் பறக்கலாயிற்று

ஒரு பறவையின் பிரதியாக.

- சுகுமாறன்.சி

அகலாச் சுமை

எடைமேடையில் நின்றபோது

அகற்ற முடியவில்லை

மனச்சுமைகளை.

- கா.ந.கல்யாணசுந்தரம்

வழியனுப்புதல்

மரத்திலிருந்து

ஓய்வு பெறுகிறது

ஓர் இலை

நிலம் வரை சென்று

பிரிவு உபசாரம்

செய்கிறது காற்று!

-நேசன் மகதி

தேவை நீட்டிப்பு

மேசை தோறும் நின்று

உணவுப் பட்டியலை

ஒப்பித்தபடியே இருக்கிறார்

அந்த முதியவர்

மூளை நரம்புகளில்

இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கும்

பசி நிரப்பிகளின்

பெயர்களில் சோர்வுறுகையில்

வீட்டின் உப்பு பருப்பு புளி இதர தேவைகளின் வரிசை

வந்து நினைவூட்டிச் செல்கிறது

பணியில் நீடிப்பதன் அவசியத்தை.

- கி.சரஸ்வதி

ஓலம்

விரும்பி வளர்த்த மரத்தை

வெட்டிச் செய்த கதவை

மூடித் திறக்கும்போதெல்லாம்

வரும் சத்தம்

மரத்தின் துயரமாகவே கேட்கிறது!

- மு.முபாரக்

பலூன்

நேர்த்திக் கடன்களையெல்லாம்

தின்றுவிட்டு

நகராமல் நிற்கிறது

உண்டியல்.

சிறுமியின் காற்றை

மட்டும் குடித்துவிட்டு

பறந்துவிடுகிறார்

கடவுள்!

-ரகுநாத் வ

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in