நிழற்சாலை

நிழற்சாலை

பூக்களால் புன்னகைக்கும் பூமி


வாகைமரம் நிழல் பரப்பிப்

பூத்துக் குலுங்கும்

இந்த ஆளரவமற்ற சாலையில்

ஒவ்வொரு பூவும் உதிர்வதென்பது

எரியும் ஏப்ரல் வெயில்

கழுத்துவரை வியர்வையாய்க் குடியேறிய

குப்பை பொறுக்குவளை

ஆசிர்வதிப்பதாகப் படுகிறதெனக்கு...

-பிறைநிலா

ஒப்பந்தம்

உனக்கு என் மீதும்

எனக்கு உன் மீதும்

ஒருபோதும்

வரப்போவதில்லை காதல்

பேசாமல் கணவன்

மனைவியாகவே தொடர்வோம்.

- செ.ராமு

உறுத்தல் விலங்கு

கம்பிச் சட்டகங்களுக்குள்ளேயே

நின்றுவிடுகின்றன

வளர்ப்புப் பிராணிகளின்

ஏக்கங்கள்

நேரெதிர்

கண்ணிமைத்தல்களில்தான்

உறுத்தல் விலங்காகிவிடுகிறது

அடைபட்டுக்கிடக்கும்

அக விலங்கு!

- ரகுநாத் வ

குடி பெயரும் வனம்

அறுபடுவதற்குத் தயாராகிவிட்ட

மரத்திடமும்

ஒரு கணக்கு இருக்கிறது


முந்தின நாளில்

அதிகம் இலை உதிர்த்து கூட்டுப்பறவையிடம்

காலி செய்யச் சொல்லி

செய்கிறது சமிக்ஞை


மறுநாளில் லாரியில் ஏற்றிச் செல்லும்

வழியெங்கும் சிந்துகிறது

ஒரு சிட்டிகை வனம்


பட்டையுரித்து

தோல் செதுக்கி

தயாராகிறது

மேற்கூரையின் விட்டம்


பத்திரமாய் வீட்டுக்குள் ஏற்றப்பட்ட நாளொன்றில்

அழைத்துக் கொள்கிறது

அப்பறவையை

அதன் குஞ்சுகளை

ஒரு கூட்டை

கொஞ்சம் வனத்தை.

-ந.சிவநேசன்

பிழைப்பு

பிரியாணிக்கடை

வாசலில்

பழைய சோறு

காவலாளியின்

தூக்குவாளி.


- இரட்டைக்கரடு மு.இளங்கோவன்

தேடப்படும் கடவுள்


இறந்த அப்பா

சாமியிடம் போய்விட்டதாய்

சொல்லி ஆறுதல்படுத்தி

வைத்திருக்கிறேன்

மகளிடம்

கோயிலுக்குப் போகும்போதெல்லாம்

தேடிக்கொண்டிருக்கிறாள்

தாத்தாவை.

- மு.முபாரக்

உறையும் சித்திரங்கள்

பலூன்

கைக்கடிகாரம்

புதுத் துணியென

விருப்பங்களை

மனதில்

ஏந்தி நிற்கிறாள்

அந்தச் சிறுமி

அப்பாவின் வருகைக்காக

அவனின் கரமோ

மதுக்கோப்பையைச் சுமந்தபடி!

- கா.கவிப்ரியா

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in