
வரம்
கோயிலைச் சுற்றிச் சுற்றி
கிடைக்காத வரமொன்றை
சோர்ந்து அமர்கையில்
தந்துவிடுகிறது
புன்னகைத்தபடி
தாயின் மடியில்
அமர்ந்திருக்கும் குழந்தை!
- மு.முபாரக்
ஜீவிதம்
ஒருபோதும்
வெட்டப்படாமல்
பசுமையாகவே இருக்கின்றன
சுவரோவியத்தில் மரங்கள்!
- அ.வேளாங்கண்ணி
நேசன்
இரு கை விரித்தபடி
காற்றை எதிர்கொள்ளும்
வேளைகளிலெல்லாம்
பிரபஞ்சத்தை எனக்குள்
அடக்கும் முயற்சி செய்வேன்
அல்லது பிரபஞ்சமாகிக்கொண்டிருப்பேன்
அடுத்த முறை கவனியுங்கள்.
- மகேஷ் சிபி
ஆத்ம திருப்தி
மொட்டை மாடியில் காயும்
கோதுமையை
சிந்தாமல் அள்ளிவரப்
பணித்தாள் மனைவி
திட்டினாலும்
பரவாயில்லை என
சிந்தியதை அள்ளாமல்
கிளம்பினேன்
முதுகுக்குப் பின்னால்
பசியோடு காத்திருக்கும்
குருவியொன்று
சிதறிக்கிடக்கும்
சிற்றுண்டியைக் கொத்தித் தின்று
குஞ்சுகளுக்கும்
கொண்டுசேர்க்கும் என்ற
திருப்தியோடு.
- காசாவயல் கண்ணன்
மாற்ற வினைகளின் நியதி
அவசரத்துக்கு
விடுப்பு கேட்ட நாளில்தான்
சரியாக மேலதிகாரி ஆடிட்டிங் வருகிறார்.
நீண்ட நாள் சுற்றுலா கனவு
விருந்தினர் வருகையால் மீண்டும்
நினைவறைக்குள் போகிறது.
போனஸ் தொகை கிடைத்த மாதத்தில்தான்
மகள் பெயர் தெரியா வைரஸால் வாதையுறுகிறாள்
எல்லா மாற்றவினைகளும் ஏமாற்றங்களால்
ஆனதில்லைதானே நண்பா...
காய்ந்துவிட்டதாக
பிடுங்கியெறிய நினைத்த நாளில்
துளிர்விட்டிருக்கிறது
பூச்செடி.
-ந.சிவநேசன்
நட்சத்திரப் பூக்கள்
பன்னீர் மரங்கள் உதிர்த்த
வால் நட்சத்திரங்களைச்
சேகரிக்கிறாள்
கிளிகள் படபடக்கும் பாவாடையணிந்த
சிறுமியொருத்தி.
வாசம் மிக வீடு சேரும் அவள்
இரவில் உலகம் கண்டு ரசிக்க வேண்டி
அவற்றை வானத்தில்
ஒட்டிவிடுவதற்கென விரைந்து
முடிக்கத் தொடங்குகிறாள்
வீட்டுப் பாடங்களை.
-கி.சரஸ்வதி
விதிமுரண்
பிளாட்பாரத்தில்
கொசுக்கடியோடு
அன்னை மடியில் சுருண்டிருக்கிறாள்
ஒரு சிறுமி...
யாருமற்றிருக்கும்
உயர்வகுப்பு
காத்திருப்பறையில்
பளிச்சிடுகிறது
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!'
- ரகுநாத் வ
சொற்களற்றவர்கள்
தெருவொன்றைக் கடந்து போகையில்
வீடொன்றின் வெளிச்சுவற்றில்
கைபேசி வாயிலாக ஒருவர்
அன்பின் மகிழ்வோடு
எதிர் முனையில் யாருடனோ
பேசிக்கொண்டிருக்கிறார்
காணொலி அழைப்பில்.
அவ்வளவு பக்கத்தில் அவரிடம் போய்
நின்றுமேகூட
அவர்களின் பேச்சொலி மட்டும்
எனக்குக் கேட்கவேயில்லை.
ஒலியைக்கூட மவுனமாக உச்சரிக்கிறவர்கள்
இப்போதெல்லாம் தொலைதூரத்தில் இருக்கும்
நட்புறவோடு உரையாடி மகிழ்கிறார்கள்
ஒலியற்றவற்றவர்களின் உலகில்
சொற்கள் மிகப் பிரகாசமாக
ஒளிர்ந்துகொண்டிருக்கின்றன கைபேசிகளில்
அருகில் இருக்கும் மனிதர்களைத்தான்
இப்போது தூரமாகவே வைத்திருக்கிறது
இன்றைய உலகம்.
- சுரேஷ்சூர்யா