நிழற்சாலை

நிழற்சாலை
Updated on
1 min read

முடிவின் தொடக்கம்

பூ

பழம்

தேங்காய்

வேட்டி சட்டை

தலைக்கறி படையலோடு

குவாட்டர் பாட்டில்

வைக்கும் வரை

அம்மா அழவில்லை

அப்பாவின் திவசத்தில்.

-ந.சிவநேசன்

இரவை எழுதும் நிலா


எப்படியும் பார்த்துவிடும்

ஆவலில் குழந்தைகள்

வராமலா போய்விடும் நிலா

அறிவியல் சோதனையில் வான்

இரண்டிற்கும் இடையில்

தாயும் பூமியும்


யாரை வெல்ல

யார் சொல்லை

இரவுகள் இயற்றுகின்றன


தாயின் ஏமாற்றுதலுக்கே

தலை கோதிவிட

தயாராகவே வந்துவிடுகிறது

வானில் வட்டமடிக்கும்

நிலா.

- வீரசோழன்.க.சாே திருமாவளவன்

மலரும் முட்கள்

வைராக்கியங்களை

ஒளித்துவைக்க வேண்டியதாயிருக்கிறது...

சண்டைக்காரனின் குழந்தை

புன்னகைக்கும்போது!

-மு.முபாரக்

இறைவி

தினம் தினம்

வழிபட முடியாத

கடவுளைக் கொண்ட அப்பனுக்கு

ஒரு செம்பில் நீர் தந்து

அருள்பாலித்து அனுப்புகிறாள் மகள்.


- சே.கார்கவி

காணிக்கை

அய்யனார்

கழுத்திலிருக்கும்

பூமாலையில்

தேனுறிஞ்சும்

வண்ணத்துப்பூச்சி

அரிவாளுக்கு

முத்தமிட்டுச்

செல்கிறது!

- ரகுநாத் வ

கூடடைதல்

வசந்தத்தின் தொடக்கத்தில்

கொல்லைப்புறத்திற்கு விருந்தாளியாய் வந்த

சிறு கீற்று வெயிலுடன் பேசியபடி இருந்தபோது

காற்றில் வந்து மெல்லென இறங்கியது ஓர் இறகு

வெயிலுக்கு விடை சொல்லி வீட்டிற்குள் வந்ததும்

கூடவே எடுத்துவந்த இறகிற்குக் கூட்டின் தேடல்

அதைச் சேர்ப்பிக்கும் வழியெனப்

பறவையை வரையத் தொடங்குகிறேன்

படபடக்கும் தாள்களின் சத்தத்தினுடே சிறகடித்தபடி

வந்தமர்கிறது அந்தச்

செம்போத்துக் குருவி

- கி.சரஸ்வதி

வாட்ஸ்-அப் அருளும் வரம்

முன்பு போல் இல்லை

எங்களால் நினைத்த நேரத்தில்

பேசிக்கொள்ள முடியும்

முத்தமிட வழி இருக்கிறது

கொஞ்சிக் குலாவிட செவ்வக பூமி

ஜன்னல் வைத்திருக்கிறது

படுத்தபடியே பார்க்க

ஓரம் கவிழ்ந்தபடியே சிரிக்க

ஒருவர் பார்க்க ஒருவர் தூங்க

என எல்லாமும் நிகழ்த்த

வாய்த்திருக்கிறோம்

முகம் ஏந்தி விழி நோக்கி

காதோரம் ரகசியம் பேசவும்

வழி உண்டு

ஒளி வழியே நுழைந்து

உடல் சேரும் நாளுக்கு மட்டும்தான்

காத்திருப்பு

அதுவும் நிகழும்

வாட்ஸ்-அப் கடவுள் ஆசீர்வதிக்கிறார்

அதுவரை

வயதாகாமல் இருக்கத்தான்

நம் வேண்டுதலும்!

- கவிஜி

முகம்

பிறந்ததிலிருந்து

அம்மாவிற்குப் பிடிக்கவில்லை அவனை

குடிகார அப்பாவின் முகம் அவனுக்கு

அண்ணனுக்குப் பிடிக்கவில்லை படிக்க வைக்காத

ஊதாரி அப்பாவின் முகம் அவனுக்கு

அக்காவிற்குப் பிடிக்கவில்லை

இன்று வரை திருமண செய்விக்காத

அப்பாவின் முகம் அவனுக்கு

பாட்டிக்கு மட்டும் பிடித்தது

அவளுடைய மகன் முகம் அவனுக்கு...

- ச.மணிவண்ணன்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in